Ad

திங்கள், 17 ஜூலை, 2023

`ஒரே தொகுதி... 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ’ - கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி காலமானார்

கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன்சாண்டி இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். ஏற்கனவே அவருக்கு கேன்சர் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்து வந்தன. எனினும் அவருக்கு குடும்பத்தினர் சரியாக சிகிச்சை அளிக்காமல், பிரார்த்தனை மட்டும் செய்வதாக குற்றச்சாட்டு எல்லாம் எழுந்தது.

உம்மன் சாண்டி சிகிச்சையில் இருந்தபோது

இந்த நிலையில் கேரள அரசு மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தலையிட்டு, உம்மன்சாண்டிக்கு திருவனந்தபுரத்திலும் அதனைத்தொடர்ந்து பெங்களூரில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வந்த உம்மன்சாண்டி, அடிக்கடி பெங்களூரு மருத்துவமனையில் உடல்நிலை பரிசோதனைக்காக சென்றுவந்தார். இந்த நிலையில் பெங்களூரு சின்மயா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்ற உம்மன்சாண்டி, இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். இந்த தகவலை உம்மன் சாண்டியின் மகன் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.

புதுப்பள்ளி கே.ஓ.சாண்டி - பேபி சாண்டி தம்பதியினருக்கு 1943-ம் ஆண்டு அக்டோபர் 31-ம்.தேதி கோட்டயம், குமரகத்தில் பிறந்தார் உம்மன் சாண்டி. பள்ளி படிக்கும்போதே மாணவர் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார். 1962-ல் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு-வின் கோட்டயம் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். 1965-ல் மாநில செயலாளராகவும், 1967-ல் கே.எஸ்.யு மாநில தலைவராகவும் பதவி வகித்தார். 1969-ல் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1970-ல் தனது 27-ம் வயதில் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். சி.பி.எம் கோட்டையான புதுப்பள்ளியில் எம்.எல்.ஏ-வாக இருந்த இ.எம்.ஜார்ஜ் என்பவரை தோற்கடித்ததால் உம்மன்சாண்டி மீதான மதிப்பு தொண்டர்களுக்கு இன்னும் அதிகரித்தது. புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார் உம்மன் சாண்டி. அதனால் திருவனந்தபுரத்தில் கட்டிய வீட்டுக்கு 'புதுப்பள்ளி' என பெயர் வைத்திருக்கிறார்.

உம்மன் சாண்டியுடன் அவரது மகன் சாண்டி உம்மன்

1977-ல் கருணாகரன் முதல்வராக இருந்த சமயத்தில், தொழில்த்துறை அமைச்சராக இருந்தார் உம்மன்சாண்டி. 1982-ல் உள்துறை அமைச்சராகவும், 1991-ல் நிதித்துறை அமைச்சராகவும் இருந்தார். 2004-ல் ஏ.கே.ஆன்றணி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கேரள முதல்வரானார் உம்மன் சாண்டி. 2006 முதல் 2011-வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 2011-ல் மீண்டும் முதல்வர் ஆனார். உம்மன் சாண்டியின் மனைவி மரியாம்மா உம்மன் ஆலப்புழாவைச் சேர்ந்தவர். 79 வயதில் மரணமடைந்த உம்மன் சாண்டியின் உடல் பெங்களூரில் இருந்து கேரளா கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-former-cm-oommen-chandy-passed-away

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக