Ad

ஞாயிறு, 23 ஜூலை, 2023

`இந்தியா' , `என்.டி.ஏ'... எந்த அணியில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் முக்கியக் கட்சிகள்?!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதெல்லாம் கடினம் என பேசப்பட்டு வந்த நிலையெல்லாம் மாறி, பாட்னா மற்றும் பெங்களூருவில் கூட்டம் நடத்தி. “இந்தியா” என கூட்டணிக்கு பெயர் வைத்து விறுவிறுப்பாக அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறி வருகின்றன எதிர்க்கட்சிகள். மறுபுறம் ஆளும் தரப்பும் தங்களுடன் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து டெல்லியில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி - ‘இந்தியா’ அணி

தென் தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும், அ.தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் முறையே இந்திய மற்றும் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கின்றன. கர்நாடாகவிலும், புதுச்சேரியிலும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம்தான், கேரளாவில் பலமாக உள்ள கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸும் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள். இவ்வாறு கூட்டணி அஸ்திரங்களில் தென் மாநிலங்கள் ஆக்டிவ்வாக இருக்கும் சமயத்தில் ஆந்திராவும் தெலங்கானாவும் மட்டும் சத்தமின்றி அரசியல் செய்துவருகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

இதில் தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதியும் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை சந்திரசேகர் ராவ் தலைமையில் பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருக்கிறது. பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கு எதிரிகள் என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறார் சந்திரசேகர் ராவ்.

எதிருமாக புதிருமாக இருக்கக்கூடிய மாநில அரசியல்தான் இதற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. பாரத் ராஷ்டிர சமிதி பொறுத்தவரை இந்தியா மற்றும் என்.டி.ஏ கூட்டணிக்கு அவர் செல்வதற்கான எந்த சமிஞ்கைகளும் தென்படவில்லை.

சந்திரசேகர் ராவ்

பாரத் ராஷ்டிர சமிதியை பின்னுக்குத்தள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறது பா.ஜ.க. அந்தபக்கம் காங்கிரஸோ பாரத் ராஷ்டிர சமிதியின் முக்கிய தலைவர்கள் தன்பக்கம் இழுத்து சந்திர சேகர் ராவின் பெரும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. ஆகவே இந்தியா மற்றும் என்.டி.ஏ என இருக் கூட்டணியும் அவரது கூட்டாளி ஆவது தற்போது நீடிக்கும் சூழலில் கடினம்தான்.

ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரையில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சியாக சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலங்கு தேசக் கட்சி உள்ளது.

பிரதமர் மோடி - ஜெகன் மோகன் ரெட்டி

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து 2011-இல் கட்சி தொடங்கிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பொறுத்தவரையில் தற்போது பா.ஜ.க-வுடன் ஆட்சி ரீதியாக சண்டையிட்டுக் கொள்ளாமல் இருந்தாலும் தேர்தல் ரீதியாக இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் இல்லை என்பதே கள நிலவரம்.

இதன் சான்றாக, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசை பா.ஜ.க கடுமையாக விமர்சித்து வருவதும், டெல்லியில் நடந்த என்.டி.ஏ கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாததையும், நான் ஒருபோதும் தேர்தலுக்காக பாஜகவை சார்ந்திருப்பதில்லை என ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் பேசியிருப்பதை குறிப்பிடலாம்.

சந்திரபாபு நாயுடு

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “தெலுங்கு தேசம் கட்சியை பொறுத்தவரை பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்குள் வரும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்துகொண்டிருப்பதாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திரபாபு நாயுடு சந்தித்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதேசமயம் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை என்.டி.ஏ கூட்டணியில் இணைத்துக் கொள்ள பா.ஜ.க யாராக இருந்தாலும், மாநிலத் தேர்தலும் வரவிருக்கும் நிலையில் பா.ஜ.க கூட்டணியில் இணைவது சரியாக இருக்குமா... என்ற பேச்சும் கட்சி வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. என்ன செய்யப்போகிறார் சந்திரபாபு நாயுடு என்பதே தேசிய அரசியலின் ஹாட் டாப்பிக்

சந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவைப் பொறுத்தவரை மாநிலத் தேர்தலும் 2024-இல் வர இருப்பதால் மாநிலத் தேர்தலையே பிரதானமாக மாநிலக் கட்சிகள் கருதுகிறார்கள். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்திய கூட்டணிகளுக்குள் செல்வது கடினம் என்றே கூறப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு பிறகான கூட்டணி அல்லது ஆதரவு என்கிற நிலைப்பாட்டில் தான் ஆந்திர கட்சிகள் இருப்பதை காண முடிகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/india-or-nda-what-will-be-the-choice-of-andhra-and-telanganas-political-parties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக