Ad

சனி, 11 மார்ச், 2023

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் ஆபத்திலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

Doctor Vikatan: பெண்களுக்குப் பொதுவாக ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகை சுஷ்மிதா சென்னுக்கு ஹார்ட் அட்டாக் என்ற செய்தி அறிந்ததும் பயமாக இருக்கிறது. ஹார்ட் அட்டாக் ஆபத்திலிருந்து பெண்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இதயநோய்கள் ஆண்களை மட்டுமே பாதிக்கும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் தவறான கருத்து. இதயநோய்கள் பெண்களையும் பாதிக்கும். இன்னும் சொல்லப் போனால் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இதயநோய்கள் பாதிப்புக்கான வாய்ப்புகள் சம அளவில்தான் இருக்கினறன.

நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பாதிப்புகள் உள்ள ஆண்களைப் போலவே பெண்களும் இவற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, அவை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பிரசவத்துக்குப் பிறகு பெண்களை பாதிக்கும் Spontaneous coronary artery dissection என்கிற பிரச்னை வரலாம். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் இந்தப் பிரச்னையாலும் பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வரலாம்.

அடுத்து ப்ரீ எக்லாம்சியா மற்றும் கர்ப்பகால நீரிழிவு எனும் இரண்டு பிரச்னைகளும் உள்ள பெண்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் ரத்த அழுத்தத்தை ப்ரீ எக்லாம்சியா என்கிறோம். அதே போல கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு நீரிழிவு வரும். இந்த இரண்டு பாதிப்புகள் உள்ள பெண்களுக்கும் பிரசவத்துக்குப் பிறகும் இந்த பாதிப்புகள் தொடரும் வாய்ப்புகள் உண்டு. அதன் விளைவாக இவர்களுக்கு இதயநோய்கள் பாதிக்கலாம்.

ஸ்ட்ரெஸ்

ஆண்களைவிட பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கிறது. குடும்பம், வேலை என பல காரணங்களால் அதிகரிக்கும் அந்த ஸ்ட்ரெஸ்ஸை அவர்களால் வெளிப்படுத்தக்கூட இயலாமல் இருக்கும். ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது கார்ட்டிசால் என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும். ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஹார்ட் அட்டாக் வரும் அபாயமும் அதிகரிக்கும் என்பதால் ஸ்ட்ரெஸ்ஸை அலட்சியப்படுத்தக்கூடாது.

ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்த போதுமான அளவு ஓய்வு அவசியம். பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்யலாம். நண்பர்கள், உறவினர்களுடன் நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் அதை அளவுக்கதிகமாகச் செய்யாதீர்கள். வாரத்துக்கு 150 நிமிடங்கள் என மிதமான பயிற்சிகளைச் செய்யுங்கள். அது நடைப்பயிற்சியோ, நடனமோ எதுவாகவும் இருக்கலாம்.

மாரடைப்பு

நெஞ்சில் வலி, அது கைகளில் பரவுவது என ஹார்ட் அட்டாக்கின் பொதுவான அறிகுறிகள் மட்டுமே பலருக்கும் தெரியும். பெண்களைப் பொறுத்தவரை அதீத களைப்பாக உணர்வது, மூச்சு வாங்குவது, வாந்தி வருஷவது போல உணர்வது, ஏதோ அசௌகர்யத்தை உணர்வது, வியர்வை, நெஞ்செரிச்சல், வேறு ஏதேனும் வித்தியாசமான புதிய அறிகுறி என எதுவானாலும் ஐந்து நிமிடங்களில் சரியாகவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள். வருடம் ஒருமுறை இதயநலனை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-how-can-women-protect-themselves-from-the-risk-of-heart-attack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக