Ad

வியாழன், 23 பிப்ரவரி, 2023

`நெருப்பால் காடு சுத்தமாகிறது' காட்டையும் வயலையும் தீ வைத்து எரிக்கும் விவசாயிகள்!

காலங்கள் ஓடினாலும், பல வளர்ச்சிகள் கண்டாலும் இன்னும் சில இடங்களில் மூட நம்பிக்கைகள் என்பது ஒழிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. கர்நாடக மாநிலம், கடக் மாவட்டம், கப்பதகுடா என்ற பகுதியில் திடீரென தீ தோன்றி மளமளவெனப் பரவும். புதிதாக அந்தப் பகுதிக்குச் செல்பவர்கள் `அடேய் காட்டு தீ வருகிறது’ என ஓட்டம் பிடிப்பதுண்டு.

தீ வைப்பு

ஆனால், அது வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீ. தங்களுடைய விளைநிலங்களுக்கும், மலைப் பகுதிக்கும் அடிக்கடி தீ வைப்பதையே இங்கு வசிக்கும் கிராம மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

பழங்காலம் தொட்டு இங்கு வசிக்கும் விவசாயிகள், `கப்பத மல்லையா’ (Kappata Mallayya) என்ற கடவுளை வழிபட்டு வருகின்றனர். இவர்களின் நம்பிக்கையின்படி, மலைகளுக்கு தீ வைப்பதன் மூலம், தங்களுடைய பாவங்கள் யாவும் சர்வ நாசமாகி சாம்பலாகிவிடும் எனவும், வரும் ஆண்டில் நல்ல மழை, ஆரோக்கியம், செழிப்பு நிலவும் எனவும், மல்லையா அருள்புரிவார் எனவும் நம்புகின்றனர்.

ஆனால், இப்படி தீ வைப்பதால், அங்கு வசிக்கும் உயிரினங் களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், மலைப் பகுதிகளில் உருவாகும் அரிய மூலிகைத் தாவரங்கள் பலவும் அழிந்து போகவும் வாய்ப்புள்ளது என சூழலியல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு புறம் இப்படி தீ வைத்து, சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கும் செயல்களும் நடைபெறுகின்றன என்கிறார்கள்.

இது குறித்து கப்பதகுடா அருகே உள்ள தோணி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரப்பா ரத்தோட் என்பவர் கூறுகையில், ``காய்ந்த புல் மஞ்சள் நிறமாகி, உயரமாக வளரத் தொடங்குகிறது. சில மாதங்களில் மற்ற பகுதி முழுவதும் பரவுகிறது.

விவசாய நிலம்

தீ வைத்தால் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்பது நம்பிக்கை. நெருப்பு அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்துகிறது; நாங்கள் மீண்டும் விவசாயம் செய்ய உதவுகிறது. இவை கட்டுப்படுத்தப்பட்ட தீ மற்றும் அவை பரவாமல் இருப்பதை உறுதிசெய்கிறோம். 

ஆனால், அந்தப் பகுதிக்குப் புதிதாக வருபவர்கள் புகை எழுவதைப் பார்த்து, அது பெரும் காட்டுத் தீ என்று கருதுகிறார்கள். இது உண்மையல்ல. இது ஒரு நம்பிக்கை அல்லது துப்புரவு பணி என அழைக்கலாம். ஒவ்வோர் ஆண்டும் நெருப்பு எங்களுக்கு உதவுகிறது’’ என்று தெரிவித்துள்ளார். 

வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``எங்கள் குழு தயாராக உள்ளது. இதுபோன்ற தீயை உடனடியாக அணைக்கிறோம். தீயினால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதிக்கப் படுகிறது எனச் சில புகைப்படங்கள் வைரலானதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், இதுவரை எந்த வன விலங்குகளும் பாதிக்கப்படவில்லை. நிலைமையைக் கையாள அனைத்து வகையான உபகரணங்களுடன் நாங்கள் தயாராக உள்ளோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/humour-and-satire/current-affairs/karnataka-farmers-burning-their-lands-and-hills-here-is-the-reason-why

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக