Ad

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

சென்னை: `அவளுக்குத் திருமண வாழ்க்கையும் சரியா அமையலை!' -மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பெண்ணின் சகோதரி

சென்னை, புளியந்தோப்பு நாராயணசாமி தெருவில் நடந்து சென்ற அலிமா (35) என்ற பெண், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி, பார்க்கும்போதே மனதை பதறவைக்கிறது. `சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் நடந்துவரும் அலிமா, திடீரெனச் சுருண்டு தண்ணீருக்குள் விழுகிறார். அதை அதிர்ச்சியோடு அந்த வழியாகச் செல்பவர்கள் பார்க்கின்றனர்

நடந்து வரும் அலிமா

பின்னர், அலிமாவை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் தூக்கிக்கொண்டு போய் ஒரு வீட்டின் வாசலில் படுக்கவைக்கின்றனர். அப்போது வரை அலிமா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உடனடியாக வரவில்லை. ஒரு மணி நேரம் காலதாமத்துக்குப் பிறகு வந்த ஆம்புலன்ஸில் அலிமாவை அழைத்துச் செல்லும் வரையிலான சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. மருத்துவமனையில் அலிமாவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து புளியந்தோப்பு போலீஸார் விசாரணை நடத்தியதில், மின்சாரம் பாய்ந்து அலிமா உயிரிழந்தது தெரியவந்தது. நாராயணசாமி தெருவிலுள்ள மின்கம்பத்துக்குச் செல்லும் மின் இணைப்பில் கசிவு இருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னை மாநகராட்சிக்கு சில நாள்களாகத் தொடர்ச்சியாக புகார்களைத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அலிமா உயிரிழப்பதற்கு முன்னர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியும் மூதாட்டி ஒருவரும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்திருக்கிறார்கள். நல்ல வேளையாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அலிமாமீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பிறகே, மின்கசிவைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்திருக்கிறார்கள்.

அலிமா

`அலிமாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் சோகமயமானது’ என்று அவரின் சகோதரி ஜென்னத் காவல் நிலையத்தில் தெரிவித்திருக்கிறார். காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், `என்னுடைய தந்தை முகமது அலி, அம்மா நூர்ஜஹான். எனக்கு இரண்டு சகோதரிகள். அவர்களில் ஒருவர் அலிமா. அவர் படிக்கவில்லை. அலிமாவுக்கும் ஷேக் முகமது என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அப்துல் ரகுமான் (10) என்ற மகன் இருக்கிறான். அலிமாவுக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர். அப்துல் ரகுமானையும் அலிமாவின் கணவர் ஷேக் முகமது தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார்.

Also Read: கோவை: கட்டாயப்படுத்திய அப்பார்ட்மென்ட்; மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இளைஞர்

அதனால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அலிமா தனியாக வாழ்ந்துவந்தார். அவர் எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்து பல இடங்களுக்குச் சென்று வீட்டு வேலை செய்துவந்தார். 14.9.2020 காலையில், நாராயணசாமி தெருவிலுள்ள ஹாகிதா பேகம் என்பவரின் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார். காலை 9:15 மணியளவில் மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்திருக்கிறார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நானும் எனது குடும்பத்தினரும் நாராயணசாமி தெருவுக்கு வந்து பார்த்தபோது, எனது தங்கை அலிமா இறந்துகிடந்தார். இரவு பெய்த கனமழை காரணமாக நாராயணசாமி தெருவில் மழைநீர் தேங்கி இருந்த இடத்தில் மின்கசிவு ஏற்பட்டு, என் தங்கை இறந்தது தெரியவருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு என் தங்கையின் சடலத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜென்னத்திடம் பேச அவரின் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை.

Also Read: மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் உயிரிழப்பு! - பெயின்டிங் வேலையின் போது விபரீதம்

எஃப்.ஐ.ஆர்

அலிமா உயிரிழந்ததையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `சம்பந்தப்பட்ட மண்டலத்தின் உதவி கோட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலைப் பொறியாளர் வெங்கடராமன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மொத்தம் 2,85,000 தெரு விளக்குகளும் 7,220 மின்பெட்டிகளும் இருக்கின்றன. இவற்றைப் பராமரிப்பதற்காக மாநகராட்சியில் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 700 பேர் நாள்தோறும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது 200 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எந்த இடத்திலும் மின்கசிவோ அல்லது பழுதோ இல்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/death/chennai-woman-died-of-electric-shock

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக