Ad

வெள்ளி, 10 மார்ச், 2023

சரும அழகையும் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும் Skin Fasting...யாரெல்லாம் செய்யலாம்? மருத்துவ விளக்கம்

சில மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதை, நாம் விரதம் என்று சொல்வோம். அதைப்போல, நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பான சருமத்தைப் பராமரிப்பதற்காக சில நாள்கள்- மாதங்கள் வரை சருமத்தில் எந்த அழகுசாதனப் பொருள்களையும் பயன்படுத்தாமல் இருப்பதை சரும விரதம், அதாவது ஸ்கின் ஃபாஸ்டிங் என்று சொல்கிறோம்.

இந்த ஸ்கின் ஃபாஸ்டிங் முறையை யாரெல்லாம் செய்யலாம்... இதன் நன்மைகள், பாதிப்புகள் பற்றி சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரனிடம் பேசினோம்...

சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

``ஸ்கின் ஃபாஸ்டிங் என்பது நமது சருமத்தில் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்களை மெதுவாகக் குறைத்துக்கொண்டு சருமத்தின் இயல்பை மீண்டும் கொண்டுவரும் வரையில் எந்த அழகுசாதனப் பொருள்களையும் பயன்படுத்தாமல் இருப்பது.

பொதுவாகவே நமது சருமத்தில் இயற்கை சுழற்சி (Nature Cycle) நடந்து கொண்டுதான் இருக்கும். Stratum Corneum என்று சொல்லக்கூடிய நமது சருமத்தின் மேலுள்ள லேயரை இறந்த செல்கள் என்று சொல்வார்கள். இந்த செல்கள் சருமத்தில் இருந்து தானாகவே 28 நாள்களில் இறந்து மீண்டும் மறுசுழற்சி செய்து புது செல்களாக உருவாகும்.

சருமத்தின் இறந்த செல்களை அகற்றி, புது செல்களை உருவாக்குவதற்காகவே சீரம், கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இதனை 'ஸ்கின் ஆக்டிவ்ஸ்' என்று சொல்வோம். ஸ்கின் ஆக்டிவ்ஸ் என்பவை ரெட்டினால் ( Retinol ), ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் (Alpha Hydroxy Acid) மற்றும் சாலிசிலிக் ஆசிட் (Salicylic Acid) போன்றவை.. இவை அனைவரும் பொதுவாக உபயோகிப்பவை. இந்த மாதிரி தயாரிப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் சருமத்தின் மேல் லேயர் முழுவதுமாக பாதிக்கப்படக்கூடும்.

skin treatment

சருமத்தைப் பாதுகாக்கும் இயற்கையான பேரியரானது, சருமத்தில் இருந்து அகன்றுவிட்டால் சருமம் சென்சிட்டிவ்வாகவோ, சிவந்தோ, எரிச்சலுடனோ மாறக்கூடும். ஸ்கின் ஆக்டிவ்ஸை பயன்படுத்துவதால் ஸ்கின் பேரியர் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால், ஸ்கின் ஆக்டிவ்ஸை சில நாள்கள் நிறுத்தி வைப்பது நல்லது. எனவே அனைத்து ஸ்கின் ஆக்டிவ் பொருள்களையும் உடனடியாக நிறுத்தாமல் அதிக வீரியமாக (Strong) இருக்கும் ரெட்டினால், DHA, PHA போன்றவற்றை நிறுத்தினாலே போதுமானதுதான்.

சருமத்துக்கு மாய்ஸ்ச்சரைசர், சன்ஸ்கிரீன் போன்றவை அவசியம். ஸ்கின் ஃபாஸ்ட்டிங் செய்யும்போது இவற்றை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, ஸ்கின் ஆக்டிவ்ஸை நிறுத்தி வைக்கலாம். முக்கியமாக, மருத்துவர்கள் பரிந்துரைத்த சருமப் பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்தாமல் இருக்கவே கூடாது. அதிக முகப்பருக்கள் உள்ளவர்கள், எக்ஸிமா (eczema) போன்ற சரும பாதிப்புகள் உள்ளவர்கள் கட்டாயமாக அவற்றை நிறுத்தவே கூடாது. பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பிரச்னை உள்ளவர்களும் மருத்துவர்கள் பரிந்துரைத்த க்ரீம்களை நிறுத்தாமல் இருப்பதே நல்லது.

சரும வறட்சி | மாதிரிப் படம்

மருத்துவ ஆலோசனை பெற்று சருமத்திற்கு ஏற்ற மாதிரியான ஸ்கின் ஃபாஸ்டிங் எடுத்துக் கொள்ளலாம். ஸ்கின் ஃபாஸ்டிங்கை அனைவரும் செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை.

சருமத்தில் எந்த பாதிப்பும் இல்லாதவர்கள், நல்ல தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ஸ்கின் ஃபாஸ்டிங் தேவையில்லை. ஏற்கெனவே பயன்படுத்தும் பொருள்களையே தொடர்ந்து உபயோகிக்கலாம். சருமத்தில் எந்த மாதிரியான அழகு சாதனத்தை உபயோகித்தாலும் சென்சிட்டிவ்வாக உணர்ந்தாலோ அல்லது எரிச்சலாக இருந்தாலோ அவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று ஸ்கின் ஃபாஸ்டிங் மேற்கொள்ளலாம். தோராயமாக, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் அந்தத் தயாரிப்புகளை நிறுத்தி வைக்கலாம்.

லிப் பாம்

ஸ்கின் ஃபாஸ்டிங்கின் போது மேக்கப் ரிமூவல் மிகவும் அவசியம். மைசெல்லர் வாட்டர் (Miceller Water) என்று சொல்லக்கூடிய மேக்கப் ரிமூவரை பயன்படுத்தி மேக்கப்பை அகற்றலாம். பிறகு, இரவு நேரங்களில் மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்திக்கலாம். ஸ்கின் ஃபாஸ்டிங்கில் இருக்கும்போது ஃபேஷியல் செய்வதையும் தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது ஸ்கின் ஃபாஸ்டிங்கின் பலன்களை அதிகரிக்கும்.

கற்றாழை ஜெல்

தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். இதனால், சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். இதுதவிர பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம். இது சருமத்தைப் புத்துணர்வோடு வைக்கும். கற்றாழை ஜெல், தயிர், கடலைமாவு, மஞ்சள், ஸ்கிரப் போன்றவற்றைப் பயன்படுத்துவதையும் ஸ்கின் ஃபாஸ்டிங் செய்யும்போது தவிர்க்கலாம்" என்றார்.



source https://www.vikatan.com/health/beauty/skin-fasting-who-can-do-it-what-are-the-benefits

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக