Ad

வெள்ளி, 31 மார்ச், 2023

GT v CSK: கெய்க்வாட்டின் அதிரடியை வீணாக்கிய படு வீக்கான பௌலிங் படை; சென்னையின் சிக்கல் இதுதான்!

ஐ.பி.எல்லில் சென்னை அணியின் பேட்டிங் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி போல. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் நிற்காது ஓடிக்கொண்டிருக்கும். டெத் ஓவரும் பௌலிங்கும் என்பது எடப்பாடி - ஓ.பி.எஸ் மாதிரி. எவ்வளவு முயன்றாலும் அந்தக் கூட்டணி இணையாது. அது இந்த ஐ.பி.எல்லின் முதல் ஆட்டத்திலும் நிரூபணமானது.

கடந்த முறை ஜாம்பவானாய் இருந்துகொண்டு புது டீம் குஜராத்திடம் அடிவாங்கியதால் கடுப்பிலிருந்தார்கள் ரசிகர்கள். இந்த முறை முதல் ஆட்டத்திலேயே ஜெயித்து அந்தக் கடுப்பில் தண்ணீர் ஊற்றி அணைப்பார்கள் எனப் பார்த்தால் மேலும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிப் பற்றியெரிய விட்டிருக்கிறது தோனி அண்ட் கோ.

GT v CSK

மூன்றாண்டுகளுக்கு பிறகான ஹோம் - அவே முறை, இம்பேக்ட் பிளேயர் உட்படப் புதிய விதிமுறைகள், தோனியின் கடைசி சீசன் என ஏகப்பட்ட காரணங்கள் இருந்தன அகமதாபாத்தில் நடந்த இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தைப் பார்க்க! கூட்டம் ஆர்ப்பரிக்க, களத்தில் டாஸுக்கு நுழைந்தார் தோனி. அதிர்ந்து அடங்கியது அரங்கம். கூட்டத்தில் மஞ்சள் சொக்காக்களே அதிகம். சிஷ்யப்பிள்ளை பாண்டியா சகிதம் இந்த சீசனின் முதல் டாஸை அவர் தொடங்கி வைக்க, முடித்து வைத்தார் பாண்டியா. சேஸிங்கிற்குச் சாதகமான பிட்ச்சில் பௌலிங்கைத் தேர்வு செய்தார்.

சும்மாவே பத்து பேர் பேட்டிங் ஆடும்படிதான் டீம் எடுப்பார் தோனி. இதில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையும் இருக்கும்போது சும்மா விடுவாரா... இந்த முறை 11 பேரும் பேட்டிங் ஆடக்கூடியவர்கள். கான்வே, கெய்க்வாட், மொயின், ஸ்டோக்ஸ், ராயுடு, ஜடேஜா, தோனி, தூபே, சான்ட்னர், தீபக் சஹார், அப்புறம் போன சீசன் முழுவதும் பெஞ்சிலேயே அமர்ந்திருந்த ஹங்கர்கேக்கர். குஜராத்தில் கேன் வில்லியம்சன், ரஷித், ஜோஸ் லிட்டில், அல்ஸாரி ஜோசப் ஆகிய வெளிநாட்டு வீரர்களோடு போன சீசனில் ஆடிய அதே உள்ளூர் வீரர்கள்.

பவர்ப்ளே முழுக்க நிதானமாய் ஆடிவிட்டு மிடில் ஓவர்களில் இறங்கி அடிப்பது கெய்க்வாட் - கான்வே இணையின் ஸ்டைல். அதேபோலத்தான் முதல் ஓவரை இரண்டு ரன்களோடு தொடங்கினார்கள். ஆனால் அடுத்த ஓவரிலேயே, 'இதெல்லாம் சரிப்படாது' என பவுண்டரிகள் வெளுத்தார் கெய்க்வாட். பாண்டியாவின் அந்த ஓவரில் மட்டும் 11 ரன்கள்.
GT v CSK

பவர்ப்ளேயில் ஷமியை எதிர்த்து ஆடும்போது நீங்கள் ஸ்டம்ப்பை மறைத்து சுவரே கட்டினாலும் சரி, அதன் தக்களூண்டு விரிசல் வழியே கசியும் நீரைப் போலச் சட்டென ஸ்டம்ப்பைத் தகர்த்துவிடுவார். அடுத்த ஓவரில் கான்வேவுக்கு அதுதான் நடந்தது. போன வருடம் சி.எஸ்.கேவின் நெட் பௌலராக இருந்த ஜோஸ் லிட்டில்தான் இப்போது எதிரணியில். அவரின் முதல் ஐ,பி.எல் பந்தையே ஷார்ட் பைன் லெக் பக்கம் சிக்ஸுக்குத் தூக்கினார் கெய்க்வாட். அடுத்த பந்து பவுண்டரிக்கு. 'வயசுல மூத்தவன் நான் அடிக்கலன்னா நல்லா இருக்காதுல' என மொயினும் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள்.

கான்வேயைப் பந்தாடிய ஷமியை ஐந்தாவது ஓவரில் பழிக்குப் பழி தீர்த்தார் மொயின். 17 ரன்கள். ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் பறப்பதைப் பார்த்து ரஷித் கானைக் கொண்டுவந்தார் பாண்டியா. பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் மொயின் அவுட். எல்லாரும் எதிர்பார்த்த பென் மச்சான் இறங்கும் நேரம். ஆனால் அவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் விரட்டி விரட்டி அடித்துக்கொண்டிருந்தார் கெய்க்வாட். கடைசியில், ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்துவிட்டு நடையைக் கட்டினார் ஸ்டோக்ஸ். உபயம்: ரஷித் தான்.

அல்ஸாரி ஜோசப் வீசிய 9வது ஓவரில் மட்டும் மூன்று சிக்ஸ்கள். 23 பந்துகளில் அரைசதம் கடந்து காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார் கெய்க்வாட். ராயுடு ஒருபக்கம், 'இவர்கள் பந்தை நிஜமாகவே வீசுகிறார்களா இல்லை ஹோலோக்ராமா' என தன் பேட்டில் படாததுக்குக் காரணம் யோசித்துக்கொண்டிருக்க, இந்தப் பக்கம் சிக்ஸ்களை மட்டுமே பறக்கவிட்டுக்கொண்டிருந்தார் கெய்க்வாட். ரன்ரேட்டும் 9க்கு குறையாமலேயே இருந்தது.

GT v CSK
13வது ஓவரில் ஜோஸ் லிட்டில் ராயுடுவின் பரிதாபங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உள்ளே வந்தார் தூபே. பிஸியான பீக் ஹவரில் வாங்கிய டிக்கெட்டைத் தொலைத்துவிட்டுத் தேடும் பஸ் பயணி போல பிட்ச்சில் ரொம்ப நேரம் பந்தைத் தேடியபடியே இருந்தார். இதுவும் கெய்க்வாட்டைப் பாதிக்கவில்லை. `என் வழி தனி வழி' என அவர் புயல் வேகத்தில் மற்றொரு ட்ராக்கில் போய்க்கொண்டிருந்தார்.

18வது ஓவரில் அல்ஸாரி வீசிய ஃபுல் டாஸில் அவுட்டாகி போகும்போது கெய்க்வாட்டின் ஸ்கோர் 50 பந்துகளில் 92 ரன்கள். சென்னையின் ஸ்கோர் 151/5. அதே ஓவரில் ஜடேஜாவும் நடையைக் கட்ட நிகழ்ந்தது தல தரிசனம். கடைசி ஓவரில் ஜோஸ் லிட்டில் ஸ்லாட்டில் வீசிய பந்தை தூக்க்க்க்....கி அடித்தபோது விண்ணைத் தொட்டது கரகோஷம். அவரின் குட்டி கேமியோ புண்ணியத்தில் 179 ரன்களை இலக்காக வைத்தது சென்னை.

GT v CSK

சஹாரின் அற்புதமான முதல் ஓவரில் வெறும் 3 ரன்கள். இரண்டாவது ஓவர் வீச ஐ.பி.எல்லின் முதல் இம்பேக்ட் பிளேயரான துஷார் தேஷ்பாண்டே வந்தார். 15 ரன்கள் விளாசி அவருக்கு பொக்கே கொடுத்தார்கள் பேட்ஸ்மேன்கள். நான்காவது ஓவரில் ஹங்கர்கேக்கர் சாஹாவை பெவிலியனுக்கு அனுப்பி வைக்க, இப்போது குஜராத்தின் இம்பேக்ட் பிளேயர் சாய் சுதர்சன் களத்தில். முதல் இன்னிங்ஸின்போது காயம்பட்ட வில்லியம்சனுக்குப் பதிலாக தன் சொந்த ஊரான சென்னையைப் பெயரில் தாங்கிய அணியாச்சே என்கிற பாவம் கூட பார்க்காமல் பந்தைப் பறக்கவிட்டார். மறுபக்கம் கில்லும் கியர் மாற்றாமல் பயணிக்க பவர்ப்ளே முடிவில் 65 ரன்கள் ஒரு விக்கெட் இழப்பிற்கு.

இந்த இணையை மீண்டும் ஹங்கர்கேக்கர் வந்தே பிரிக்க வேண்டியதாக இருந்தது. சாய் சுதர்சன் நடையைக் கட்டினார். கேப்டன் பாண்டியாவை ஜடேஜா பார்த்துக்கொள்ள, இவ்வளவு களேபரங்களுக்கு நடுவிலும் பவுண்டரி அடிக்கத் தவறவில்லை கில். ஒருவழியாய் 15வது ஓவரில் துஷார் கைவண்ணத்தில் அவர் கிளம்பும்போது அவரின் ஸ்கோர் 36 பந்துகளில் 63 ரன்கள். அணியின் ஸ்கோர் 138/4. அதன்பின் நடந்தது சம்பிரதாயமான சேஸிங்தான். பிரஷர் ஏற்றிக்கொள்ளாமல் கூலாய் ஆடி வெற்றிக்கோட்டைத் தொட்டார்கள் திவேதியாவும் ரஷித் கானும். ஆட்ட நாயகன் ரஷித்தே!

GT v CSK

கோப்பையைக் காத்துக்கொள்ளும் பயணத்தில் குஜராத்திற்கு இதுவொரு நல்ல தொடக்கம். சென்னையின் பௌலிங் வீக்காக இருக்கிறது என்பது தெரிந்ததுதான். ஆனால் எந்தளவிற்கு என்பது இம்பேக்ட் பிளேயர்களுக்காக தோனி கொடுத்த லிஸ்ட்டைப் பார்க்கும்போது தெரிந்தது. பரிச்சயமான அனுபவம் வாய்ந்த பௌலர் என ஒருவர்கூட இல்லை. தீக்‌ஷனா, பதிரானா, மகலா எல்லாரும் இங்கே வந்து தரையிறங்கும்வரை சி.எஸ்.கேவின் பாடு திண்டாட்டம்தான்.

சேப்பாக்கம் மிகச் சாதகமான மைதானமென்பதால் அடுத்த ஆட்டத்தில் அதைப் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்வார்கள். சென்னை சாதிக்குமா?!


source https://sports.vikatan.com/cricket/ipl-2023-ruturaj-gaikwads-heroic-display-in-vain-as-chennai-fails-in-bowling-against-gujarat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக