Ad

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

Morning Motivation : YouTube உருவான கதை தெரியுமா? ஒரு ஐடியா பெற்றுத் தந்தது 1.65 பில்லியன் டாலர்! 

`வாழ்க்கை என்பது உங்களை அறிவது அல்ல; வாழ்க்கை என்பது உங்களை நீங்களே உருவாக்கிக்கொள்வது.’ - ஜார்ஜ் பெர்னாட் ஷா 

2004. அமெரிக்கா.

எழுதுவதற்குக் கொஞ்சம் கூச்சப்படவேண்டிய சம்பவம். மூன்று நண்பர்கள் இணையத்தில் ஒரு வீடியோவைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த வீடியோவில் ஜேனட் ஜாக்சன் (Janet Jackson) நடித்திருந்தார். பிரபல நடிகை, பாடகி, நடனக்கலைஞர். அது ஸ்டேஜ் ஷோ. `சூப்பர் பவுல் ஹாஃப்டைம் ஷோ.’ அந்த இளைஞர்கள் தேடியது ஒரு கிளுகிளுப்புக்காக. குறிப்பிட்ட அந்த வீடியோவில் ஜேனட் ஜாக்சனின் தன் மார்பகத்தை ஒரு நகையால் மூடியிருந்தார். அதை உடன் நடித்திருந்த ஜஸ்டின் டிம்பர்லேக் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருந்தார். ஒரு செகண்டுக்கும் குறைவான நேரமே அந்தக் காட்சி தெரிந்திருந்தது. அதை `Wardrobe Malfunction' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். ஸ்டேஜில் நடிகைகளின் ஆடை கிழிந்துபோவது, அவிழ்ந்து விழுவது, ஆபாசமாகத் தெரிவது இந்த ரகம். அப்போது அந்தச் சம்பவத்தை `Nipplegate’, `Janetgate’ என்றெல்லாம் ஊடகங்கள் குறிப்பிட்டன; கூடவே, அநாகரிகமான செயல் என்ற கண்டனங்களும் எழுந்தன. 

ஜாவத் கரீம்

இந்தச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது, விளைவுகள் என்னென்ன என்பது தனிக்கதை. விஷயத்துக்கு வருவோம். அந்த மூன்று நண்பர்கள் எவ்வளவு தேடியும் வீடியோ கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஒன்று புரிந்தது. இணையத்தில் குறிப்பிட்டு ஒரு வீடியோவைத் தேடினால் கிடைக்காது. பார்க்க முடியாது. முக்கியமான வீடியோக்களைப் பதிவுசெய்ய ஒரு தளம் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். மூவரும் என்ன செய்தார்கள் என்பதுதான் வரலாறு. இந்த இடத்தில் ஒரு சின்ன பிரேக். அந்த மூவரில் மூளையாகச் செயல்பட்ட ஒருவர் ஜாவத் கரீம் (Jawed Kareem). அவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு இங்கே அவசியமாகிறது. 

1979, அக்டோபர் 28-ல் கிழக்கு ஜெர்மனியின் மெர்ஸ்பர்க் (Merseburg) நகரில் பிறந்தவர் ஜாவத் கரீம். அம்மா ஜெர்மானியர். அப்பா பங்களாதேஷ்காரர். ஐந்து வயது இருக்கும்போது கரீமின் குடும்பம் ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்தது. பிறகு அங்கிருந்து அமெரிக்காவின் மின்னசோட்டாவுக்கு குடிபோனது. கரீம் மின்னசோட்டாவில் இருக்கும் ஹைஸ்கூலில் படித்தார். பிறகு, இல்லினாய்ஸ் யூனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றார். அங்கேதான் அவருக்கு இரண்டு நண்பர்கள் அறிமுகமானார்கள். சாட் ஹர்லே (Chad Hurley), ஸ்டீவ் சென் (Steve Chen).  

ஜாவத் கரீம், சாட் ஹர்லே, ஸ்டீவ் சென்

விஷயத்துக்கு வருவோம். ஒரு கேரேஜில் உட்கார்ந்து மூன்று பேரும் யோசித்தார்கள். ஒரு வெப்சைட்டை உருவாக்கினார்கள். அதற்குப் பெயர் யூடியூப் (YouTube). 2005-ம் ஆண்டு அந்த இணையதளம் உலகுக்கு அறிமுகமானது. `You' என்றால் நீங்கள் என அர்த்தம். `Tube' என்றால், அன்றைக்கு தொலைக்காட்சி உலகில் பார்வையாளர்கள் தொடர்வதற்காகப் புழக்கத்தில் இருந்த ஒரு வார்த்தை. இரண்டையும் சேர்த்து `YouTube' எனப் பெயர் வைத்தார்கள். அந்த இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் தங்களின் வீடியோக்களைப் பதியலாம். படத்தின் டிரெய்லர், சமையலறைக் குறிப்புகள், பாடல், நடனம், தொலைக்காட்சி லைவ் ஷோக்களின் தொகுப்பு, பிரபல திரைப்படங்களின் முக்கியமான காட்சிகள், முழுத் திரைப்படங்கள்... எதை வேண்டுமானாலும் பதிவுசெய்யலாம். கிறுகிறுவெனப் பிரபலமானது யூடியூப். ஒரே வருடம். கூகுள் நிறுவனம் யூடியூபை ஆச்சர்யமாகப் பார்த்தது. `இது புதுசா இருக்கே...’ என யோசித்தது. `இதை  நாம வாங்கியே ஆக வேண்டும்’ என முடிவெடுத்தது. 

2006-ம் ஆண்டு, கூகுள் நிறுவனம் யூடியூபை 1.65 பில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கியது. இணையதள வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு. ஒரு டெக் கம்பெனி, ஒரு சோஷியல் மீடியா தளத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய நிகழ்வு. ஆனால், கூகுள் ஆன்லைன் வீடியோ தளத்தில் அழுத்தமாகக் கால்பதிக்க நடந்த நிகழ்வு. விலைக்கு வாங்கிவிட்டாலும், யூடியூபின் நிர்வாகத்துக்குச் சுதந்திரம் கொடுத்தது கூகுள். `உங்கள் நிர்வாகத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். நீங்கள் யூடியூபில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.’ இந்த உத்தரவாதம்தான் நாம் ஒவ்வொரு நாளும் யூடியூபைப் பார்க்கக் காரணம். பாம்பே ஜெயஸ்ரீயின் கர்னாடக இசைப் பாடலோ, புரூஸ் லீயின் சண்டைக் காட்சியோ யூடியூபில் தாரளமாகக் கிடைக்கும். யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். 

YouTube

யூடியூப்... இன்றைக்குத் தவிர்க்க முடியாதது. செய்திகள் தொடங்கி எம்.கே.தியாகராஜ பாகவதர் படங்கள் வரை அதில் கிடைக்கும். இந்தத் தளம் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் சம்பாதித்தது இருக்கட்டும்; அவர்கள் நமக்குக் கொடுத்துவிட்டுப்போன கொடை அபரிமிதமானது. ஒரு புதிய பிசினஸ் ஐடியா என்ன வேண்டுமானாலும் ஆகலாம். நினைத்துப் பார்க்க முடியாத வருமானத்தைச் சம்பாதித்துக் கொடுக்கலாம். அதற்கு நம் காலத்திய உதாரணம் ஜாவத் கரீம், அவரின் நண்பர்களும் நமக்குக் கொடுத்துவிட்டுப் போயிருக்கும் `யூடியூப்.’ 



source https://www.vikatan.com/technology/motivation-story-about-youtube-co-founder-jawed-karim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக