போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த கூலிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவருக்குச் சொந்தமான பூர்வீக நிலம் ராமநாதபுரம் போக்குவரத்து நகர் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை காரிக்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த நூர்முகம்மது என்பவர், தனது அரசியல் செல்வாக்கு மற்றும் பணபலத்தைப் பயன்படுத்தி அபகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாத்திமா பீவி குடும்பத்தினர், மேற்கண்ட நிலத்தைத் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், பட்டா மாறுதல் செய்யக் கூடாது என ராமநாதபுரம் வட்டாட்சியரிம் மனு அளித்திருக்கிறார்கள்.
Also Read: இரண்டு வருடங்களுக்கு முன்.... நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு..! இன்றைய நிலை என்ன?
இந்நிலையில், பாத்திமா பீவி குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்காமலே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் வட்டாட்சியரிடம் கேட்டபோது அவர் முறையான பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனிடையே முகம்மது நூர்முகம்மது உள்ளிட்ட சிலர் பாத்திமா பீவியின் நிலத்தில் அத்துமீறி நுழைந்ததுடன் அந்த நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகவல் அறிந்த பாத்திமா பீவி, தனது மகன் அப்பாஸ்கான் மற்றும் குடும்பத்தினருடன் அங்கு சென்று நூர்முகம்மது தரப்பினரை வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த அவர்கள், `இனிமேல் இந்த இடத்திற்குள் வரக் கூடாது. மீறி வந்தால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவோம்’ என மிரட்டியதாகச் சொல்கிறார்கள். மேலும் ரவுடிகள் மூலம் அப்பாஸ்கானையும் மிரட்டியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இது குறித்து புகார் அளிக்க பாத்திமா பீவி மற்றும் அவரது மகன் அப்பாஸ்கான் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது அப்பாஸ்கான், தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்னையை தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதனைக் கண்ட சிலர் கூச்சல்போடவே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். தீக்குளிக்க முயன்ற அப்பாஸ்கானின் தலையில் தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டு சமாதானப்படுத்தினர். இதன்பின் மாவட்ட ஆட்சியரிடம் பாத்திமா பீவி அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து சென்றனர். ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரப்பு நிலவியது.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/man-tried-to-commit-suicide-in-ramnad-collector-office-premises
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக