Ad

திங்கள், 20 மார்ச், 2023

Euro Myths: கறுப்புப் பூனைகள் என்றாலே பயம் வருவது எதனால்? ஐரோப்பிய வரலாறு சொல்லும் திகிலான விடைகள்!

எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் ஒரு விலையுயர்ந்த ஜாதிப் பூனையை வளர்த்தார்கள். வால் எல்லாம் புசு புசுவென்று முடியோடு பார்க்க நல்ல புஷ்டியாக இருக்கும். நிறமும் கேப்பச்சின்னோ காஃபி கலரில் (பணக்கார பூனை பணக்கார பூனைதான்யா) பார்க்கவே படு போஷ்ஷாக இருக்கும். தினமும் காலை பத்து மணிக்குத்தான் எழுந்திருக்கும். எழுந்திருக்கும் போதே பக்கத்தில் காஃபி ரெடியாக இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் காலை சாப்பாடு. உப்புமா வைத்தால் முகத்தைத் திருப்பிக்கொள்ளும். மதியம் சோற்றோடு தொட்டுக்கொள்ள மீன் அல்லது கருவாடு வேண்டும். எல்லாமே உப்பு, காரம், புளி அளவாகப் போட்டுச் சமைத்திருக்க வேண்டும். சாப்பிட்ட பின் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து தன் நண்பர்களைச் சந்திக்க வெளியே கிளம்பிவிடும் (2K Kid பூனை போல!).

ஈவினிங் டிஃபனுக்கு ஏதாவது ஸ்வீட் அல்லது பலகாரத்தோடு தேநீர் கொடுக்க வேண்டும், அதுவும் மில்க் டீ. எப்போதும் சோபாவில் அமர்ந்து டிவி பார்க்கும். நல்லவேளை அதற்கு ரிமோட் மாற்றத் தெரியாது, இல்லையென்றால் பூனைக்குப் பிடித்த நிகழ்ச்சியைத் தான் வீட்டாரும் பார்த்திருப்பார்கள்.

பூனை

வீட்டுக்கு விருந்தினர் வந்தாலும் சோபாவிலிருந்து எழுந்திருக்காது. வந்தவர்கள் பாயைப்போட்டு கீழே அமரவேண்டும். அதுவே பூனை லஞ்ச் முடித்துவிட்டு குட்டித்தூக்கம் போட வந்தால், சோபாவில் அமர்ந்திருப்பவர்கள் எழுந்து அதற்கு இடம் கொடுக்க வேண்டும். இது போல 'வாழ்ந்தா...' என மூன்று ஃபயர் விடும் அளவுக்கு ராஜ வாழ்க்கை வாழ்ந்த அந்தப் பூனை ஒரு நாள் கர்ப்பமானது.

ஆறு வேளை நன்றாக வாய்க்கு ருசியாக மசக்கை சாப்பாடு சமைத்துப் போட்டு வாயும் வயிறுமாக இருந்த பூனையைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார். ஒருநாள் பூனை மூன்று குட்டிகள் போட்டது. இரண்டு குட்டிகள் அதே போல கேப்பச்சின்னோ காஃபி கலரில், புசு புசு வாலுடன் அழகாக இருந்தது. ஒரு குட்டி மட்டும் கன்னங்கறேல் என்று கறுப்பாக இருந்தது (சிறிது காலமாக வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்த கறுப்புப் பூனைதான் அப்பா கல்ப்ரிட் பூனை என்று அன்று ஊர்ஜிதமானது).

பால்குடி வயது கடந்ததும், அதில் அழகாக இருந்த முதல் இரு குட்டிகளையும் கொழுத்த பணம் கொடுத்து யாரோ வாங்கிச் சென்றார்கள். கறுப்பு நிறத்தில் பார்க்கவே பயமாக இருக்கும் மூன்றாவது குட்டியைச் சீண்டக் கூட யாரும் வரவில்லை. வீட்டிலும் அந்தக் கறுப்புக் குட்டிக்குப் பாரபட்சம் காட்டப்பட்டது. அள்ளிக் கொஞ்சுவதற்குப் பதிலாக, அதைப் பார்த்து பயமாக இருக்கிறது என்று பலரும் சொல்லத் தொடங்கினார்கள். நிறத்தை வைத்து மனிதனைப் பிரிப்பது போல் பூனைகள் மீதும் ஏன் இந்த நிறவெறித் தாக்குதல் என்று ஆராயும் போது வரலாறு நம்மை பண்டைய ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்கிறது.

கறுப்புப் பூனையை யாருக்கும் பிடிக்காமல் போனதன் காரணம், காலம் காலமாக இருந்து வரும் கறுப்புப் பூனை சாத்தானின் மறுபிறவி என்ற மூட நம்பிக்கை. "If you live with a black cat, you live with a weirdo!" என்று சொல்லுமளவுக்கு இந்த மூட நம்பிக்கை உச்சத்துக்குப் போனது. "Pet a black cat for just a second and you'll make a loyal friend for life!" என்று என்னதான் விதம் விதமாகச் சொல்லிப் பார்த்தாலும் கறுப்புப் பூனைகள் மீது இருக்கும் பயமும் வெறுப்பும் இன்னும் முழுதாகக் குறைந்தபாடில்லை.
கறுப்புப் பூனை

கறுப்புப் பூனையையும் டெரரிஸ்ட் லிஸ்ட்டில் சேர்த்த ஐரோப்பியர்கள்

பூனைப் பிரியர்களுக்கு எல்லாப் பூனைகளும் அழகானவைதான். “எந்தப் பூனையும் நல்ல பூனைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்ல பூனையாவதும் திருட்டுப் பூனையாவதும் ஓனர் வளர்ப்பினிலே” என்று பாடாத குறையாகப் பூனைகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வருவார்கள். ஆனால் கறுப்புப் பூனைகள் என்றாலே கள்ளப் பூனை என்றும், கறுப்புப் பூனை என்றாலே கெட்ட சகுனம் என்றும் இன்றும் கூட நம் ஊர்ப்புறங்களில் நம்பிக்கை இருக்கிறது. ஏன் நகரத்தில் வாழ்பவர்களே சிலர் இன்றும் கூட ஏதாவது முக்கிய நிகழ்வுக்கு வெளியே கிளம்பும் போது கறுப்புப் பூனை குறுக்கே ஓடினால் “ச்சை, சனியன்” என்று திட்டியவாறே மீண்டும் வீட்டுக்குள் சென்று ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டுக் கிளம்புவார். (தனக்குக் குறுக்கே இந்த ஆள் வந்துவிட்டான் என அந்தக் கறுப்புப் பூனையும், “ச்சை சனியன்” என்று திட்டிக்கொண்டே ஓடியிருக்குமோ?).

பூனைகளின் அழிவும் ஐரோப்பாவை நிலைகுலைய வைத்த கறுப்பு மரணங்களும்

கறுப்புப் பூனைக்கு எதிரான இந்த வன்மம் 1230களில் ஐரோப்பாவில்தான் முதன் முதலில் ஆரம்பித்தது. 1233-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி, போப் கிரிகோரி IX (Pope Gregory IX) என்பவர் முதன் முதலாக ராமாவில் வோக்ஸ் (Vox in Rama) என்ற அறிக்கையை வெளியிட்டார். இது லூசிஃபெரியனிசத்தின் மதங்களுக்கு எதிரான கொள்கையைக் கண்டித்தும், அதற்கு எதிராக ஒரு சிலுவைப் போரைப் பிரசங்கிப்பதற்கும் அங்கீகாரம் அளித்தது.
போப் கிரிகோரி IX (Pope Gregory IX)

இதில் பூனைகளை, குறிப்பாகக் கறுப்புப் பூனைகளை சாத்தானியம் மற்றும் சூனியத்துடனும் இணைத்திருந்தார், எனவே பூனைகள் எல்லாம் கூண்டோடு அழிக்கப்படவேண்டியவை என்று கட்டளை இட்டார். இதனாலேயே ஐரோப்பாவில் இடைக்காலத்தின் பெரும்பகுதி முழுவதும், பூனைகள் மரண நெருக்கடியை எதிர்கொண்டன. கண்ணில் தெரியும் பூனைகளை எல்லாம் பிடித்து சித்திரவதை செய்து கொன்றனர். ஐரோப்பா முழுவதிலுமாக லட்சக்கணக்கில் பூனைகள் கொல்லப்பட்டன. பூனைகள் கொல்லப்படும் வருடாந்திர திருவிழாக்களே ஐரோப்பிய நாடுகளில் முளைத்தன. (அவற்றில் சில இன்றுவரை தொடர்கின்றன).

இவ்வாறு ஒட்டு மொத்த பூனைகளும் கொன்று அழிக்கப்பட்டதும் கூட ஒரு வகையில் இதுவரை மனித இன வரலாற்றிலேயே பதியப்பட்ட மிகக்கொடூரமான நோய்த்தாக்கமான கறுப்பு மரணத்துக்கு (Black Death) வழிவகுத்தது. ஐரோப்பாவையே நிலைகுலைய வைத்த பிளேக் நோயால் சுமார் 25 மில்லியன் ஐரோப்பியர் செத்து மடிந்தனர். ஆசிய நாடுகளிலிருந்து வந்த கப்பல்கள் மூலமாக ஐரோப்பாவில் பரவிய எலிகளைப் பிடிக்கப் பூனைகளே இல்லாமல் போன காரணத்தால், எலிகள் மூலம் விரைந்து பரவிய பிளேக் நோய் கிட்டத்தட்டப் பாதிக்கும் மேற்பட்ட ஐரோப்பாவைக் காலி செய்தது.

கறுப்புப் பூனைகளும் காமெடியான நம்பிக்கைகளும்

மந்திரவாதிகளுடனும் சூனியத்துடனும் நீண்ட காலமாகத் தொடர்புபடுத்தப்படும் கறுப்புப் பூனைகள் பற்றி ஐரோப்பியர் சொல்லும் கம்பி கட்டும் கதைகள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல காமெடியானவையும் கூட!

பண்டைய கிரேக்கப் புராணத்தில் வாழ்ந்த ஒரு மோசமான சூனியக்காரியின் வீட்டுக்குள் இருந்து அடிக்கடி பல கறுப்புப் பூனைகள் வெளியே ஓடுவதை அவதானித்த மக்கள், அன்றிலிருந்து சூனியக்காரிக்கும் கறுப்புப் பூனைக்கும் ஏதோ ஒரு லின்க் இருக்கிறது என்று கதையைக் கட்டிவிட்டார்கள். இடைக்கால ஐரோப்பாவில் இரவு நேரத்தில் மனிதர்களை உளவு பார்ப்பதற்காக மந்திரவாதிகளால் அனுப்பப்படும் ஸ்பை என்றும் இவை பூனை வடிவில் இருக்கும் பேய் என்றும் கறுப்புப் பூனையைக் கருதினார்கள்.

சூனியக்காரர்களுடன் தொடர்புபடுத்தப்படும் கறுப்புப் பூனைகள்
13-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 17-ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி வரை ஐரோப்பாவில் அரங்கேறிய மிகப்பெரிய படுகொலையான Salem Witch Trials-இல் சூனியக்காரர்களாகக் கருதப்பட்டவர்களுடன் சேர்த்துக் கறுப்புப் பூனைகளும் டஜன் டஜனாகக் கொல்லப்பட்டன.

இத்தாலியில், 16-ம் நூற்றாண்டு காலப்பகுதியில், ஒருவரின் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் ஒரு கறுப்புப் பூனை படுத்திருந்தால் மரணம் உடனடியாக நிகழும் என்று உறுதியாக நம்பினார்கள். பாவம், இது தெரியாத நம் சினிமா இயக்குநர்கள் கட்டிலில் மூச்சை இழுத்துக்கொண்டு கிடக்கும் கிழவி வாயில் பாலை ஊற்றிச் சாகடிக்க முயன்றார்கள். பேசாம ஒரு கறுப்புப் பூனையைப் பிடித்து பக்கத்தில் படுக்க வைத்திருந்தால் வேலை சுலபமாக முடிந்திருக்கும். கொலை பாவமும் வந்திருக்காது.

15ம் நூற்றாண்டின் ஐரோப்பியர், இறுதி மரண ஊர்வலத்தின் போது கறுப்புப் பூனையைக் கண்டால் அதே குடும்பத்தில் இன்னொரு குடும்ப உறுப்பினரும் இறந்துவிடுவார் என்று நம்பினார்கள். அதே போலக் கறுப்புப் பூனை குறுக்கே கடந்தால் அது துரதிர்ஷ்டமாகவும், ஒரு கறுப்புப் பூனை உங்களிடமிருந்து விலகிச் செல்வதைக் கண்டால் அது ஒரு கெட்ட சகுனம் என்றும் கருதினார்கள்.
கறுப்புப் பூனை

Gossip பேசும் கறுப்புப் பூனைகள்

பண்டைய நெதர்லாந்தில் கறுப்புப் பூனைகளைப் பக்கத்தில் வைத்திருந்தால் அவை கூடவே இருந்து அவர்களின் அந்தரங்க ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு, கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டு சேர்த்து இஷ்டத்துக்கும் புரளியைக் கிளப்பிவிடும் என்று நம்பினார்கள். அதனாலேயே மருமகள் இருக்கும் அறையிலிருந்து கொண்டு புறணி பேசினாலும் பேசுவேன், ஆனால் கறுப்புப் பூனைகள் இருக்கும் அறையில் புறணி பேசமாட்டேன் என நெதர்லாந்து மாமியார்கள் அடம்பிடித்தார்கள். கறுப்புப் பூனை இருக்கும் அறையை விட்டு வெளியேறி கேமரா இருக்கும் அறையில் பாதுகாப்பாக லஞ்சம் வாங்கினார்கள் அரசியல்வாதிகள்.

பக்கத்து வீட்டுக் கதைகளைக் கேட்க, அந்த வீட்டு வேலைக்காரப் பெண்மணியை விட்டு விட்டுக் கறுப்புப் பூனைகளைத் தேர்ந்தெடுத்தார்கள். ரகசியம் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் கறுப்புப் பூனை வந்தால் உடனே கதையை மாற்றினார்கள். சுருக்கமாகச் சொன்னால் அன்றைய கிசு கிசு எழுதுபவர்களாக இந்தக் கறுப்புப் பூனைகள் பார்க்கப்பட்டன. இதனாலேயே அன்றைய மக்கள் கறுப்புப் பூனையைப் பார்த்து அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்.

பூனைகளை வதைக்கும் ஐரோப்பியப் பண்டிகைகள்

முன்னரே சொன்னதுபோல, மத்திய காலத்தில் போப் கிரிகோரி IX (Pope Gregory IX) என்பவரின் கட்டளையின் பேரில் ஐரோப்பாவிலிருந்த அனைத்து பூனைகளும், குறிப்பாகக் கறுப்புப் பூனைகள் கொன்று அழிக்கப்பட்டன. இது ஒரு பண்டிகையாகவே காலப்போக்கில் கொண்டாடப்பட்டது. தவக்காலத்தின் ஆரம்பத்தில் ஐரோப்பா முழுவதும் உள்ள கறுப்புப் பூனைகளைப் பிடித்து ஒரு பெரிய பேரலில் போட்டு மூடி, அந்தப் பூனை சாகும்வரை மக்கள் அந்த பெரேலை தடியால் ஓங்கி அடித்தனர். உள்ளே மாட்டிக்கொண்ட பூனை கதறித் துடித்து இறந்து போனது.

Fastelavn பண்டிகை

காலப்போக்கில் மனம் திருந்திய ஐரோப்பியர் (நாதஸ் திருந்திட்டான் மோமென்ட்) உள்ளே இருந்த கறுப்புப் பூனைக்கு விடுதலை கொடுத்துவிட்டு, பூனை போன்ற ஒரு பொம்மையை உள்ளே போட்டு அடி விளாசினார்கள். இன்று டென்மார்க் போன்ற நாடுகளில் பிரபலமாகக் கொண்டாடப்படும் 'Fastelavn' பண்டிகையின் போது பூனைக்குப் பதிலாக சிறுவர்களுக்கான இனிப்புக்களைப் போட்டு, தடி கொண்டு அடித்து உடைக்கிறார்கள். “அப்பாடா இந்தக் கிறுக்கனுங்க கிட்ட இருந்து நாம தப்பிச்சோம்...” எனப் பூனைகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கும்.

யூரோ மித்ஸ் தெரிஞ்சிக்கலாமா?!



source https://www.vikatan.com/lifestyle/culture/european-myths-why-the-black-cats-are-considered-as-a-sign-of-bad-luck

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக