Ad

திங்கள், 13 மார்ச், 2023

"லண்டனிலிருந்து இந்திய ஜனநாயகத்தின் மீது கேள்வி எழுப்பப்படுவது துரதிர்ஷ்டவசமானது"- ராகுலை சாடிய மோடி

ராகுல் காந்தி அண்மையில் லண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது இந்தியாவை ஆளும் பா.ஜ.க அரசு குறித்து பல்வேறு விமர்சனங்களை குற்றச்சாட்டுகளாக முன்வைத்து உரையாற்றினார். அதற்கு பா.ஜ.க-வினர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகா சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில் களமிறங்கிவிட்டன. தேர்தல் ஆணையமும் கர்நாடகா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகமான ஒலி கவுடா சமூக மக்கள் அதிகம் வாழும் மாண்டியாவில் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்.

மோடி

அப்போது பேசிய பிரதமர் மோடி," காங்கிரஸ் பகவான் பசவேஸ்வராவையும், கர்நாடக மக்களையும், இந்திய மக்களையும் அவமதிக்கிறார்கள். கர்நாடகம் அத்தகையவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் என்றும் நாம் கூறலாம். இந்த ஜனநாயக அமைப்பை முழு உலகமும் படிக்கிறது.

நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்த எந்த சக்தியும் இல்லை. ஆனால் இருந்தபோதிலும் இந்திய ஜனநாயகத்தை தாக்க சிலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். லண்டன் மண்ணில் இருந்து இந்திய ஜனநாயகத்தின் மீது கேள்விகள் எழுப்பப்படுவது துரதிர்ஷ்டவசமானது" எனத் தெரிவித்திருக்கிறார்.

ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் ஊடகங்கள் மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா (Pawan Khera) , "நாட்டின் இமேஜைப் பற்றி கவலைப்படாமல், கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை என மூன்று தலைமுறைகளை நீங்கள் தான் அவமதித்திருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு உங்களின் சிவப்புக் கண்களைக் காட்டும்போதும், வெளிநாட்டு ஊடகங்களை பழிவாங்க சோதனையிடும்போதும், நாட்டின் இமேஜைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லையே.

பவன் கேரா

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் முன் ஜனநாயகத்திற்கான சவால்கள் விவாதிக்கப்பட்டது. நீங்கள் ஜனநாயகத்தை தாக்குகிறீர்கள். அதனால்தான் அது பற்றி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் முன் ஜனநாயகத்திற்கான சவால்கள் விவாதிக்கப்படுகிறதென்றால், அது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முயற்சி. உங்களைப் பற்றி உங்களுக்கு சில அதீத நம்பிக்கைகள் உள்ளன. நீங்கள் பிரதமர்தானே தவிர, கடவுளோ, படைத்தவரோ அல்ல. உங்கள் கொள்கைகளை விமர்சிப்பது எப்போது நாட்டின் மீதான விமர்சனமாக மாறியது? நீங்கள் இந்த நாட்டை நிர்வகிக்கும் ஒரு பிரதமர் அவ்வளவு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" எனப் பதிலளித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/congress-reply-to-modis-attack-on-rahul-gandhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக