Ad

சனி, 1 ஏப்ரல், 2023

`சுரண்டல் கொடுமையின் உச்சம்' வைரல் வீடியோவுக்கு பின்னாலிருக்கும் கொடூர உண்மை!

சமீபத்தில் காங்கோ நாட்டில் சுரங்க சரிவுகளிலிருந்து தொழிலாளர்கள் ஒருவரை ஒருவர் மீட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. காண்பவரை கண்கலங்க வைத்தது. மறைக்கப்படும் அந்த வீடியோ காட்சியின் பின் உள்ள ரகசியமும் அங்கு நடைபெறும் சுரண்டல்களும் என்ன என்பதை பார்ப்போம்.

பேட்டரி வாகனங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய தாதுப்பொருள் "கோபால்ட்" ஆகும்.  காங்கோவில் உள்ள "கோபால்ட்" எடுக்கும் சுரங்கத்திலிருந்து இந்த  தாது வெட்டி எடுக்கப்படுகிறது. உலக வெப்பமயமாவதை தடுக்க Net Zero CO2 Emission என்ற கோஷத்தை முன்வைத்து பேட்டரி வாகனங்களின் பயன்பாடுகளை அதிகப்படுத்த உலக வல்லரசுகள் திட்டங்கள் வைத்துள்ளன. ஆனால் அந்த கோபால்டை தோண்டி எடுக்கும் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை.

சுரங்க தொழிலில்

சுரங்க வேலையின் போது மேடுகள் சரிந்து தங்கள் மீது விழுந்தால் வெறும் கைகளால் அவர்களாகத்தான் தங்களை மீட்க வேண்டும் என்ற மிக கொடூரமான பணிச்சூழலில் அவர்கள் உழைக்கிறார்கள். 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உழைக்கும் அந்த சுரங்கத்தில் பணியின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை இரும்புத்திரையிட்டு மறைக்கப்படுகிறது. இந்த அளவுக்கு கொடூரமான உழைப்புச் சுரண்டலை நடத்தி லாபம் பார்க்கும் வல்லரசு நாடுகள்தான், இந்த உலகையே அழிவிலிருந்து காப்பது போல "NET ZERO" என்று வெட்கமே இல்லாமல் முழக்கமிடுகிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது.

கோபால் தெரியும் அது என்ன கோபால்ட்..?

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் பிராண்ட் (Georg Brandt), சுமார் 1735ம் ஆண்டில் கோபால்ட் என்ற தாதுவைக் கண்டுபிடித்தார். கோபால்ட் ஒரு கடினமான, உடையக்கூடிய தன்மை கொண்ட உலோகமாகும். இது தோற்றத்தில் இரும்பு மற்றும் நிக்கலுடன் ஒத்திருக்கிறது. கோபால்ட் கலவைகள் மெருகூட்டல் மற்றும் மட்பாண்டங்களுக்கு நீல நிறத்தை வழங்க பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. கோபால்ட், பரவலாக பரவியிருந்தாலும், பூமியின் மேலோட்டத்தில் 0.001 சதவிகிதம் மட்டுமே உள்ளது. கோபால்ட் கனிம கோபல்டைட், எரித்ரைட், மற்றும் சிமிட்டேட் போன்றவற்றில் காணப்படுகிறது.

கோபால்ட் சுரங்கம்

கோபால்ட் பல பயனுள்ள கலவைகளை உருவாக்குகிறது. இது இரும்பு, நிக்கல் மற்றும் பிற உலோகங்களோடு கலந்து அல்கொயோவை உருவாக்குகிறது. இது அசாதாரண காந்த சக்தியுடைய ஒரு அல்லாய் ஆகும். கோபால்ட், குரோமியம் மற்றும் டங்ஸ்டன் ஆகியவை உயர்நிலை வெப்பநிலை அமைப்பை உருவாக்கலாம்.

கோபால்ட் காந்தம் இரும்புகள் மற்றும் துருப்பிடிக்காத இரும்புகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றத்தின் கடினத்தன்மை மற்றும் எதிர்ப்பின் காரணமாக இது மின்முனைப்புடன் பயன்படுத்தப்படுகிறது. கோபால்ட் உப்புக்கள் கண்ணாடி, மட்பாண்ட, எலுமிச்சை, ஓடுகள், மற்றும் பீங்கான் ஆகியவற்றிற்கு நிரந்தரமான கவர்ச்சியான நீல வண்ணங்களை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன. கோபால்ட் செவர் மற்றும் தேவர்டின் நீலத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரி வந்துவிட்டாலும், கோபால்ட்டின் தேவை பேட்டரிதயாரிப்புக்கு தேவையாகவே உள்ளது.

நவீன உலகில் கோபால்ட்

ஸ்மார்ட்ஃபோன்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் மின்சார வாகனங்கள் நவீன உலகின் சின்னங்களாக இருக்கலாம். ஆனால், காங்கோ ஜனநாயகக் குடியரசில் அடிமைகள் போன்ற நிலைமைகளில் உழைக்கும் தொழிலாளர்களால் வெட்டப்பட்ட கோபால்ட் மூலம் அவற்றின் ரீச்சார்ஜபிள் பேட்டரிகள் இயக்கப்படுகின்றன என்று ஹார்ட்வார்ட் மனித உரிமைகள் ஆர்வலர் சித்தார்த் காரா கூறுகிறார்.

"மக்கள் மனிதாபிமானமற்ற, அரைக்கும், சீரழிக்கும் நிலைமைகளில் வேலை செய்கிறார்கள். அவர்கள் கோடரி, மண்வெட்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பூமியில் அகழிகளிலும், குழிகளிலும், சுரங்கங்களிலும் வெட்டி, கோபால்ட்டை சேகரித்து முறையாக  விநியோகச் சங்கிலியில் கொண்டு சேர்க்கிறார்கள்."

சுரங்கம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  பயங்கர காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த பெரிய திறந்தவெளி பள்ளங்களை அடிக்கடி தோண்டும்போது, ​​பள்ளத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சரளை மற்றும் கற்களால் ஆன ஒரு மலை மக்கள் மீது மண்சரிவு எற்பட்டு, கால்கள் மற்றும் கைகள், முதுகெலும்புகள் நசுக்குவதை சற்று கற்பனை செய்து பாருங்கள். அதனால் தான் நீல நிற கோபால்ட் பற்றிய தன் புத்தகத்துக்கு Cobalt Red என சித்தார்த் பெயரிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய கோபால்ட் உற்பத்தியாளராக காங்கோ குடியரசு உள்ளது. காங்கோ (DRC) உலகின் கோபால்ட் மொத்த உற்பத்தியில் 60 முதல் 70% வரை உற்பத்தி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கோபால்ட் சுரங்கம் ஒரு  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாற்றத்தின் இருண்ட பக்கம் என்கிறார் அஃப்ரா முர்ரே.

சுரங்கம்

காங்கோ குடியரசு, கடந்த ஆண்டு சீன முதலீட்டாளர்களுடன் 6 பில்லியன் டாலர் உள்கட்டமைப்புக்களை மறுசீரமைப்பதற்கான ஒரு கனிம ஒப்பந்தத்தை (Sicomines Agreement ) எட்டியுள்ளது என்று நிதி அமைச்சர் நிக்கோலஸ் கசாடி தெரிவித்துள்ளார். டேவிட் ஜி. லேண்ட்ரி தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில் இந்த தொகை காங்கோ ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம் என்கிறார்.

சீனா ரயில்வே குரூப் லிமிடெட் காங்கோவில் 68% சாலைகள் மற்றும் மருத்துவமனைகளை அமைக்க உள்ளதாம். சீனாவுக்கு என்ன அப்படி காங்கோ பாசம் என்றால் கோபால்ட் தான்.

கோபால்ட் அதன் பெயரை ஜெர்மன் சுரங்கத் தொழிலாளர்களிடமிருந்து பெற்றது. Kobald என்றால் ஜெர்மானியில் தீய ஆவி அல்லது கோப்ளின் என்று பொருள். அதை வைத்து கோபால்ட் என பெயரிட்டனர்.  சரியாகத்தான் பெயர் வைத்துள்ளனர்.

-சி.பி.சரவணன்,

வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர்.



source https://www.vikatan.com/environment/policy/the-cruel-truth-behind-the-viral-video-the-peak-of-exploitation-cruelty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக