திருச்சி, சர்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையம் வழியாக எக்கச்சக்கமாக கடத்தல் தங்கம் இறங்குகிறது.
தங்கக் கடத்தல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அவ்வப்போது வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வதும், அவர்களிடம் தங்கக் கடத்தல் நபர்கள் சிக்குவதும் வாடிக்கையாகிவிட்டது. டிஸைன் டிஸைனாக தங்கம் கடத்திவரப்பட்டாலும், அவை அதிகாரிகளிடம் பிடிபட்டு விடுகின்றன.
அந்தவகையில், சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் ஒன்று திருச்சிக்கு நேற்று வந்தது. வழக்கம்போல விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான ஆண் பயணி ஒருவரை விமான நிலைய அதிகாரிகள் தனியே அழைத்துச் சென்று சோதனை செய்திருக்கின்றனர். அப்போது, அவர் கொண்டு வந்திருந்த லக்கேஜில் இருந்த கம்ப்யூட்டர் சிபியூவிற்குள், சிறிய உருளை வடிவில் சுமார் 60 தங்க உருளைகள் இருந்திருக்கின்றன. அதையடுத்து ரூ.27,42,688 மதிப்பிலான அந்த 494 கிராம் கடத்தல் தங்கத்தை விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, விமான நிலையத்தில் பயணிகள் வந்திறங்கும் பகுதியிலுள்ள கழிப்பறையில் கேட்பாரற்ற நிலையில் ரூ.18,15,504 மதிப்பிலான 327 கிராம் அளவுள்ள 3 தங்கச் செயின்கள் கிடந்திருக்கின்றன. அதேபோல், திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதியிலுள்ள கழிப்பறையிலும் கேட்பாரற்ற நிலையில் 939 கிராம் அளவுள்ள தங்கக்கட்டி ஒன்று, அதாவது சுமார் ஒரு கிலோ அளவுள்ள தங்கக் கட்டி கிடந்திருக்கிறது. இதன் மதிப்பு ரூ.52,13,328 ஆகும். அந்தவகையில் கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட 1266 கிராம் தங்கத்தையும் விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/crime/gold-smuggled-in-computer-cpu-at-trichy-airport
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக