Ad

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

பாஜக மாவட்ட தலைவர் கைது; அரசு பேருந்துகள் உடைப்பு! - தீவிர கண்காணிப்பில் குமரி போலீஸ்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். முற்றுகையிட்டவர்களிடம் பா.ஜ.க மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் அக்கட்சியினர் வாக்குவாதம் செய்ததைத் தொடர்ந்து மோதல் வெடித்தது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காங்கிரஸ் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸின் தலையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு தரப்பிலும் 53 பேர் மீது கோட்டாறு போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டைசன், ஜோஸிலின் ஆகியோர் கைது செய்ய்ப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க - காங்கிரஸ் மோதல்

பா.ஜ.க மாவட்டத் தலைவர் தர்மராஜ், பொதுச்செயலாளர் ஜெகநாதன், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜா, நிர்வாகிகள் மகாதேவன்பிள்ளை, மாதவன், கிருஷ்ணன், ஆறுமுகம் மற்றும் கண்டால் தெரியும் 15 பேர் என மொத்தம் 22 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜா, குமரி மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம் ஆகிய 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட காங்கிரஸ், பா.ஜ.க நிர்வாகிகள் 5 பேரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 11-ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட்டனர். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தை தாக்க முயன்ற இளைஞர் காங்கிரஸாரை கண்டித்தும், தங்களது கடமையை செய்ய தவறிய மாவட்ட காவல்துறையை கண்டித்தும் கன்னியாகுமரி மாவட்டத்தின் 9 முக்கிய இடங்களில் இன்று மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பா.ஜ.க மாவட்ட தலைவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

இதற்கிடையே நேற்று இரவு மார்த்தாண்டம், புதுக்கடை, கொல்லங்கோடு, குலசேகரம், களியக்காவிளை பகுதிகளில் 5 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விபரம் வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலை வழக்கம்போல பேருந்துகள் இயங்கின. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க, காங்கிரஸ் மோதலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.



source https://www.vikatan.com/crime/bjp-district-leader-arrested-and-government-bus-damaged

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக