Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

திருச்சி: `அடிதடி, நாற்காலிகள் உடைப்பு!’- அதகளமான அ.தி.மு.க இளைஞரணிக் கூட்டம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க இளைஞரணிக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு தரப்பினர் நாற்காலிகளை எடுத்து வீசத்தொடங்கியதால், அமைச்சர் வளர்மதி, மா.செ உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வினர்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ரெங்கபவனம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி, பாசறை மாநிலச் செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ உள்ளிடோர் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் காலை 10.30 மணிக்குத் துவங்கியது.

அப்போது மண்டபத்திற்குள் மஞ்சள் நிறக்கொடியுடன் புகுந்த 30 பேர், `அ.தி.மு.க மா.செ பணத்திற்கு அடிமையாகிவிட்டார்’ ,`சரியான நபர்களுக்குப் பதவி கொடுக்கவில்லை’ என்று கோஷமிட்டு வாக்குவாதம் செய்ததோடு, திடீரென அங்கிருந்த நாற்காலிகளை மேடையை நோக்கி வீசத் தொடங்கினார்கள்.

தூக்கி விசப்பட்ட எம்.ஜி.ஆர் படம்

இதனைத் தட்டிக்கேட்க வந்த மா.செ பரஞ்ஜோதியின் தம்பி அன்பரசனைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதனைக் கண்டதும் மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். பின்னர் தகராறு செய்தவர்கள் வெளியேறிய பின்னர் கூட்டம் நடந்தது.

அ.தி.மு.க-வினருக்குள் அடிதடி

பின்பு இச்சம்பவம் தொடர்பாகப் பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Also Read: ``பன்னீர் பாய்ச்சலும்... பகடையாடும் எடப்பாடியும்!”- அ.தி.மு.க. அதிரடிகள்

கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``இப்பகுதியில் மாவட்டச்செயலாளராக பரஞ்ஜோதியை நியமித்ததிலிருந்தே பல்வேறு பிரச்சனைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் பதவியை மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அந்தப் பதவி கிடைக்காத ஆத்திரத்தில், அவரது உறவினர் திலீப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் தகறாறில் ஈடுபட்டனர்.

உடைக்கப்பட்ட நாற்காலிகள்

அப்போது மா.செ பரஞ்ஜோதியின் தம்பி அன்பரசன் எதிர்த்து கேள்விகேட்டதும் அவரை தாக்கத் தொடங்கினார்கள். மேலும், முத்தரையர் சங்கத்தினர் பயன்படுத்தும் மஞ்சள் நிறக்கொடியுடன் வந்ததால் அவர்களை யாரும் தடுக்கவில்லை. மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி பணத்தை வாங்கிக்கொண்டு பதவி நியமனங்களைச் செய்ததாகக் குற்றம்சாட்டுகிறார்கள். அதனை எதிர்த்ததால்தான் இந்தப் பிரச்னையே. இதுகுறித்து தலைமைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறோம்’’ என்றனர்.

அ.தி.மு.க அடிதடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியில் அ.தி.மு.க-வினர் அடித்துக்கொள்ளும் விதம் மக்களை முகம் சுழிக்க வைத்துவிட்டதாகக் கொந்தளிக்கிறார்கள் அக்கட்சித் தொண்டர்கள்.



source https://www.vikatan.com/news/politics/tussle-between-two-factions-in-srirangam-admk-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக