Ad

திங்கள், 13 மார்ச், 2023

Doctor Vikatan: வேலையில் டார்கெட், டெட்லைனால் ஸ்ட்ரெஸ்; அதனால் வரும் உடல்வலி... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: நான் ஐடி துறையில் வேலை பார்க்கிறேன். டார்கெட், டெட்லைன் என எப்போதும் ஸ்ட்ரெஸ் இருக்கும். ஸ்ட்ரெஸ் அதிகமானால் உடல்வலி அதிகரிக்குமா? சில நாள்களில் அது உச்சத்துக்குப் போகும். அப்போதெல்லாம் முதுகுப்பகுதி டைட்டாவது போலவும் வலியையும் உணர்கிறேன். இது ஏன்? இதற்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் | சேலம்

ஸ்ட்ரெஸ் என்பதில் உடல அழுத்தம் மற்றும் மன அழுத்தம் என இரண்டுமே அடங்கும். இந்த இரண்டுமே வலியை அதிகரிக்கக்கூடியவை. ஸ்ட்ரெஸ் என்பது எப்படி வலிக்கு காரணமாகும் என்பதற்கு மூன்று விஷயங்களைக் குறிப்பிடலாம். ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது அதன் விளைவாக நரம்புகள் மூலமாகவும், ஹார்மோன்கள் மூலமாகவும் வலி ஏற்படுகிறது. மூன்றாவதாக அந்த ஸ்ட்ரெஸ்ஸை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதும் முக்கியம். இந்த மூன்றினாலும் வலி வருவது மட்டுமன்றி, ஏற்கெனவே உள்ள வலியும் அதிகமாகலாம்.

ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது முதுகுப்பகுதி டைட் ஆவது போல உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்... அது வெறும் உணர்வு மட்டுமல்ல, உண்மையும்கூட. லிம்பிக் சிஸ்டம் எனப்படும் மூளைப்பகுதிதான் நம் வலி, அழுத்தங்கள் போன்றவற்றை உணரச் செய்கிறது, அதுதான் வலியின் தீவிரத்தையும் கட்டுப்படுத்துகிறது.

டோபமைன் எனப்படும் ஹார்மோன், ஒருவருக்கு எந்த அளவுக்குச் சுரக்கிறது என்பதைப் பொறுத்து அவர் வலியை உணரும் தன்மை மாறுபடும். ஸ்ட்ரெஸ்ஸானது இந்த டோபமைன் சுரப்பை அதிகப்படுத்தும். அதனால் வலியையும் அதிகமாகவே உணர்வோம்.

உடல் இறுக்கம் என்பது ஏற்கெனவே உள்ள வலியினால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது அந்த வலி அதிகரிக்காமல் இருக்க நம் உடல், தனக்குத்தானே ஒருவித பாதுகாப்பு நிலையை எடுத்துக் கொள்ளும். அதனாலும் இருக்கலாம். அதாவது கழுத்தை ரொம்பவும் குனியும்போது நரம்பு அழுத்தம் ஏற்படும் பட்சத்தில் கழுத்தை நிமிர்ந்திருக்கச் செய்கிற பின்னங்கழுத்துத் தசைகளில் அழுத்தம் அதிகரிக்கும். அதே போல இடுப்பிலுள்ள நரம்புகளிலும் அழுத்தத்தைக் குறைக்க, இடுப்பைச் சுற்றியுள்ள தசைகள் டைட் ஆகும்.

இடுப்பு சதை இறுக்கம்

இந்த விஷயத்துக்கான தீர்வு என்பது சரியான உடல் பாஸ்ச்சர். அதாவது வலி ஏற்படாமலிருக்கும்படியான உடல் நிலைகளைப் பின்பற்ற வேண்டும். வலியைக் குறைக்க மருத்துவ உதவியை நாடலாம்.

ஸ்ட்ரெஸ் என்பது உடலை பாதிக்காத அளவுக்கு அதைக் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும். வலி நிவாரணிகள் மூலம் அந்த நேரத்தில் ஏற்படும் வலியிலிருந்து மீளலாம். ஆனால் அது நிரந்தர தீர்வாகாது. மீண்டும் மீண்டும் வலி ஏற்படாத அளவுக்கு வலிக்குக் காரணமான ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளைப் பின்பற்றுவதுதான் சரியான மற்றும் நிரந்தர தீர்வாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-stress-caused-by-targets-and-deadlines-resulting-in-body-aches-need-treatment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக