Ad

வெள்ளி, 31 மார்ச், 2023

பணத்தை இழக்காதீர்கள் மக்களே..!

ஆழ்வார்பேட்டை பெனிஃபிட் நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கான பணத்தைத் திருப்பித் தர சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘‘பணத்தைத் திருப்பித் தரும் பணியை நிர்வகிக்கும் நிபுணத்துவம் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்குக் கிடையாது. எனவே, தமிழ்நாடு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் நலச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த 23 ஆண்டுகளாக நடந்துவந்தது. ஆழ்வார்பேட்டை பெனிஃபிட் நிறுவனத்துக்குச் சொந்தமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை நிர்வாகம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூவர் வெவ்வேறு காலத்தில் நியமிக்கப்பட்ட பின்னும், அவர்களால் முதலீட்டாளர்களுக்கான பணத்தைத் திருப்பித் தர முடியவில்லை. இந்த நிலையில், ‘‘ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளை எல்லாம் உயர் நீதிமன்றம் கண்காணித்துக்கொண்டு இருக்க முடியாது’’ என்று சொல்லி, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

நீதிமன்றம் சொல்லி இருக்கும் இந்தக் கருத்துகளை முதலீட்டாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம், அதிக வருமானத்துக்கு ஆசைப் பட்டு, பணத்தைக் கட்டி இழக்கிறவர்கள், பிற்பாடு அந்தப் பணத்தைப் பெற எவ்வளவுதான் அலைந்தாலும் யாராலும் உதவ முடியாது என்கிற உண்மையைப் புரிந்துகொண்டு, மோசடித் திட்டங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும்.

அதிக வட்டி, அதிக வருமானம் என ஆசை காட்டும் மோசடி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிய உடனே அந்த நிறுவனங்களை முடக்கும் வேலையைக் காவல்துறை செய்ய வேண்டும். ஆனால், இந்த மோசடி நிறுவனங்களை நடத்துபவர் களே அரசியல்வாதிகளின் பினாமிகளாக இருப்பதால், காவல்துறையினரால் கறாரான நடவடிக்கையை எடுக்க முடிவதில்லை. அந்த நிலையில், அவர்களும் மோசடி நிறுவனத்தின் பார்ட்னர்களாக மாறி, பெரும் பணம் சம்பாதிக்கும் வேலையில் இறங்கிவிடுகின்றனர். இதற்கு வேலூர் ஐ.எஃப்.எஸ் நிறுவனமும் ஆருத்ரா நிறுவனமும் சிறந்த உதாரணங்கள் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

இன்னும் உதாரணம் சொல்லவேண்டுமென்றால், சஹாரா குழும கூட்டுறவு சங்கங்களைச் சொல்லலாம். அதில் பணத்தை டெபாசிட் செய்திருந்த மக்கள் ஏமாற்றப்பட்ட நிலையில், 10 கோடி பேருக்கு, 5000 கோடி ரூபாய் அடுத்த ஒன்பது மாதங்களில் திருப்பித் தரப்படும் என அரசுத் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்கள் இந்த நிறுவனத்தில் கட்டிய பணம் ரூ.24,000 கோடிக்குமேல் என்கிறபோது, அவர்கள் கட்டிய முழுப் பணமும் திரும்ப வர இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டுமோ! பி.ஏ.சி.எல் நிறுவனத்திலும் பணம் கட்டியவர்கள் அதைத் திரும்பப் பெற முடியாமல் தவிக்கிறார்கள்!

ஆகவே, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு, மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்வதை இனியும் தொடரவேண்டாம் மக்களே! உங்கள் பணம்… உங்களுக்கும், உங்கள் வாரிசுகளுக்கும் பயன்படும் வகையில் மட்டுமே உஷாராக முதலீடு செய்யுங்கள் மக்களே!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/personal-finance/money/fraud-schemes-for-carefull-tips

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக