கோவிட்-19 பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின்போது கிரெடிட் கார்டுகளின் பயன்பாட்டை டெபிட் கார்டுகள் ஓவர் டேக் செய்துவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் 20.3 கோடி முறை கிரெடிட் கார்டு பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
லாக்டௌன் காலமான ஜூன் மாதத்தில் பரிமாற்றத்தின் எண்ணிக்கை 12.5 கோடியாகக் குறைந்துள்ளது. டெபிட் கார்டுகளைப் பொறுத்தவரையில், ஜனவரி மாத்தில் 45.8 கோடி முறைமும் ஜூன் மாதத்தில் 30.2 கோடி முறையும் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
குறைந்த ஒட்டுமொத்த பயன்பாடு!
ஒரு கிரெடிட் கார்டுக்கு 15 டெபிட் கார்டுகள் என்ற விகிதத்தில் இந்தியாவில் பயன்பாடு உள்ளது. ஜனவரி மாதத்தில் ரூ.12,000-ஆக இருந்த ஒரு கிரெடிட் கார்டின் சராசரி பயன்பாடு அதிரடியாகக் குறைந்து ஜூன் மாதத்தில் ரூ.7,474 ஆக உள்ளது. அதே போன்று ஜனவரி மாதத்தில் ரூ.761 ஆக இருந்த ஒரு டெபிட் கார்டின் சராசரி பயன்பாடு ஜூன் மாதத்தில் ரூ.558 ஆகக் குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் இரண்டு கார்டுகளின் ஒட்டுமொத்த பயன்பாடு குறித்த புள்ளிவிவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்தில் ரூ.67,000 கோடி கிரெடிட் கார்டின் ஒட்டுமொத்த பயன்பாடாக இருந்தது. ஜூன் மாதத்தில் அது 36 சதவிகிதம் குறைந்து ரூ.42,818 கோடியாக உள்ளது. அதே சமயம் டெபிட் கார்டுகளின் பயன்பாடு ஜனவரி மாதத்தில் ரூ.62,153 கோடியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று காலமான ஜூன் மாதத்தில் அது வெறும் 24 சதவிகிதம் மட்டுமே குறைந்து ரூ.47,252 கோடியாக உள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் டெபிட், கிரெட் கார்டுகளின் பயன்பாடு பெருந்தொற்று காலத்தில் குறைந்துள்ளது. இருந்தாலும், கிரெடிட் கார்டுகளை ஒப்பிடும்போது டெபிட் கார்டுகளின் பயன்பாடு அதிக வீழ்ச்சியடையவில்லை. மெட்ரோ நகரங்களில் சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், சுற்றுலா ஆகியவற்றுக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இவையனைத்தும் லாக்டெளன் காலங்களில் செயல்படாத காரணத்தால் கிரெடிட் கார்டின் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால், சில்லறை வணிகத்தில் டிஜிட்டல் பரிமாற்றம் அதிகளவில் அதிகரித்துள்ளது. மளிகை சாமான்கள், காய்கறிகள் வாங்குதல் மற்றும் மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பயன்பாட்டு கட்டணங்கள் ஆகியவற்றை டிஜிட்டல் பரிமாற்றம் மூலம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
அதேபோன்று பணப்புழக்கத்திலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.150 கோடிக்கும் அதிகமாக ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ (UPI) பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. பணப்புழக்கத்தால் நோய்த்தொற்று ஏற்படும் அச்சம், வீடுகளில் இருந்தபடியே வீட்டு உபயோகப் பொருள்கள், மளிகை, காய்கறிகளை ஆர்டர் செய்து வாங்குவது போன்ற காரணத்தால் யுபிஐ பரிமாற்றங்கள் அதிக அளவில் நடைபெற்றுள்ளன.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரிடம் ஒரு புதிய பழக்கம் உருவாகியுள்ளதாம். அதாவது, கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையை குறைத்துள்ளனர். வட்டி விகிதம் அதிகரிக்கக் கூடும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்ட காரணத்தால் நிலுவைத் தொகையை குறைத்துள்ளனர். அதற்குப் பதிலாகக் குறைந்த வட்டி விகிதத்தில் பாதுகாப்பான கடன் வசதியை நாடியுள்ளனர். லாக்டௌன் தளர்வுகள் அமலில் இருப்பதால் இந்த டிரெண்டில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்தால் 45 நாள்களுக்கு வட்டி கிடையாதா?
source https://www.vikatan.com/business/finance/consumers-spend-more-in-debit-cards-than-credit-cards-due-to-lockdown-impact
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக