Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

`பாகிஸ்தான் கொடியா... முஸ்லிம் லீக் கட்சிக் கொடியா?’ - கர்நாடக போலீஸின் வைரல் வீடியோ

கர்நாடக மாநிலம் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் கார் ஒன்று பச்சை நிறத்திலான கொடியை, முன்பக்கம் கட்டி கொண்டு வருவதை பார்த்த கர்நாடக போலீஸார், பாகிஸ்தான் கொடி என நினைத்து அதை அகற்றியிருக்கிறார்கள். உண்மையில் அந்தக் கொடி, முஸ்லீம் லீக் கட்சியின் கொடி. அதை நீக்கிவிட்டு இந்திய தேசிய கொடியை போலீஸார் காரில் மாட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் சம்பவங்கள் நடப்பது கடந்த பல ஆண்டுகளாகவே வாடிக்கையாகிவிட்டது. எல்லையில் ராணுவ தாக்குதல்கள் ஒரு புறம் இருக்க, ஒரு நாட்டை இழிவு படுத்த அந்நாட்டின் தேசியக் கொடி அவமதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனமான டான் தொலைக்காட்சியை மர்மநபர்கள் சிலர் ஹேக் செய்து, இந்தியாவின் தேசியக் கொடி பறக்கும் காட்சியை சுதந்திர தின வாழ்த்துக்கள் என்ற வாசகத்தோடு ஒளிபரப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கர்நாடக போலீஸார்

சமீபத்தில், காஷ்மீரில் உள்ள பந்திப்போரா மாவட்டத்தில் ஹஜின் என்ற இடத்தில், பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, பந்திப்போரா போலீஸார் 3 பேரைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு கையெறி குண்டு, துணி, கொடிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர்.

Also Read: UNSC: இரு இந்தியர்களைப் பயங்கரவாதிகளாக முன்னிறுத்திய பாகிஸ்தான்! - தோல்வியில் முடிந்த முயற்சி

இந்நிலையில், பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி அருகே வீரசந்திரா பகுதியில் நேற்று காலை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட ஒரு கார் பெங்களூரு நோக்கி வந்து கொண்டு இருந்தது. தமிழக பதிவு எண்ணுடன் வந்த, அந்த காரின் முன்பகுதியில் பச்சை நிற கொடி கட்டி இருப்பதை கவனித்த போலீஸார், வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

காரின் முன்பகுதியில் கட்டப்பட்டிருந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியை, பாகிஸ்தான் நாட்டு கொடி என்று தவறுதலாக கர்நாடக போக்குவரத்து போலீஸார் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதுகுறித்து காரில் வந்த 2 பேரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு, காரில் வந்த நபர்கள் சரியாகப் பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

கர்நாடக போலீஸ்

அது, பாகிஸ்தான் நாட்டு கொடி என நினைத்த போக்குவரத்து போலீஸார் உடனடியாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியை நீக்கிவிட்டு, இந்திய தேசியக் கொடியை, காரின் முன்பக்கம் கட்டச் சொல்லியிருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இந்த வீடியோவை பார்த்த ஒருசாரர் போக்குவரத்து போலீஸாரின் தேசப்பற்றுக்கு லைக் தெரிவித்து வருகிறார்கள். ``காரில் இருந்து நீக்கப்பட்டது பாகிஸ்தான் கொடி இல்லை. அது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி. கொடியின் அடையாளம் தெரியாத போலீஸார் கொடியை நீக்கி இருக்கிறார்கள்’’ என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் கொடி

``பாகிஸ்தான் கொடியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கும். இரண்டு கொடிகளிலும் நட்சத்திரத்துடன் கூடிய பிறைநிலா இடம்பெற்றிருக்கும். ஆனால், பாகிஸ்தான் கொடியின் பச்சை நிறத்துக்கு அருகில் வெள்ளைநிறம் இடம்பெற்றிருக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் வெள்ளை நிறம் இடம்பெற்றிருக்காது. இந்த வித்தியாசத்தை கர்நாடகப் போக்குவரத்து போலீஸார் கவனிக்க மறந்துவிட்டனர்’’ என்றும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/india/karnataka-police-removed-iuml-flag-removed-from-the-car

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக