Ad

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

‘பாதுகாப்பான மாநிலம் எது?‘ - அமித் ஷாவுடன் மோதும் பினராயி விஜயன்; பின்னணி என்ன?

இந்தி மொழி உட்பட சில விவகாரங்களில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே முட்டல் மோதல் சம்பவங்கள் ஏற்கெனவே நிகழ்ந்திருக்கின்றன. ‘இந்தி நம் தேசத்தை ஒன்றிணைக்கிறது’ என்று 2019-ம் ஆண்டு அமித் ஷா முன்வைத்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய பினராயி விஜயன், ‘இந்தி மட்டுமே நாட்டை ஒன்றிணைக்க முடியும் என்ற கருத்து முற்றிலும் தவறானது. தெற்கு, வடகிழக்கு மக்கள் இந்தி பேசமாட்டார்கள்’ என்றார்.

அமித் ஷா

சமீபத்தில், கர்நாடகாவின் புத்தூர் நகருக்குச் சென்றிருந்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “கர்நாடகா பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், அது பா.ஜ.க-வால் மட்டும்தான் முடியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் மட்டும்தான் முடியும். கர்நாடகாவுக்கு அருகில் கேரளா இருக்கிறது. நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

மேலும் தொடர்ந்த அமித் ஷா, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 1,700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அந்த அமைப்பையே பிரதமர் நரேந்திர மோடி நிரந்தரமாக தடைசெய்துவிட்டார். தேசவிரோத சக்திகளை வளர்க்கக்கூடிய கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. அவர்களால் ஒருபோதும் கர்நாடகாவுக்கு பாதுகாப்பு கிடைக்காது” என்றார்.

பினராயி விஜயன்

அமித் ஷாவின் பேச்சு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார். கோட்டயத்தில் நடைபெற்ற சி.பி.எம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பினராயி விஜயன், “கர்நாடகாவுக்கு அருகிலேயே கேரளா இருக்கிறது என்றும் கர்நாடகாவை பா.ஜ.க-வால் மட்டும்தான் பாதுகாக்க முடியும் என்றும் அமித் ஷா கூறியிருக்கிறார். இதன் மூலமாக, அவர் என்ன சொல்ல வருகிறார்... அண்டை மாநிலமாக கேரளா இருப்பதால் என்ன தவறு?” என்று கேள்விகளை எழுப்பினார்.

மேலும், “கேரளாவில் அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களும், மத நம்பிக்கை இல்லாத மக்களும் அமைதியாக வாழ முடியும். ஆனால், கர்நாடகா என்ன நிலைமையில் இருக்கிறது... மதக் கலவரங்கள் நிகழும் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது. சிக்மகளூருவில் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலாயம் 2021-ம் ஆண்டு சங் பரிவார் அமைப்பால் தாக்கப்பட்டது.

கர்நாடகாவில் சங் பரிவார் அமைப்பினரால் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பின்பற்றுவதால், கேரளாவில் யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. கேரளாவில் ஒற்றுமையாக மக்கள் வாழ்கிறார்கள். எனவே, கேரளாவைப் போல இருக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்க வேண்டும்” என்றார் பினராயி விஜயன்.

அமித் ஷா

இதற்கு முன்பு, சபரிமலை விவகாரத்திலும் பினராயி விஜயனுக்கும் அமித் ஷாவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. பா.ஜ.க-வின் தேசியத் தலைவராக இருந்தபோது, கேரளா மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது, பா.ஜ.க-வினர் மத்தியில் பேசிய அமித் ஷா, ‘சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதைக் கண்டித்து போராட்டம் நடத்திவரும் பக்தர்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட் அரசு காவல்துறையைப் பயன்படுத்துகிறது. போராட்டத்தை ஒடுக்கும் செயலில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து ஈடுபடுமானால், அதற்காக பெரிய விலையைக் கொடுக்க  வேண்டியிருக்கும். பினராயி அரசு தொடர்ந்து அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டால் ஆட்சியை இழக்க நேரிடும்’ என்றார் அமித் ஷா.

பினராயி விஜயன்

அதற்கு பதிலடி கொடுத்த பினராயி விஜயன், ‘கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு, பா.ஜ.க-வின் கருணையால் ஆட்சிக்கு வரவில்லை. கேரள மக்களின் ஆதரவினால் நாங்கள் அதிகாரத்துக்கு வந்திருக்கிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாங்கள் செயல்படுகிறோம் என்பதற்காக, ஜனநாயக முறைப்படி தேர்வுசெய்யப்பட்ட அரசை மிரட்டுவதற்கு பா.ஜ.க-வின் தலைவர் துணிந்திருக்கிறார். அரசியல் சாசனம் அளித்த அடிப்படை  உரிமைகளைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக எங்கள் அரசு அச்சுறுத்தப்பட்டிருக்கிறது’ என்றார்.

பினராயி விஜயனுக்கும் அமித் ஷாவுக்குமான கருத்து மோதல் தொடர்கதையாக நீடிக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/pinarayi-vijayan-asks-amit-shah-how-karnataka-is-safer-than-kerala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக