புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அதுகுறித்து பேசிய புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான சிவா, ``புதுச்சேரியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு நில மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி தொடர்ந்த வழக்கில் சார் பதிவாளர் சிவசாமி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்ட கும்பலுக்கு ஒரு சார் பதிவாளரே துணை இருந்துள்ளதால், அவர் தொடர்ந்து பணியாற்றிய வில்லியனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த பத்திரப் பதிவுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
அவரை காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு போலி பதிவுகள் வெளிச்சத்திற்கு வரும் என்றும் தி.மு.க சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல் புதுச்சேரி அரசு மௌனமாக இருந்து வருகிறது. புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள், கோயில் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்வதை சிலர் தொழிலாக கொண்டிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நில அபகரிப்பை தடுக்க நில அபகரிப்பு செல் உருவாக்கப்பட்டது. அந்த குழுவை செயல்பாட்டிற்கு கொண்டு வாருங்கள். பதிவுத் துறையில் ஆய்வு செய்து போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் பதிவு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், போலியாக பதிவு செய்த சொத்துக்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தினேன்.
அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை. இதனிடையே புதுச்சேரியில் உள்ள பத்திரப் பதிவுத் துறைகளில் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 மார்ச் மாதம் வரை பட்டா தரவுகள் அனைத்தும் கம்யூட்டரில் இருந்து மாயமாகி உள்ள விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பட்டா தரவுகள் எடுக்க முடியாமலும், மாற்றிய பட்டாக்களின் தரவுகள் கலைக்கப்பட்டுள்ளதால், பட்டா மாற்ற முடியாமலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அரசு பதிவுத் துறையில் பட்டா தரவுகள் மாயமாகியுள்ள இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த பதிவுத் துறையும் சதி வேலையில் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
கோவில் நிலம், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் போலியாக பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்பதற்கு பட்டா தரவுகள் மாயமாகியிருப்பது உறுதிப்படுத்துகிறது. யாரை காப்பாற்றுவதற்காக இந்த அரங்கேற்றம் என்பதை அரசு தெரிவுபடுத்த வேண்டும். பத்திரப் பதிவுத் துறையில் சார் பதிவாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும். துறை சார்ந்த அனுபவம் இல்லாதவர்கள் பதிவுத்துறையின் கணினிப் பிரிவில் பணியாற்றுவதால் ஏற்படும் சிக்கலை களைவதற்கு அதற்கென பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும்.
அரசுக்கு வருமானம் ஈட்டக் கூடிய பத்திரப் பதிவுத்துறை அனுமதி பெறாத மனைகளை பதிவு செய்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை தடுத்து சார் பதிவாளர்கள் தனது சொந்த வருமானத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். இது தொடர்ந்து நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அதனால் கடந்த 10 வருடங்களாக பத்திரப் பதிவுத்துறையில் நடந்த மோசடி குறித்து வந்த புகார்கள், அவற்றின் மீது எடுத்த நடவடிக்கைகளுடன், விடுதலைக்கு பின் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான மொத்த புறம்போக்கு நிலங்கள் மற்றும் தற்போது உள்ள நிலங்கள் குறித்தும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆகவே, நில அளவைத் துறையில் பதிவு செய்த பட்டா தரவுகள் மாயமாகி உள்ளதால் ஒட்டுமொத்த நில அளவைத்துறை அதிகாரிகளையும், காமாட்சி அம்மன் கோயில் இடத்தை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சார் பதிவாளர் உள்ளிட்ட அனைவரையும் சி.பி.ஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து, எந்தவித அரசியல் தலையீடுமின்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-dmk-seeks-cbi-inquiry-over-deed-registration-department
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக