மும்பை மாநகரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியிருப்பதாக ட்விட்டரில் நடிகை கங்கனா கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்து சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த சர்ச்சைகள் வெடித்தன.
இதையடுத்து, மும்பையில் இருக்கும் கங்கானாவின் அலுவலக வளாகம் , சட்ட விரோதக் கட்டுமானத்தில் இருப்பதாகக் கூறி மும்பை மாநகராட்சி ஊழியர்கள் அதை இடிக்கத்தொடங்கினர். ஆனால், மும்பை ஹைகோர்ட்டின் தலையீட்டால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கு எதிராக, ட்விட்டரில், "தனது கட்டடம் இடிக்கப்பட்டது போல் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும்" என்று தனது ஆதங்கத்தைப் பதிவிட்டிருந்தார் கங்கனா. அவருக்கு சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சர்ச்சைகள் தொடரும் நிலையில் சூரத்தைச் சேர்ந்த புடவை வடிவமைப்பாளர் ராஜத் தவார் என்பவர் கங்கனாவின் செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, கங்கனாவின் உருவம் பதிக்கப்பட்ட புடவை ஒன்றை வடிவமைத்து அதில், 'I SUPPORT KANGANA RANAUT' என்பதை நூல் வேலைப்பாடுகள் மூலம் பிரின்ட் செய்துள்ளார். அந்தப் புடவையை 1,000 ரூபாய்க்கு விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளார்.
புடவை வடிவமைப்பாளர் ராஜத் வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் "கங்கனா மக்களின் சார்பாகப் பேசுகிறார். அவரின் செயல்பாடுகள் அரசியல் கட்சிகளால் வேறு விதமாகத் திசைத் திருப்பப்படுகிறது. அதனால் கங்கனா பாதிக்கப்படுகிறார். கங்கனாவின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக எங்கள் நிறுவனம் இந்தப் புடவையை வடிவமைத்துள்ளது. எங்களின் முயற்சிக்கு மக்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் 'இந்தி தெரியாது போடா' 'தமிழ் பேசும் இந்தியன்' என்று பிரின்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்கள் டிரெண்ட் ஆனது போன்று கங்கனா புடவையும் டிரெண்ட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: `இந்தி தெரியாது போடா...', `தி.மு.க வேணாம் போடா' - டிரெண்டாகும் ஹேஷ்டேக் பின்னணி சீக்ரெட்!
source https://www.vikatan.com/fashion/surat-man-launched-new-design-saree-to-support-kangana-ranaut
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக