ஆண்-பெண் இருவருக்கிடையேயான உறவு முடிவுக்கு வரும்போது, பெண்ணுக்கே சேதாரங்கள் அதிகமாக இருக்கும். அத்தகைய சூழலில், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக சில பெண்கள் கூறுவார்கள். ஆனால், அந்த உறவை அவர்கள் தேர்ந்தெடுக்கும்போதே, இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். பின்னாளில் ஏமாற்றப்பட்டால்கூட, சட்டமும் சமூகமும் தனக்காக நியாயம் கேட்கும் அளவுக்கு சட்டப் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், சம்பந்தப்பட்ட பெண் பாதிக்கப்பட்டவராகக் கருதப்பட மாட்டார் என்பதுதான் நிதர்சனம். சமீபத்திய சில சம்பவங்கள் இதைத்தான் உணர்த்துகின்றன.
மணமான பெண் ஒருவர், கணவரைப் பிரிந்து குழந்தையுடன் வசித்துவந்த நிலையில், இன்னோர் ஆணைக் காதலித்தார். ஒருகட்டத்தில் இருவருக்குமிடையே மோதல் வரவே, ‘திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிவிட்டார்’ என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘சட்டப்படி விவாகரத்து பெறாத பெண், இன்னோர் ஆண் தனக்கு திருமண வாக்குறுதி தந்து ஏமாற்றியதாகக் கூறும் புகாரை ஏற்க முடியாது’ என்று வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.
சமீபத்தில் சமூக வலைதளங்களில், சில ஆண்கள் தங்களை ஏமாற்றியதாகக் கூறி, உரையாடல் ஸ்க்ரீன்ஷாட்களை சில பெண்கள் பகிர்ந்தது வைரல் ஆனது. அந்த உரையாடலிலேயே, அந்த ஆண்கள் ஒரு குறுகிய கால உறவுக்காகவே அணுகியதும், திருமணம் போன்ற எந்த உத்தரவாதமும், ஒப்பந்தமும் இல்லை என்பதும், ஓர் உணர்வு வயப்பட்ட நிலையில் இந்தப் பெண்கள் அவ்வுறவில் இணைந்ததும் தெரிகிறது. ஆக, இங்கேயும் சட்டரீதியிலான எந்தவித பாதுகாப்புமில்லாத நிலைதான். ஆக, அதற்கான எதிர்விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது.
இன்றைய சூழலில் லிவ் இன் (Live-In), ஃபிரெண்ட் வித் பெனிஃபிட் (Friend with benefit), சிச்சுவேஷன்ஷிப் (Situationship), ஃப்ளிங் (Fling), ஒன் நைட் ஸ்டாண்ட் (One-night stand) என ரிலேஷன்ஷிப்பில் பல வகைகள் உலவுகின்றன. இவை அனைத்துக்குமான ஒரே தன்மை... ‘நமக்கு இடையில் எந்த அன்பு, உறவு ஒப்பந்தமும் இல்லை, குறுகியகால ரொமான்டிக் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து பிரிவோம்’ என்பது மட்டுமே. மேலும், லிவ் இன் உறவு முடிவுக்கு வரும்போது விலகாமல், ஏமாற்றப்பட்டதாகக் கூறுவது, அந்த உறவின் நியதிப்படி ஏற்புடையது அல்ல என்றே கருதப்படுகிறது.
ஆக, ஓர் உறவு என்று வரும்போது, திருமண விருப்பம் அதில் இருவருக்கும் இருக் கிறதா, அந்தப் பெண்ணோ... ஆணோ ஏற்கெனவே மணமானவர் எனில், சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டாரா உள்ளிட்ட பலவற்றையும் உறுதிபடுத்திக் கொண்ட பிறகே முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால்... பிரிவின்போது நியாயம் கேட்கும் வாய்ப்பு, நிச்சயமாக வலுவிழக்கவே செய்யும்.
source https://www.vikatan.com/lifestyle/relationship/namakkulle-editorial-page-july-18-2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக