Ad

சனி, 11 மார்ச், 2023

ஈரோடு: இளைஞர்மீது ஆசிட் வீசிய இளம்பெண்; திருமணம் மீறிய உறவு தகராறில் வெறிச்செயல்!

ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் மகன் கார்த்தி (26). இவர் பெருந்துறையிலுள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்காரப் பெண் (திருமணமானவர்) ஒருவருடன் கார்த்திக்குத் தவறான பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

கார்த்திக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட திருமணம் மீறிய உறவால் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்திருக்கின்றனர். இந்த நிலையில், கார்த்தி வேறொரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதும் அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று மாலை தன்னை சந்திக்க வந்த கார்த்தியிடம், ``என்னைக் காதலிப்பதாகக் கூறிவிட்டு ஏமாற்றுகிறாயா?" எனக் கேட்டு அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

கார்த்தி

அதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமுற்ற அந்தப் பெண், தான் மறைத்து வைத்திருந்த கழிவறைக்குப் பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து கார்த்தியின் முகத்திலும், உடலிலும் படும்படி பாட்டிலுடன் வீசியிருக்கிறார். ஆசிட் பட்டதில் முகம், உடல் பகுதிகளில் காயமடைந்த கார்த்தி எரிச்சலால் அலறியபடி சத்தம் போட்டிருக்கிறார். அக்கம் பக்கத்தினர் கார்த்தியை மீட்டு, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்ட பின், மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து பவானி போலீஸார் வழக்கு பதிவுசெய்து, அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர்.



source https://www.vikatan.com/crime/accident-thrown-at-the-youngster-in-erode-and-police-investigation-goes-on

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக