Ad

புதன், 22 மார்ச், 2023

`ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்கிறது மத்திய அரசு - இனி என்ன?!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றி, ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘ஆன்லைன் ரம்மி விவகாரமானது மத்திய அரசின்கீழ் வருகிறது. இதில் தன்னிச்சியாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை’ எனக் கூறி, மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே திருப்பியனுப்பினார். இதற்கு ஆளும் தி.மு.க தரப்பிலிருந்து எதிர்ப்புகள் ஒருபக்கம் எழ, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்ற விவாதம் பேசுபொருளானது.

ஆன்லைன் ரம்மி - மத்திய அரசு

இந்த நிலையில்தான் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. முன்னதாக தி.மு.க எம்.பி பார்த்திபன், இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ``பந்தயம், சூதாட்டம் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின்கீழ் வருகின்றன. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களைத் தங்களின் வரம்புக்குள் கொண்டுவருவதற்கும், அதற்குத் தேவையான சட்டங்களை இயற்றவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு” என விளக்கமளித்தார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் பேரா.ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “இந்த விவகாரம் மூலம் தனக்கு அரசியல் அமைப்பு சட்டம் பற்றிய போதிய தெளிவு இல்லை என்று ஆளுநர் உறுதி செய்திருப்பதாக திமுக பார்க்கிறது. மாநிலம் இந்த சட்டத்தை இயற்ற தகுதி இல்லை என்று ஆளுநர் சொன்னதை மறுத்து. ஒன்றிய அமைச்சர் மாநிலமே சட்டம் இயற்றலாம் என்று சொல்கிறார். ஒன்றிய அமைச்சர் சொல்வது நிஜம் என்றால், ஆளுநர் போதிய அறிவில்லாமல் செய்திருக்கிறார் என்று எடுத்து கொள்ள வேண்டியதுதான். எனவே ஆளுநர் அவராகவே அழைத்து இந்த மசோதாவில் கையெழுத்து போட்டால்தான் அவருக்கு மரியதை. எங்களுக்கு தெரிந்து ஆளுநர் கையெழுத்திடுவார் என்று நம்புகிறோம். அப்படி கையெழுத்திடுவதுதான் ஆளுநருக்கு அழகு” என்றார்.

பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “மாநில அரசு கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு சட்டங்கள் இயற்றலாம். இதைத்தான் தொடர்ந்து பாஜக-வும் சொல்லி வருகிறது. உச்ச நீதிமன்றமும் அதைத்தான் தெளிவுப்படுத்தி இருக்கிறது. தடை செய்யவது என்று வரும் போது சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. தடை விதித்த சில மாநிலங்களில் அந்த தடையை நீக்கியிருக்கிறார்கள். அமைச்சரின் முழு பேச்சையும் கேட்டால் வரம்புக்குள், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்றுதான் சொல்லி இருக்கிறாரே தவிர எந்த இடத்திலும் தடை என்கிற வார்த்தை இருக்காது. அதனால்தான் தொடர்ந்து மாநில அரசிடம் கேட்கிறோம், ஆளுநர் என்னென்ன கேள்விகள் கேட்டிருக்கிறார், அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லி இருக்கிறீர்கள் என்பதை வெளியிடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆன்லைன் ரம்மியை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்” என்றார்.

நாராயணன் திருப்பதி

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அது மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/central-govt-says-power-to-state-govt-in-online-rummy-ban-act-what-next

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக