Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

பயம், பதற்றம், பெருமூச்சு... சென்னை நீட் தேர்வு மையம் இன்று எப்படி இருந்தது தெரியுமா? #SpotVisit

சென்னை கே கே நகரில் அமைந்திருந்த நீட் தேர்வு மையம் அது. தேர்வு மையம் அமைந்திருந்த சாலையின் இருபுறமும் 100 அடிகளுக்கு முன்பே காவல்துறை தடுப்புகளை அமைத்திருந்தது. காவல்துறை வாகனங்களைத்தவிர வேறு எந்த வாகனத்திற்கும் அதற்கு மேல் அனுமதியில்லை. மதியம் இரண்டு மணிக்கு தொடங்கவிருந்த தேர்விற்கு, காலை 9 மணியிலிருந்தே பெற்றோர்களும் மாணவர்களும் தேர்வு மையத்தின் நுழைவு வாயில் அருகே குழுமத் தொடங்கியிருந்திருந்தார்கள்.

அத்தனை பேர் முகத்திலும் ஏதோ ஒருவகை பதற்றம், அச்சம். எதையெல்லாம் தேர்வு மையத்துக்குள் எடுத்துச் செல்ல வேண்டும், எதையெல்லாம் உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது, எத்தனை மணிக்கு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என காவல் துறை அதிகாரிகளும், தேர்வு மைய அதிகாரிகளும் ஒலிபெருக்கியில் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல மாணவர்களும், பெற்றோர்களும் இன்னும் கூடுதல் பரபரப்போடு எல்லாவற்றையும் சரிபார்க்க தொடங்கியிருந்தார்கள். ஆங்காங்கே ஒரு சில மாணவர்கள் புத்தகங்களை வேகமாகப்புரட்டிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு அருகிலேயே பெற்றோர்களும் அமர்ந்து அவர்களுக்கு வாஞ்சையோடு உணவை ஊட்டிக் கொண்டிருந்தனர்.

நீட் தேர்வு மையம்

மழை சற்று கூடுதலாக பெய்யத் தொடங்கியிருந்ததால் 10.30 மணிக்கே மாணவர்களை உள்ளே அனுமதிக்க தொடங்கியிருந்தார்கள். மாணவர்களுக்கு ஒரு பக்கமும் மாணவிகளுக்கு ஒருபக்கமும் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழையும் ஒவ்வொரு மாணவரின் கைகளிலும் சானிடைசர் தெளிக்கப்பட்டு, உடல் வெப்ப நிலை பரிசோதனை நடந்துக் கொண்டிருந்தது. தேர்வு மைய அலுவலர் ஒருவர் மாணவர்களின் அடையாள அட்டை, ஹால் டிக்கெட் போன்றவற்றை சரி பார்த்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.

வாட்டர் பாட்டில், பேனா, சானிட்டைசர் பாட்டில், சான்றிதழ்களுடன் நின்று கொண்டிருந்த மாணவி ஒருவரை ஏதோ காரணம் சொல்லி அவர் திருப்பி அனுப்ப பெற்றோரிடம் திரும்பி வந்தார். அவர் திரும்பி வருவதை பார்த்ததும் அங்கே நின்று கொண்டிருந்த அத்தனை பெற்றோருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

வேகமாக வந்த மாணவியிடம் "என்னமா, என்னாச்சு? வேற ஏதாச்சும் வேணுமா. ஏன் திரும்பி வந்துட்ட?" மாணவியின் அப்பா அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்ப, அமைதியாக அவரைப் பார்த்த மாணவி, "அப்பா, மூக்குத்தியை கழற்றச் சொன்னாங்கப்பா" எனச் சொன்னதும்தான் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார். மூக்குத்தியை கழற்றிவிட்டு திரும்பிச் சென்ற மகளை அழைத்து, "ஒரு நிமிஷம் இங்க வா மா, அந்த தோட்டையும் கழற்றி கொடுத்துட்டு போ. திரும்ப அனுப்பிடப் போறாங்க" எனத் தோட்டையும் கழற்றச் சொல்லி வாங்கினார். இப்படி ஒவ்வொரு மாணவி உள்ளே நுழையும் போதும், 'கையில் இருந்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் கவரை எடுக்க வேண்டும், பேனாக்கள் அனுமதி இல்லை, சானிட்டைசர் பாட்டிலில் இருக்கும் ஸ்டிக்கரை எடுக்க வேண்டும், தோடு, மூக்குத்தி, கழுத்தில் இருக்கும் செயின் போன்றவற்றை கழற்ற வேண்டும்' எனச் சொல்லி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

நீட் தேர்வு மையம்

ஒவ்வொரு மாணவர் திரும்ப வரும்போதும் என்ன காரணத்திற்கு திரும்ப வருகிறாரோ என அங்கிருந்த ஓவ்வொரு பெற்றோரின் முகத்திலும் அச்சம் பரவிக் கிடந்ததை பார்க்க முடிந்தது. அப்படி திரும்ப பெற்றோரிடம் வந்த ஒரு மாணவி கையில் இருந்த எல்லாவற்றையும் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தரையை பார்த்தவாறு அமைதியாக நின்றுவிட உடன் இருந்த அவருடைய பெற்றோருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"என்ன பாப்பா, பயப்படாம போ. உனக்கு தெரிஞ்சதை எழுதிட்டு வா. அப்பாவும், நானும் இங்கயேதான் நிக்குறோம்" எனச் சொல்லி மகளை தேற்ற முயன்றார் அவருடைய அம்மா. பொறுமையாக அவர்களிடம் இருந்தவற்றை வாங்கிக்கொண்டு திரும்பிச் சென்றார் அந்த மாணவி. மகளை அப்படிப்பார்த்ததும், என்ன செய்வதென்றே தெரியாமல் கலங்கிப் போய் விட்டார் மாணவியின் தந்தை.

நீட் தேர்வு மையம்

இதைப் பார்த்த இன்னொரு மாணவியின் தந்தை, "எக்ஸாம் எழுதப்போற புள்ளைங்ககிட்ட இது வேணாம், அது வேணாம். இதையெல்லாம் கழற்றி கொடுத்துட்டுவான்னு திருப்பி அனுப்பிகிட்டே இருந்தா எப்படி நல்லா எழுதுவாங்க. கொஞ்சமாச்சும் யோசிக்கணும்ல" என ஆதங்கத்தை கொட்டிக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஒவ்வொரு பெற்றோரின், மாணவர்களின் மனநிலையும் அப்படித்தான் இருந்தது. அழுது கொண்டே, திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு முதன்முதலாக பள்ளிக்குள் நுழையும் குழந்தையை அனுப்பி வைத்துவிட்டு வாசலில் அவர்களின் வருகைக்காகக் காத்திருப்பவர்களை போல நின்று கொண்டிருந்தனர் ஒவ்வொருவரும்.

Also Read: ``ஒருவேளை ஃபெயிலாகிட்டா, சீட் கிடைக்கலைன்னா... ஸாரி அப்பா!''

அங்கிருந்த ஒரு மாணவரின் தந்தை ஒருவரிடம் அவருடைய மன நிலையை பற்றிக் கேட்டேன். முதலில் பேசத்தயங்கினார். பிறகு அவரே நம்மிடம் வந்து பத்திரிகையில பேர் ஏதும் போட்டுடாதீங்க எனச் சொல்லிவிட்டு, "என்ன பண்றது புள்ளைங்கள பார்க்கவே கஷ்டமா இருக்கு. பயந்து பயந்து போறாங்க. காலையில 7 மணிக்கு சாப்பிட்டது. ஏதாச்சும் சாப்பிட்டுட்டு போம்மான்னு சொன்னா எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இதுல மாஸ்க், கையில கிளவுசெல்லாம் வேற போட்டுக்கிட்டு போறாங்க. ஏதோ ஒரு நம்பிக்கை இந்த எக்ஸாம் எழுதி நல்ல மார்க் எடுத்துட்டா. மெடிக்கல் சீட் கிடைச்சு, நல்ல நிலைமைக்கு வந்துடலாம்னு. அதுக்காகதான் இவ்வளவும்.

நீட் தேர்வு மையம்

பிளஸ் டூ பொதுத் தேர்வு, நீட் ரெண்டு எக்ஸாமுக்கும் ஒரே மாதிரிதான் படிக்கிறாங்க. சொல்லப் போனா அதைவிடவும் இதுக்கு நிறைய படிக்க வேண்டியது இருக்கு. சி.பி.எஸ்.சி-ல படிச்ச பசங்களுக்கே இது கஷ்டமாதான் இருக்கும். கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்ச பசங்களெல்லாம் இன்னும் நிறைய படிக்கணும். பசங்களை எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுத்தணும்னு தெரியல. மத்த நேரம்னா கூட பரவால்ல, இந்த கொரோனா சூழல்ல அவங்களோட பாதுகாப்பும் முக்கியம்தானே?" என்றார் கவலையுடன்.



source https://www.vikatan.com/government-and-politics/education/spot-visit-experience-at-a-neet-examination-centre

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக