Ad

வியாழன், 23 மார்ச், 2023

Doctor Vikatan: 40 வயதில் பார்வையில் பிரச்னை... ரீடிங் கண்ணாடி பயன்படுத்துவது தீர்வாகுமா?

Doctor Vikatan: 40 வயதுக்குப் பிறகு செய்தித்தாள் வாசிப்பது, மொபைல் பார்ப்பதில் லேசான தடுமாற்றம் இருப்பதால் கண்ணாடி கடைகளில் ரீடிங் கிளாஸ் வாங்கிப் பயன்படுத்துவது சரியா? அதில் பவர் இருக்குமா? ரீடிங் கிளாஸை எத்தனை வருடங்களுக்கொரு முறை மாற்ற வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

40 வயதைக் கடந்ததும் பலருக்கும் அருகிலுள்ள எழுத்துகளைப் படிப்பது, நெருக்கத்தில் உள்ள காட்சிகளைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படும். அந்தப் பிரச்னைக்கு 'ப்ரெஸ்பயோபியா' (Presbyopia) என்று பெயர். 'சாளேஸ்வரம்' என்று சொல்லப்படுகிற அதே பிரச்னைதான் இது.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கத்தில் உள்ள காட்சிகள் தெளிவாகத் தெரியாமல் மங்கலாகத் தெரியும். அதுவே தூர வைத்துப் பார்க்கும்போது பார்வை தெளிவாக இருக்கும்.

நடுத்தர வயதைத் தொடும்போது நம் கண்களில் உள்ள லென்ஸானது தடிமனாகிவிடும். அதன்பிறகு அதனால் தன் இயல்பை மாற்றிக் கொள்ள முடியாது. எனவே அந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவருக்கு தெளிவான பார்வைக்கு ப்ளஸ் பவர் உள்ள கண்ணாடிகள் தேவைப்படும்.

இந்த ப்ளஸ் பவரானது, 60 வயது வரை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதற்கேற்ப கண்ணாடியை மாற்றினால் பார்வை தெளிவாக இருக்கும். வயதாவதன் மிக இயல்பான ஓர் அறிகுறிதான் இது. எனவே பயப்பட வேண்டாம். பவரில் மாற்றங்கள் இருக்கிறதா என்பதை அடிக்கடி மருத்துவரை அணுகி சரிபார்த்து, அதற்கேற்ப கண்ணாடியை மாற்ற வேண்டும்.

Eye testing (Representational Image)

40 ப்ளஸ் வயதில் ஒருவருக்கு பார்வையில் சிரமம் இருப்பதை உணர்ந்தால் உடனே கண் மருத்துவரை அணுகி டெஸ்ட் செய்து கொள்வதுதான் சரியானது, பாதுகாப்பானது. சம்பந்தப்பட்ட நபருக்கு வெறும் சாளேஸ்வரம் பாதிப்பு மட்டும்தான் இருக்கிறதா அல்லது கூடவே கிளாக்கோமா எனப்படும் கண் அழுத்தநோயோ, பார்வை தொடர்பான வேறு பிரச்னைகளோ இருக்கின்றனவா என்பதை கண் மருத்துவரால்தான் சரியாகச் சொல்ல முடியும்.

எனவே கண்ணாடிக் கடைகளில் நீங்களாக ரீடிங் கிளாஸ் வாங்கிப் பயன்படுத்துவது அறிவுறுத்தத் தக்கதல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-vision-problem-at-age-40-can-reading-glasses-be-the-solution

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக