Ad

வெள்ளி, 17 மார்ச், 2023

துணைவேந்தர் நியமனம்: `மாநில அரசுக்கு உரிமை இல்லையா?’ - கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவு சொல்வதென்ன?

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படியில், மேற்கு வங்கத்தில் நியமித்த 29 துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மேற்கு வங்கம் அரசு துணை வேந்தர்  சட்டத்தில்  மாநில அரசே நியமிக்கும் அதிகாரத்தை வழங்கும் திருத்தத்தை மேற்கொண்டது. அதன்படி தற்போது வரை 29  பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை மேற்கு வங்க அரசு நியமித்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட பொது நல வழக்கில், ``யு.ஜி.சி மானியக் குழு ஒழுங்கு விதி 2018-ன் படி துணை வேந்தர் நியமன குழுவில்  யு.ஜி.சி பிரதிநிதியும் இடம்பெற்றிருப்பது அவசியம். ஆனால், மேற்கு வங்கம் கொண்டுவந்த சட்டத்திருத்தத்தில் ஒழுங்கு முறை விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை” என்னும் வாதம் முன்வைக்கப்பட்டது.

மம்தா - துணை வேந்தர் நியமன சட்டம்

இரு தரப்பு கருத்துகளையும் கேட்ட நீதிபதிகள், ``பல்கலைக்கழக விதிகளைப் பின்பற்றுவது அவசியம். அதைத் தவிர்த்துவிட்டு நியமனம் செய்தததை ரத்து செய்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் பல்கலைக்கழக விதிகள் பின்பற்ற வேண்டும் என்பதை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே, அதைக் கடைப்பிடிக்க வேண்டும். பல்கலைக்கழக ஒழுங்கு விதிகளைத் தவிர்த்துவிட்டு துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமை மாநில அரசுக்கு கிடையாது” என தீர்ப்பு வழங்கியுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், தன் ஆட்சி இல்லாத கட்சிகள் ஆளும் அரசைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆளுநர் வாயிலாகப் பல வேலைகளைச் செய்துவந்தது. இதனால், ஆளுநருக்கும் ஆளும் அரசுக்கும் மோதல் போக்கு உண்டானது. குறிப்பாக, வேந்தராக செயல்படும் ஆளுநர்கள் துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசின் முடிவுகளை  ஏற்காமல் தன்னிச்சையாக செயல்பட தொடங்கியது  ஆளுநர்களுக்கும் மாநில அரசுக்கும்  இடையே மோதல் போக்கை உண்டாக்கியது.

பாஜக

எனவே, நியமன அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்க மாநில அரசுகள் சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதில் மேற்கு வங்கம், ஆந்திரா, குஜராத், கேரளா என மாநிலப் பட்டியல் விரிந்து கொண்டே போகும். அதன் தொடர்ச்சியாகத் தான் கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில் துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு இருக்கும்  அதிகாரத்தைக் குறைக்க இரண்டு தீர்மானங்களைக் கொண்டு வந்தது. அதில் தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெயர்களிலிருந்து இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கப்படும். தேர்ந்தெடுத்த துணை வேந்தர்களைப் பதவியில் இருந்து விலக்க உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது தலைமைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர்கள் தலைமையில் அமைக்கும் விசாரணைக் குழுவுக்கே அதிகாரம் உண்டு என மாற்றப்பட்டது.

சட்டசபை - துணை வேந்தர் நியமன திருத்தச் சட்டம்

கொல்கத்தா நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் குறித்து வழக்கறிஞர் நல்லதுரையிடம் விளக்கம் கேட்டோம். அவர்,”கலை, தொழில்நுட்பம், மருத்துவக் கல்விகள் அனைத்தும் மாநிலப் பட்டியலில் இருந்தது. அது 1974-ம் ஆண்டுக்குப் பின் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஒருவேளை துணை வேந்தர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்னும் சட்டம் இருந்தாலும் ,  பிரிவு 254 அடிப்படையில் அதில் திருத்தம் கொண்டுவர மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தபின் அதை நடைமுறைப்படுத்தலாம்.

சமூக ஆர்வலர் நல்லதுரை

ஆனால், தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டம், மெட்ராஸ் பல்கலைக்கழகச் சட்டம் என அனைத்தையும் இயற்றியது மாநில அரசுதான். இந்தச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும் போது,  பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்கும் பொறுப்பும் மாநில அரசுக்கு இருக்கிறது என்பதுதான் சட்ட நிலை. மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்தான் மத்திய அரசால் அதிகாரம் செலுத்த முடியும். ஆனால், மாநில அரசு கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள் சார்ந்த சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அடிப்படையில் தான் துணை வேந்தர் நியமனம் இயற்றும் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்தது. முன்பு துணை வேந்தர் பரிந்துரைத்து ஒப்புதல் தரும் இடத்தில் ஆளுநர் இருந்தார். ஆனால், அது மரபு அடிப்படியிலான ஒன்று மட்டுமே தவிர சட்ட அடிப்படையானது அல்ல.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

யு.ஜி.சி என்பது பாடத்தின் தரம், தேர்வு நடவடிக்கை, நிதிப் பங்களிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்கலாம். ஆனால்,  நிர்வாகத்துக்குள் நேரடியாக தலையிடும் அதிகாரம் யு.ஜி.சி-க்கு இல்லை. குறிப்பாக, துணை வேந்தர் நியமனத்தில்  யு.ஜி.சி க்கு எந்தப் பங்கும் கிடையாது. ஆனால், யு.ஜி.சியின் துணை வேந்தர் பதவி தகுதிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றலாம். ஆனால், யு.ஜி.சி தலையிட்டு இவரை துணை வேந்தராகப் போடுங்கள் என சொல்ல முடியாது.  தவிர, மேற்கு வங்கம் நியமனம் பொறுத்தவரை அதில் யு.ஜி.சியின் எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றவில்லை. அதனால் நியமனம் முழுவதும் ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பரிந்துரை குழுவில் யுஜிசி பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.

யு.ஜி.சி. அமைப்பு!

மாநிலத்துக்கு மட்டும்தான் துணை வேந்தர் நியமிக்க முழு அதிகாரம் இருக்கிறது. ஆளுநர்’ என்பவர் மாநில அரசின் பிரதிநிதி தான். அவர் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும். மாநில சட்டமன்றம் கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஒப்புதல் தராமல் இருக்க முடியாது. இதில் ’மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை’ என கொல்கத்தா உயர் நீதிமன்றம் சொல்வது மட்டுமே இறுதி தீர்ப்பல்ல. இதில் தொடர்ந்து சர்ச்சைகள் எழும் நிலையில், அதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு முடிவை எடுக்கலாம்.” என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ராவீந்திரன் பேசியதாவது, ”துணை வேந்தர் நியமனம் செய்ய குழு அமைக்க வேண்டும். அதில் பரிந்துரைகள் செய்ய வேண்டும். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார். இதுதான் நடைமுறையாக இருந்தது. தற்போது கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை பொறுத்தவரை, திமுக அரசு துணை வேந்தர்கள் பரிந்துரையில் யு.ஜி.சி சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி தான் பரிந்துரைகள் செய்கிறது. குஜராத், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இந்த வழிமுறைகளைத் தான் பின்பற்றுகிறது. ஆனால், ஆளுநர் கையொப்பமிட வேண்டிய இடத்தில் முதலமைச்சர் கையெழுத்திடுவார். இதுதான் வித்தியாசம், ” என முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/policy/is-the-state-government-given-the-right-to-appoint-a-vice-chancellor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக