Ad

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

Motivation Story: போதைக்கு அடிமையானவர் `IronMan' ஆனது எப்படி? - ராபர்ட் டௌனி ஜூனியரின் நிஜக்கதை!

`ஆற்றலுடன்கூடிய விடாமுயற்சி எதிலும் வெற்றியைப் பெற்றுத்தரும்.’ - பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

`மார்ஜுவானா.’ இந்த போதைப்பொருள் அந்தச் சிறுவனுக்கு அறிமுகமானபோது அவனுக்கு வெறும் 6 வயது. அந்தப் பழக்கத்தைப் பழக்கிவிட்டவர் அவனுடைய தந்தை. போதைக்கு அடிமையானவர்களின் வாழ்க்கை எப்போதும் சீரழிவை நோக்கியே இருக்கும். மாறாக, சின்னஞ்சிறு வயதிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையான அந்தச் சிறுவனனோ பெரும் புகழ் பெற்றான். பின்னாளில், `டைம்’ பத்திரிகையின் உலகின் 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இடம்பிடித்தான். `ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் புள்ளிவிவரப்படி, `அதிக சம்பளம் வாங்கும் ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர்’ எனக் குறிப்பிடப்பட்டான். இதற்கெல்லாம் காரணம் தன்மீது அந்தச் சிறுவனுக்கு இருந்த அசாதாரணமான தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி. அந்தச் சிறுவனின் பெயர். `ராபர்ட் டௌனி ஜூனியர் (Robert Donwney Jr).’

ராபர்ட் டௌனி ஜூனியர்

`அயர்ன்மேன்’, `ஷெர்லாக் ஹோம்ஸ்’, `தி ஜட்ஜ்’ ஆகிய படங்களின் மூலம் உலகிலுள்ள பலரையும் தன்வசப்படுத்தி, ரசிகர்களாக்கிக்கொண்டவர் ராபர்ட் டௌனி ஜூனியர். அமெரிக்காவின் நியூயார்க்கிலிருக்கும் மன்ஹாட்டனில் 1965-ம் ஆண்டு பிறந்தார். அப்பா ராபர்ட் டௌனி சீனியர் நடிகர், இயக்குநர். அம்மா, எல்சீ ஆன் (Elsie Ann) ஒரு நடிகை. அப்பா, அம்மா இருவரும் திரைத்துறையில் இருந்ததால், ராபர்ட்டுக்கும் சினிமா வசமானது. ஐந்து வயதிலேயே படங்களில் நடிக்கும் வாய்ப்பு! அப்பாவின் படங்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்தார். அப்பா ராபர்ட் டௌனி சீனியர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்தார். கஞ்சா தொடங்கி உலகிலுள்ள அத்தனை போதைப்பொருள்களும் அவருக்கு இஷ்டம். ராபர்ட்டுக்கும் அதைப் பழக்கப்படுத்தினார். பின்னாளில், அது குறித்து ராபர்ட் இப்படிச் சொன்னார்... ``போதை எங்கள் இருவருக்குமிடையே ஓர் அந்நியோன்யத்தை ஏற்படுத்தியது. நானும் அப்பாவும் சேர்ந்து போதையை அனுபவிக்கும்போது, அவர் என்மீது கொண்டிருக்கும் பாசத்தையெல்லாம் அப்படிக் கொட்டித்தீர்த்தார்.’’

ராபர்ட்டும், அவருடைய அக்காவும் `கிரீன்விச் வில்லேஜ்’ என்ற இடத்தில் வளர்ந்தார்கள். கொஞ்ச காலத்துக்கு அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை. அந்தக் கூட்டுக்குடும்பச் சூழலும் ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிணக்கு. விவாகரத்து. 1978-ம் ஆண்டு, அப்பாவோடு கலிஃபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்தார் ராபர்ட். அங்கே சான்டா மோனிகா ஹைஸ்கூலில் சேர்ந்தார். போதைக்கு ஆட்பட்ட ஒரு குழந்தை; அதை ஊக்குவிக்கும் அப்பா; கல்வி எப்படித் தலையில் ஏறும்... பள்ளியிலிருந்து வெளியேறினார். `படிப்பு... அது கிடக்கட்டும். எனக்கு நடிப்பு இருக்கே...’ என்கிற எண்ணம் ராபர்ட்டுக்கு இருந்தது. நியூயார்க்குக்குத் திரும்பினார். நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ராபர்ட் டௌனி ஜூனியர்

நம்பிக்கை இருந்தாலும், யதார்த்த வாழ்க்கை அவருக்குக் கைகொடுக்கவில்லை. நாடகங்கள், சினிமா என நடித்துப் பார்த்துவிட்டார். ஒன்றிலும் ஜொலிக்க முடியவில்லை. ஒரு வருடம், இரண்டு வருடங்கள் இல்லை... பல வருடங்களாக இதே நிலைமை. அதற்கும் ஒரு முடிவு வந்தது. `லெஸ் தென் ஜீரோ’ என்று ஒரு படம். 1987-ல் வெளியானது. அதில் ராபர்ட் நடித்திருந்தார், போதைக்கு அடிமையான ஒரு கதாபாத்திரத்தில். ரசிகர்கள் கொண்டாடினார்கள். `ஏ யப்பா... அப்பிடியே ஒரு டிரக் அடிக்ட் மாதிரியே இந்த ஆளு நடிச்சுருக்காரே...’ என்று வாழ்த்துமடல் வாசித்தார்கள். ஆனால், அந்த வாழ்த்து ராபர்ட்டுக்குப் பிடிக்கவில்லை. அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, பல முன்னணி இயக்குநர்களிடமிருந்தெல்லாம் அவருக்கு அழைப்பு வந்தன. அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர் நடித்து, வெளிவந்த சில படங்களும் சுமாரான வெற்றியையே பெற்றன.

இதற்கிடையில் ராபர்ட்டுக்கு அறிமுகமானார் சாரா ஜெஸ்ஸிகா (Sarah Jessica). நடிகை. இருவருக்கும் பரஸ்பரம் பிடித்துப்போனது. கைகுலுக்கிக்கொண்டார்கள்; கட்டியணைத்து அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள்; முத்தம் கொடுத்துக்கொண்டார்கள்; திருமணமும் செய்துகொண்டார்கள். ஆனால், இல்லற வாழ்க்கை நெடுநாள் நீடிக்கவில்லை. காரணம், ராபர்ட்டின் போதைப் பழக்கம். ஏழே வருடங்கள்... விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்துபோனார் ஜெஸ்ஸிகா. இதற்கிடையில் சார்லி சாப்ளினின் பயோ பிக் படமான `சாப்ளின்’ படத்தில் ராபர்ட்டுக்கு லீடு ரோல். ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யும் அளவுக்கு அவருடைய நடிப்பு அதில் வெளிப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் நடித்ததற்காக `BAFTA' விருதுபெற்றார் ராபர்ட்.

போதை என்கிற ராட்சசன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ராபர்ட்டை அடித்துத் துவைத்துக்கொண்டிருந்த காலம் அது. ஒரு மனிதன், தனக்குப் பிடிக்காமலேயே போதையில் ஆழ்வது என்பது கொடுமை. அதுதான் ராபர்ட்டுக்கும் நிகழ்ந்தது. 1996 - 2001-க்கு இடைப்பட்ட காலம், அவருக்கு மிகத் துயரமானது. கோகெய்ன், மார்ஜியோனா, எல்.எஸ்.டி உள்ளிட்ட பல போதைப்பொருள்களை வைத்திருந்த காரணத்துக்காக அவர் கைதுசெய்யப்பட்டார். ஒரு முறையல்ல, பல முறை. சிறையில் அவருக்கு வேறு பிரச்னைகள் காத்திருந்தன. சக கைதிகள் அவரை ரத்தம் வரும் வரை அடித்து, உதைத்தார்கள். அப்போதுதான் அவருக்கு ஓர் உண்மை புரிந்தது. `போதையிலிருந்து மீண்டால் ஒழிய வாழ்க்கை இல்லை.’ ராபர்ட், `இந்தப் பழக்கம் வேண்டவே வேண்டாம். இதிலிருந்து வெளிவந்துவிட வேண்டும்’ என ரொம்ப மெனக்கெட்டார். போதையின் உச்சத்துக்குப் போனவர்கள் `போதை நோயாளிகள்’ என அறியப்படுவார்கள். அதிலிருந்து மீண்டெழ வேண்டும் என்கிற எண்ணம் சிலருக்கு மட்டுமே ஏற்படும். அவர்களில் ஒருவர் ராபர்ட். அதற்காக என்னென்னவோ செய்து பார்த்தார். போதையிலிருந்து மீளும் மறுவாழ்வு முகாம்கள் பலவற்றுக்கும் சென்று பார்த்தார். ஒன்றும் பிரயோசனமில்லை.

ராபர்ட் டௌனி ஜூனியர்

2001. அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தபோது அவருக்குக் குடும்பமும் இல்லை, கையில் பணமும் இல்லை. பீட்சா தயாரிக்கும் ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். ஒரு மணி நேரத்துக்கு எட்டு சென்ட் சம்பளம். ஆனால் அந்தத் துயர வாழ்க்கை ராபர்ட்டுக்குத் தொடரவில்லை. ஒரு மனிதரின் வாழ்க்கையை மாற்ற யாரோ ஒரு மந்திரத்தைச் சொல்லவேண்டியிருக்கிறது. அந்த மந்திரத்தைச் சொன்னவர், சூசன் (Susan). 2003-ம் ஆண்டு சூசனைச் சந்தித்தார் ராபர்ட். பார்த்ததுமே பிடித்துவிட்டது. புரொபோஸ் செய்தார். சூசனுக்கும் அவரைப் பிடித்துவிட்டது. ஒரே ஒரு கண்டிஷன்தான் வைத்தார் சூசன்... ``நீங்க போதையை விட்டுருங்க. கல்யாணம் பண்ணிக்கிறேன்.’’ இனி வேறு வழியே இல்லை. ராபர்ட் போதைப் பழக்கத்தைத் தூக்கி எறிந்தார். யோகா, தற்காப்புக்கலை, தியானம் ஆகியவற்றில் ஈடுபட்டார். போதையிலிருந்து மீண்டெழுந்தார். சூசனைத் திருமணம் செய்துகொண்டார்.

2008-ம் ஆண்டு வெளியான `அயர்ன்மேன்’ (IronMan) அவருடைய வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. `இவருதான்யா ஹீரோ’ என்றபடி ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலகமெங்கும் அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். உச்சம் தொட்ட ராபர்ட் டௌனி ஜூனியரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது ஒரே ஒரு சேதிதான். ``நடிப்பு பற்றி எனக்குத் தெரிவதெல்லாம் மிக மிகக் கொஞ்சமே. நான் ஒரு நம்ப முடியாத, அதேநேரத்தில் திறமைவாய்ந்த, வரம் வாங்கி வந்த போலி ஆசாமி.’’



source https://www.vikatan.com/lifestyle/motivation/inspiring-story-of-robert-downey-jr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக