Ad

ஞாயிறு, 30 ஜூலை, 2023

முதல்வரிடம் புகாரளித்த திமுக கவுன்சிலர்கள்; கிலியில் அமைச்சர் மஸ்தான் - இது திண்டிவனம் திகுதிகு!

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் இருந்துவருகிறார். திண்டிவனம், செஞ்சி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதிகள் இவரது மாவட்ட எல்லைகளாக இருக்கின்றன. இம்முறை அமைச்சரான மஸ்தான் மீது, பல்வேறு எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர் அந்த மாவட்ட உடன்பிறப்புகள். ஆனால், கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது,  மாற்றுக்கட்சியிலிருந்து புதியதாக தி.மு.க-வுக்கு வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது, தனது ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை வழங்கியது உள்ளிட்ட காரணங்கள் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தத் தொடங்கின. இவை, மரக்காணம் ஒன்றிய உள்ளாட்சித் தேர்தல், திண்டிவனம் நகர்மன்றத் தேர்தலின்போது உட்கட்சிப்பூசலாக எதிரொலித்தது.

அமைச்சர் மஸ்தானிடம் வாக்குவாதம் செய்த தி.மு.க நிர்வாகிகள்

இதற்கிடையே, கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து, நகரமன்றக் கூட்டத்திலிருந்து 13 தி.மு.க அதிருப்தி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததும், அவர்கள் கே.என்.நேருவைச் சந்தித்துப் புகார் வாசித்ததும் கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், கடந்த 24-ம் தேதி அமைச்சர் மஸ்தான் முன்னிலையில், திண்டிவனத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில், 'திண்டிவனம் நகர தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்' நடைபெற்றது. அப்போது, 'பொறுத்தது போதும் பொங்கியெழு' எனும் தொனியில், தங்களது ஆதங்கங்களை வெளிப்படையாகக் கொட்டித் தீர்த்த கழக நிர்வாகிகள், "தி.மு.க என்ன உங்க கட்சியா?" என்றெல்லாம் மஸ்தானை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். அமைச்சர்மீது கழக நிர்வாகிகளிடையே இருந்த அதிருப்தி, அந்தக் கூட்டத்தில் பலமாக வெடித்தது.

இது குறித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணைச்செயலாளர் டி.கே.பி.ரமேஷிடம் பேசினோம். "எல்லோரிடமும் இணக்கமாகப் பழகக்கூடியவர் என்றுதான், கழக நிர்வாகிகள் எல்லோரும் மஸ்தான் அவர்களை மாவட்டச் செயலாளராக ஏற்றுக்கொண்டோம். அது காலப்போக்கில் விஷமாகிவிட்டது. அவர் யாருக்கும் எதுவும் செய்வதில்லை, சுயநலமாகத்தான் பார்க்கிறார். பழைய கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு பொறுப்புகூட இருக்கக் கூடாதென நினைக்கிறார். தனக்கும், தன் வாரிசுக்கும் போட்டியாக வந்துவிடக் கூடாதென பழைய நிர்வாகிகளை அழிக்க நினைக்கிறார். ஆனால், தனக்கு துதிபாடுபவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கு மட்டும் இரண்டுக்கும் மேற்பட்ட கட்சி பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார். இவற்றை பழைய கட்சிக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

டி.கே.பி.ரமேஷ்

நம் கட்சி (தி.மு.க) ஆட்சிக்கு வந்தால், நாமும் அங்கீகரிக்கப்படுவோம் என்றுதான், தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த காலங்களிலும் கட்சிக்காக கஷ்டப்பட்டோம். ஆனால், அவரது ஆதரவாளர்களைத் தவிர மற்ற நிர்வாகிகளை மாற்றாந்தாய் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறார். கொரோனா காலத்தில் கட்சிக்காக 1 ரூபாய்கூட செலவு செய்யாத கண்ணன் இன்று திண்டிவனம் நகரச் செயலாளராகவும், நிர்மலா ரவிச்சந்திரன் சேர்மனாகவும் இருக்கின்றனர். சி.வி.சண்முகம், மருத்துவர் ராமதாஸ் வசிக்கும் இந்த திண்டிவனம் பகுதியில்... அவர்களை எதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்களை நகரச் செயலாளராக போட்டிருக்க வேண்டும். ஆனால், 78 வயதான ஆசிரியர் கண்ணனை ஒரு பொம்மையாக அந்தப் பொறுப்பில் அமர்த்தியிருக்கிறார் அமைச்சர் மஸ்தான்.

இவரும், இவருடைய மகனும் அரசுப் பிரதிநிதியாக, கட்சி பொறுப்புகளிலும் இருக்கலாம்... நாங்களெல்லாம் மேலே வரணும் என நினைக்கக் கூடாதா! செஞ்சி நகர்மன்றத் தலைவராக இருக்கும் அமைச்சரின் மகனான மொக்தியாரின் பெயரை மாவட்டம் முழுவதும் கட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாகப் போடுகிறார்கள். அதேபோல், திண்டிவனம் நகரத்தையே கெடுத்து வைத்தது அமைச்சரின் மருமகன் ரிஸ்வான்தான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக வேலை செய்துவிட்டு, மாற்றுக்கட்சியிலிருந்து அண்மையில் தி.மு.க-வுக்கு வந்த சந்திரன்தான், ரிஸ்வானின் ஏஜென்டாக திண்டிவனத்தில் செயல்படுகிறார். அவர் சொல்படிதான் நகராட்சியே செயல்படுகிறது. இப்போது கட்சிக்கு வந்த அவருக்கு, விளையாட்டு மேம்பாட்டு அணியில் மாவட்ட அமைப்பாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கட்சிக்காரர்கள் யாருக்கும் இங்கு உரிய மதிப்பில்லை, புறக்கணிப்பு செய்யப்படுகிறோம். கவுன்சிலர்களுக்கு டெண்டர்களை முறையாகப் பிரித்துக் கொடுக்காமல், அ.தி.மு.க ஒப்பந்ததாரர்களுக்கே தருகிறார்கள். தி.மு.க ஒப்பந்ததாரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். திண்டிவனத்தில் 70% கழக தோழர்கள், இப்போது அமைச்சர் மஸ்தான் மீது அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். இவை அனைத்தும்தான் அன்றைய கூட்டத்தில் எதிரொலித்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் - செஞ்சி மஸ்தான்

நாங்களெல்லாம் அரசியலில் அநாதை ஆகக் கூடாதென தலைமையும், சின்னவரும் எங்களை ஆதரிக்கின்றனர். ஆனால், 'உன்னால் என்ன பண்ண முடியுமோ, பண்ணிக்கோ' என்கிறார் அமைச்சர் மஸ்தான். நாடாளுமன்றத் தேர்தல் வேறு வருகிறது. எனவே, இத்தகு பாகுபாடுகளைக் களைந்து, பாரபட்சமின்றி, எல்லோரையும் ஒருங்கிணைத்து அமைச்சர் செயல்பட வேண்டும்" என்றார் ஆதங்கமாக.

இந்த நிலையில், அதிருப்தியின் உச்சத்துக்கே சென்ற திண்டிவனம் நகர தி.மு.க கவுன்சிலர்கள் சுமார் 13 பேர், கடந்த 29.07.2023 காலையிலேயே அறிவாலயத்துக்கு படையெடுத்திருக்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினை வழியிலும், உதயநிதியை நேரிலும் சந்தித்துப் புகார் வாசித்ததோடு, மனுவும் அளித்திருக்கிறார்களாம். தலைமையிலும் 'இது குறித்து விசாரிக்கிறேன்' என்று கூறி அனுப்பியிருக்கின்றனராம்.

முதலமைச்சர் மற்றும் உதயநிதியை சந்தித்த திண்டிவனம் திமுக-வினர்.

இது குறித்து அமைச்சர் மஸ்தானிடம் விளக்கம் கேட்க அழைத்தோம். "நான் ஓர் இயக்கத்தில் இருக்கும் நபர் என்பதால், இயக்கத்தின் நெளிவு சுளிவுகளைப் பார்க்க வேண்டும். கட்டுப்பாடுடன் கட்சியைக் கட்டிக்காக்க வேண்டும். ஒரு சிலர் சிறுபிள்ளைத்தனமாக தவறுகள் செய்திருந்தாலும், மறப்போம் மன்னிப்போம் என்று செயல்படும் நபர்நான். விவரமாக நான் நேரில் பதில் கூறுகிறேன்" என்று முடித்துக்கொண்டார்.

அவர் மேலும் பதிலளிக்கும் பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராகயிருக்கிறோம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/as-internal-conflict-in-tindivanam-dmk-increased-dmk-councilors-met-the-chief-minister-and-lodged-a-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக