Ad

வெள்ளி, 17 மார்ச், 2023

`ரூ.10 கோடி கொடுக்காவிட்டால் வீடியோ வெளியாகும்' - பட்னாவிஸ் மனைவியை மிரட்டிய சூதாட்டக்காரரின் மகள்

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதாவிற்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அனிக்‌ஷா என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அனிக்‌ஷா பிரபல கிரிக்கெட் சூதாட்டக்காரர் அனில் ஜெய்சிங்கானியின் மகளாவார். அனில் தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனில் மீதான வழக்குகளை திரும்ப பெறத்தான் அனிக்‌ஷா ரூ.1 கோடியை அம்ருதாவிற்கு லஞ்சமாக கொடுக்க முயன்றுள்ளார். தற்போது அவர் மீது போலீஸார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்து செய்துள்ளனர். அம்ருதா பட்னாவிஸ்ஸிடம் ரூ.10 கோடி கேட்டு அனிக்‌ஷா மிரட்டியுள்ளார். இது குறித்து மிரட்டி பணம் கேட்டதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்ருதா பட்னாவிஸ்

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``அம்ருதா ரூபாய் ஒரு கோடி லஞ்சத்தை வாங்க மறுத்ததோடு அனிக்‌ஷாவின் நம்பரை பிளாக் பண்ணிவிட்டார். ஆனாலும் வேறு வேறு நம்பர்களில் இருந்து தொடர்ச்சியாக அனிக்‌ஷா மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தார். அதில் ரூ.10 கோடி கொடுக்கவேண்டும் என்றும், எனது தந்தையை காப்பாற்றும்படியும், எனது தந்தை உங்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனது தந்தையை பற்றி உங்களுக்கு தெரியாது. ஆனால் எனக்கு தெரியும். ரூ.10 கோடியை கொடுக்காவிட்டால் என்னிடம் இருக்கும் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று கூறி அம்ருதாவிற்கு இரண்டு வீடியோக்களை அனுப்பி இருக்கிறார். அதில் ஒரு வீடியோவில் அனிக்‌ஷா பணத்தை எடுத்து ஒரு பேக்கில் வைப்பது போன்று இருக்கிறது. மற்றொரு வீடியோவில் பணம் இருந்த பேக்குடன் அம்ருதா பட்னாவிஸ் வீட்டிற்கு அனிக்‌ஷா வந்திருப்பது போன்று இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோ ரகசியமாக எடுக்கப்பட்டு இருந்தது. பணம் எடுத்து வைத்த பேக்கும், பட்னாவிஸ் வீட்டிற்கு வரும் போது அனிக்‌ஷா கொண்டு வந்த பேக்கும் ஒன்றுதானா என்று விசாரித்தோம். ஆனால் இரண்டு பேக்கும் சற்று வித்யாசமாக இருந்தது” என்று தெரிவித்தார். தொடர்ந்து அனிக்‌ஷா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 21-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனிக்‌ஷா அம்ருதாவிடம் ஃபேஷன் டிசைனர் என அறிமுகமாகி, நட்பாக பழகி அவரின் வீட்டிற்கு பல மாதங்களாக வந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/crime/if-u-dont-pay-rs-10-crore-i-will-release-the-video-gamblers-daughter-who-threatened-fadnavis-wife

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக