Ad

வியாழன், 9 மார்ச், 2023

`உடலுறுப்பு தானம்: அம்மாக்களும் மனைவிகளுமே முன்னிலை வகிக்கிறார்கள்' - ஆய்வு முடிவுகள்

`உயிருள்ளவர்களிடமிருந்து பெறப்படும் உறுப்பு தானத்தில், பத்தில் ஏழு, அம்மாக்கள் மற்றும் மனைவிகளிடமிருந்தே பெறப்படுகின்றன' என மும்பை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உடல் உறுப்பு தானம்

மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 1,000 உடல் உறுப்பு தானங்கள், பாலின ரீதியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

அதில், உயிருள்ளவர்களிடம் இருந்து பெறப்பட்ட உறுப்பு தானத்தில் 68 சதவிகிதம் பெண்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அதாவது 10-ல் 7 பெண்கள் தங்களின் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் எனத் தெரிந்தது. 

இது குறித்து அம்மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி கூறுகையில், ``உயிருள்ள நபர்களிடமிருந்து பெறப்பட்ட 986 உறுப்பு தானத்தில் 672, பெண்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இவர்களில் 35 சதவிகிதத்தினர், தங்களுடைய சிறுநீரகங்கள் அல்லது கல்லீரலின் ஒரு பகுதியைத் தங்களுடைய கணவர்களுக்குக் கொடுத்துள்ளனர்.

மற்ற 33 சதவிகிதத்தினர் தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுக்கும், 30 சதவிகிதத்தினர் தங்களுடைய குழந்தைகளுக்கும், 2 சதவிகிதத்தினர் தங்களுடைய மாமியாருக்கும் அளித்துள்ளனர். சுமார் 70 சதவிகித உடல் உறுப்பு தானம் திருமணத்துக்குப் பிறகே நடந்துள்ளது’’ எனக் கூறியுள்ளார். 

திருமணம் - மணமக்கள்

இது குறித்து சிறுநீரக மருத்துவர் மதன் பகதூர் கூறுகையில், ``பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் சம்பாதிப்பவராக இருக்கின்றனர். அவர் சரிந்தால் குடும்பமும் சரியும் என்ற விளக்கத்தைதான் இதற்கான காரணமாக அடிக்கடி கேட்க முடிகிறது. ஆனால், மனைவியும் பணிபுரியும் குடும்பங்களில் ஆண்கள் தங்கள் மனைவிகளுக்கு உடல் உறுப்பை தானம் கொடுக்க முன்வருகின்றனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அதோடு, தானம் செய்ய பெண்கள் பெரும்பாலும் மறுப்பு சொல்வதில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.



source https://www.vikatan.com/health/women/research-says-seven-out-of-10-live-organ-donations-made-by-wives-and-mothers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக