சேலத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செவ்வாய்ப்பேட்டை, அரிசிபாளையம், சத்திரம் போன்ற தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சத்திரம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை வெள்ளம் சூழ்ந்ததால் அம்மா உணவகம் மூடப்பட்டது. இதேபோல சேலம் மாநகராட்சியில் உள்ள சூரமங்கலம், பெரமனூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி, மணக்காடு, கிச்சிப்பாளையம், பழைய பேருந்து நிலையம், அன்னதானப்பட்டி, கொண்டலாமபட்டி என பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
சேலம் சிவதாபுரத்தில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி வழிந்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி வழியாக சென்ற வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானது. அதேபோல சூரமங்கலத்தில் தாழ்வான பகுதியில் உள்ள பலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் பாத்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினார்கள். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
இதுபற்றி சேலத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த குமரன், ''சேலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சேலத்தாம்பட்டி ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை ரயில்வே டிரேக் இரண்டாக பிரித்து விட்டது. இந்த ஏரிக்குள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மழை வந்தால் ஏரி பகுதியில் உள்ள குடியிருப்புகள், மின்சார வாரியம், உணவு கிடங்கிற்குள் தண்ணீர் புகுந்து விடும்.
அதனால் அதிகாரிகள் ஏரியை உடைத்து விடுகிறார்கள். இதனால் சிவதாபுரம், அம்மன் நகர், எம்.ஜி.ஆர் நகர், இந்திரா நகர், செஞ்சிகோட்டை என பல பகுதிகளில் உள்ள சுமார் 13 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்படும். மழை நீரும், கழிவு நீரும் தேங்கி பல தொற்று நோய்கள் உண்டாகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை தூர்வாரச் சொல்லி 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை'' என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/heavy-rain-in-salem-people-struggles
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக