Ad

திங்கள், 20 மார்ச், 2023

சென்னை: சினிமாவை மிஞ்சிய சேஸிங்; 1.5 கிலோ தங்கம் கொள்ளை - ஹெல்மெட் கொள்ளையர்கள் கைவரிசை!

சென்னை நெற்குன்றம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமேஸ்லால் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக கனிஷ் என்ற நகைக்கடையை நடத்தி வருகிறார். இந்த கடை மூலம் சென்னை மற்றும் புறநகரை சுற்றியுள்ள சிறிய சிறிய நகை கடைக்கு நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

இதேபோன்று, திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம், வெங்கல், பூச்சி அத்திப்பட்டு, தாமரைப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறிய சிறிய நகை கடைக்கு வாரத்துக்கு ஒரு முறை கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம், தனது நகைக்கடையில் உள்ள நகைகளை விற்பனை செய்தும் பணத்தை வசூலித்தும் வந்துள்ளார்.

பைஜ்

இந்நிலையில் நேற்று(20.03.23) கனிஷ் நகை கடையில் விற்பனையாளராக பணியாற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோகன்லால், காலூராம் இருவரும் ஒன்றாக, ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் மூக்குத்தி, கம்மல், வளையல், சரடு போன்ற முப்பதுக்கு மேற்பட்ட வகையான தங்க நகைகளை, நெற்குன்றம் கடையிலிருந்து வழக்கம் போல விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.

அவர்கள் நெற்குன்றத்தில் இருந்து நேரடியாக மாதவரத்தில் உள்ள நகை கடைக்கு சென்று, அவர்கள் விரும்பிய மாடலில் நகையை கொடுத்துவிட்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வசூலித்து நகைப்பையில் வைத்துள்ளனர். சோகன் லால் இருசக்கர வாகனத்தை இயக்க காலூராம் பின்னால் அமர்ந்தபடி 1.5 கிலோ எடை கொண்ட நகைப்பையை வைத்துக்கொண்டு இருவரும் வெங்கல் நோக்கி வந்துள்ளனர்.

பூச்சி அத்திப்பட்டு - காரணி பேட்டை இடையே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ஹெல்மெட் அணிந்தவாறு, சேசிங் செய்து, இவர்களின் இருசக்கர வாகனத்தை வழி மறித்துள்ளனர்.

பின்னர் காலூராம் இடமிருந்து நகைப்பையை பிடுங்க முயற்சித்துள்ளனர். காலூராம் கொடுக்க மறுத்ததால் வந்தவர்கள் பட்டாகத்தியைக் கொண்டு அவரை தாக்க முயற்சித்துள்ளனர். இதில் காலுராமுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நகைப்பையை பறித்துக் கொண்ட கொள்ளையர்கள், சோகன் லாலை வெட்ட முயற்சிக்க அவர் தப்பியோடி உள்ளார். தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று கொள்ளையர்களும் செங்குன்றம் நோக்கி இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

வெங்கல் காவல் நிலையம்

கொள்ளை சம்பவம் தொடர்பாக நகை கடை ஊழியர்கள் இருவர் தனது முதலாளியான ராமேஸ்லாலுக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ராமேஸ்லால் கையில் வெட்டு காயம் பட்ட காலூராமை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து நகைக் கடை உரிமையாளர் ராமேஸ்லால் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து வந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபா கல்யாண், கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்து, நகை கடை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

3 ஹெல்மெட் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். நகை கொள்ளையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்தும் போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.



source https://www.vikatan.com/crime/15-kg-gold-theft-by-helmet-thieves-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக