Ad

திங்கள், 14 செப்டம்பர், 2020

``கொரோனா சீன ஆய்வகத்திலிருந்து பரவியதுதான்!" - மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் வைராலஜிஸ்ட்

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

கொரோனா தொற்று எங்கு, எப்படி ஏற்பட்டது என்ற கேள்விக்கான பதில் இன்னும் யூகங்களின் அடிப்படையிலேயே உள்ளது. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த வைரஸ் நிபுணர் லி- மெங் யான், கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் மாகாணத்தில் உள்ள ஓர் ஆய்வகம் மூலமே பரவி உள்ளதாகவும், அதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்

லி மெங் யான், ஹாங்காங்கில் உள்ள ஒரு பொது சுகாதார மையத்தில் பணியாற்றி, கடந்த ஆண்டு முதலே கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், 'வூகான் மாகாணத்தில் ஏற்பட்ட நிமோனியா தொற்று குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டபோது, நான் கொரோனா வைரஸை கண்டறிந்தேன்' என்றிருக்கிறார் யான்.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மிக ஆரம்ப நாள்களில், உலக சுகாதார மையம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, உலகத்திற்கு ஏற்படப்போகும் அபாயம் குறித்து தான் விட்ட எச்சரிக்கையையும் சீன அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்கிறார் யான்.

சமீபத்திய தன் வீடியோ இன்டர்வியூவில் யான், "சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வூகான் ஆய்வகத்தில் இருந்தே வைரஸ் பரவி உள்ளது . வூகானில் உள்ள மீன் அங்காடியில் இருந்து தொற்று பரவியதாகக் கூறப்படுவது வெறும் கண்துடைப்பே. இந்தத் தகவல் சைனாவின் தொற்று நோய்கள் தடுப்பு மைய மருத்துவர்கள் மூலம் எனக்குத் தெரியவந்துள்ளது. இந்தத் தொற்று இயற்கையாக ஏற்படவில்லை. இந்த வைரஸின் மரபணுத் தொகுப்பை பார்க்கும்போது அதில் மனித கைரேகை போல் தெரிகின்றது.

கொரோனா தொற்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது, அதை முறையாக ஆரம்ப கட்டத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது கொள்ளை நோயாக மாறும் என்பது சீன அதிகாரிகள் முன்னரே அறிந்த ஒன்று. உலகிற்கு இந்த நோய் குறித்து எச்சரிக்கை விடுத்து இந்தக் கொள்ளை நோயால் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்த நான் முன் வந்த வேளையில் சீன அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை.

கொரோனா வைரஸ்

உயிரியல் தெரியாதவர்கள்கூட ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் வந்துள்ளது என்பதை கண்டறிய முடியும். முதலில் வைரஸ் தொற்று எங்கிருந்து வந்தது என நாம் அறிவது இன்றியமையாத ஒன்று" என்று கூறினார்.

சீன அதிகாரிகள் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளதால், பாதுகாப்பு கருதி தான் அமெரிக்கா சென்று மறைவாக வசிப்பதாகவும், சீன அதிகாரிகள் தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் யான்.

வூகான் வைரஸ் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் யூவான் சிகிமிங், கொரோனா தொற்று ஆய்வகத்தின் மூலம்தான் பரவியுள்ளது என்பதை ஏற்கெனவே மறுத்து வந்துள்ளார். சீன அதிகாரிகள் யானின் இந்தக் காணொளிப் பற்றி எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை.



source https://www.vikatan.com/health/healthy/virologist-says-covid-19-was-made-in-wuhan-lab-by-chinese-govt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக