Ad

வியாழன், 9 மார்ச், 2023

`அம்மா வருவாள்'- இறந்த யானையை எழுப்பிய குட்டி;`தாய் வந்து மீட்பாள்'- காத்திருக்கும் புலிக்குட்டிகள்!

உணர்வுகள் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவை. மனிதனைக் கலங்கடிக்கச் செய்யும் பல செயல்களை விலங்குகள் பல நேரங்களில் செய்துவிடுவதுண்டு. சமீபத்தில் அப்படியான இரண்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

வனங்களில் வாழும் விலங்குகள் இரை தேடும் பொருட்டு கிளம்பிச் செல்கையில் மாறிப் போன வனத்தின் திசை தெரியாமல் பல நேரங்களில் மாட்டிக் கொள்வதுண்டு. மனிதர்களின் இருப்பிடங்களில், வேலிகளில், கண்ணிகளில், குழிகளில் என அகப்படும் விலங்குகள் தங்கள் உறவுகளை அழைத்து அறைகூவல் விடுக்கத் தொடங்குகின்றன. வனத்துறை வந்து மீட்டாலும் தங்கள் உறவுகளைப் பிரிந்த அவற்றின் ஏக்கம் தீராதது. ஆந்திராவிலும், தமிழகத்தின் தர்மபுரியிலும் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

`அம்மா வருவாள்!' மருண்ட விழிகளுடன் காத்திருக்கும் புலிக்குட்டிகள்!

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில், கும்மந்தப்புரம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தன வழி தவறிய நான்கு புலிக் குட்டிகள். புலிக் குட்டிகளின் சத்தம் கேட்டு பதறிய மக்கள் வனத்துறைக்கு தகவலளித்தனர். அந்த வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர், நான்கு குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதிசெய்தனர். ``காட்டு நாய்களிடமிருந்து தப்பித்து தாய் புலி ஒடியபோது குட்டிகள் தனியாக விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், இந்தக் குட்டிகள் எப்படி வீட்டிற்குள் வந்தது என்ற குழப்பம் நீடிக்கிறது" என்கிறார் அந்தப் பகுதியின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், ஷாந்திப் பிரியா பாண்டே. வனத்துறையின் மீட்புப் பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தன.

புலிக்குட்டிகள்

மறுபுறம் தன் தாயை இழந்து பரிதவித்து நிற்கும் புலிக்குட்டிகளை தாயிடம் சேர்க்கவும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. தன் குட்டிகளை உருமிக்கொண்டு தேடிவரும் தாய் புலியிடம், நான்கு குட்டிகளையும் 48 மணி நேரத்தில் சேர்த்துவிட வனத்துறையினர் முயன்று வருகின்றனர். அதற்காகத் தாய்புலி, தன் குட்டிகளைக் கண்டுபிடிக்கும் தடயங்களை மனிதர்கள் அழிக்காமல் பாதுகாக்கின்றனர். மேலும் குட்டிகள் இருக்கும் பகுதியைத் தனிமைப்படுத்தியிருக்கின்றனர். ஒருவேளை குட்டிகள் சேரமுடியாமல் போகும் பட்சத்தில், குட்டிகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் பாண்டே.

தாயின் மரணத்தால் கலங்கி அழுத குட்டி யானைகள்!

மனிதர்கள் பல நேரங்களில் அறிந்தோ, அறியாமலோ விலங்குகளின் வசிப்பிடங்களைத் தனதாக்கிக் கொள்கிறான். காடுகள், மலைகள், நீர் என இயற்கையின் படைப்புகளை தனக்கான வகையில் உரிமை கொண்டாடத் தொடங்குகிறான். பிற உயிர்களைப் பற்றிய எந்தவித சிந்தனையுமின்றி இதைச் செய்துவருகிறோம். அது ஏற்படுத்தும் விளைவுகள் துயரம் மிக்கவை.

யானைகள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட பாறை கொட்டாய் பகுதியில், சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, இரவு நேரம் அதன் வழியாகச் சென்ற இரண்டு பெண் யானைகள், ஒரு ஆண் யானை மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இதனால், அந்த நிலத்தின் உரிமையாளர் முருகேசன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த யானைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளூர் மக்கள் உதவியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன. இதற்கிடையில், தாய் யானை இறந்ததை அறிந்திடாத இரண்டு வயது குட்டி யானை ஒன்று, தன் தாய் யானையின் அருகே சென்று அதனை எழுப்ப முயலும் காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. இந்தக் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதைப் பாதுகாப்பான முகாமுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

மனித மரணங்கள் மட்டுமே கலங்கடிப்பவையல்ல. ப்ரியமானவர்களின் மரணமோ, பிரிவோ அனைத்து உயிர்களுக்கும் தாளாத ரணத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டேயிருக்கின்றன.


source https://www.vikatan.com/environment/emotional-story-of-the-elephant-and-the-tiger-cubs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக