Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

`என் மேல கை வைக்கிற அளவுக்கு வளந்துட்டியா!’ - சுத்தியலால் தம்பியைக் கொன்ற அண்ணன்

ஈரோடு கமலா நகரைச் சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு சங்கர் (30), தினேஷ் (20) என 2 மகன்கள் உள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவருமே கட்டட வேலைக்குச் செல்பவர்கள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம்தான் குடும்பத்தின் நிதியாதாரம். சங்கர் திருமணமாகி மனைவியுடன் வண்டியூரான் பகுதியில் தனிவீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். சங்கரின் அதீத குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் தினமும் சண்டையும் களேபரமுமாக இருந்து வந்திருக்கிறது. இதனால் சங்கரின் மனைவி கோபித்துக் கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட தினேஷ்

கொரோனாவால் வேலையில்லாதது ஒரு பக்கம், மனைவி பிரிந்துச் சென்றது ஒருபக்கம் என சங்கர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். குடிப்பழக்கம் மேலும் கூடிப்போனது. இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் கீழே விழுந்து ரத்தக் காயங்களுடன் தந்தை வீட்டிற்கு சங்கர் சென்றிருக்கிறார்.

`ஏன்டா இப்படி பண்ணிட்டு இருக்க. இதெல்லாம் நல்லா இருக்கா. கேக்க ஆள் இல்லைன்னு இப்படி செஞ்சிக்கிட்டு இருக்கியா?’ என தந்தை மனோகரன் சங்கரைக் கண்டித்ததாகச் சொல்கிறார்கள். இதில், கோபமான சங்கர் குடிபோதையில் தந்தையை அடிக்கப் பாய்ந்துள்ளார். அருகிலிருந்து தம்பி தினேஷ் அதனை தடுத்ததோடு, சுரேஷை அடித்து வீட்டை விட்டு துரத்தியதாகக் கூறப்படுகிறது.

Also Read: கணவனைக் கொன்ற மனைவி... மனைவியைக் கொன்ற கணவன்... போலீஸை தாக்கிய இளைஞர்!- `குடி'யால் திணறும் கோவை

உயிரிழந்த தினேஷ்

மறுபடியும் நேற்று காலை தந்தையின் வீட்டுக்கு சங்கர் வந்திருக்கிறார். வீட்டில் அம்மா, அப்பா இல்லாத நிலையில், அவரது தம்பி தினேஷ் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். கோபம் குறையாதவராய், `என் மேல கை வைக்கிற அளவுக்கு வளந்துட்டியா’ எனச் சொல்லிக்கொண்டே, வீட்டிலிருந்த சுத்தியலால் தினேஷின் தலையில் சங்கர் அடித்திருக்கிறார். அதில், துடிதுடித்து தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர தப்பித்துச் சென்ற சங்கர், ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்.

`குடிபோதையில் இருந்த என்னை தப்பா பேசி, அடிச்சான் என் தம்பி. அந்தக் கோபத்துல என்ன செய்றதுன்னு தெரியாம தப்பு நடந்துப் போச்சு’ என போலீஸாரிடம் கூறியிருக்கிறார். அதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று தினேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், சங்கர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/man-kills-brother-in-erode-surrenders-before-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக