Ad

திங்கள், 20 பிப்ரவரி, 2023

Euro Myths: `ஹா ஹா ஹாசினி' யுரோபாவைக் கவர்ந்து சென்ற காதல் மன்னன்; இது கடவுளின் கிட்நாப் பிளான்!

ஐரோப்பியப் புராண இதிகாசங்களும், நம்பிக்கைகளும்!

"கடவுள் மனிதனைப் படைத்தார், ஏனென்றால் அவர் ஒரு கதையைக் கேட்க விரும்பினார்" என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. ஆதி மனித காலம் தொட்டு இன்றுவரை தனது அடுத்த தலைமுறைக்குச் சொல்வதற்கு மனிதனிடம் ஆயிரம் கோடி கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு சமூகத்தின் ஆழமான வரலாற்றையும் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அக்கதைகள் உலகுக்குச் சொல்கின்றன. நம் மூதாதையர்கள் நமக்குச் சொல்ல விரும்பிய தத்துவங்களையும், கற்றுக்கொடுக்க விரும்பிய பாடங்களையும் புராணங்கள் வாயிலாகவும் இதிகாசங்கள் வாயிலாகவும் நமக்கு உணர்த்தினர். சூதாட்டத்தின் தீவிரத்தை மகாபாரதமும், சாமவேதம் கற்று கடும் சிவபக்தனாக இருந்த இராவணன், பெண் ஆசையால் அழிந்ததை ராமாயணமும், உண்மையின் உயர்வை அரிச்சந்திர புராணமும், பெண்மையின் மகிமையைச் சிலப்பதிகாரமும் எடுத்துக்கூறின.

எப்படிப் புராணங்கள் வாழ்வியல் தர்மங்களையும் அறத்தையும் கற்றுக்கொடுத்தனவோ அதே போல, காலம் காலமாகக் கடத்தப்பட்டு வரும் கற்பனை கலந்த பல மூட நம்பிக்கைகள் பகுத்தறிவைக் கேள்வி கேட்க மறுத்து, குருட்டு மூட நம்பிக்கையில் வாழ மனிதனைப் பழக்கியது. பல்லி கத்தினால் நல்ல சகுனம், பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் எனப் பல மூடநம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் மனிதக்குலத்தைப் போலவே பழைமையானவை.

ஐரோப்பிய புராணக் கதைகள்

மனித நாகரீகத்தின் தொடக்கத்திலிருந்தே மதங்கள், சமூகங்கள் மற்றும் கலாசாரங்களில் வேரூன்றி வளர்ந்த இந்தப் புராணக் கதைகளும், மூட நம்பிக்கைகளும் புதிரும் குழப்பமும் நிறைந்த பகுதிகள்தான். இவை எல்லாம் நமக்கு மட்டும்தானா என்றால் இல்லை. அறிவியலிலும் நாகரீகத்திலும் எப்போதுமே நம்மைவிடப் பல மைல் தூரத்துக்கு முன்னோக்கிப் பாய்ந்து செல்வதாகக் கருதப்படும் ஐரோப்பியர்களிடையே கூட இது போன்ற பல விநோதமான புராணக் கதைகளும், மூடத்தனமான நம்பிக்கைகளும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருகின்றன.

ஐரோப்பாவில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் புராணக் கதைகளையும், விநோத நம்பிக்கைகளையும் ஒரு கலகலப்பான, சுவாரஸ்யமான கலவையாக இந்தத் தொடரில் பார்க்கலாமா..?
இது காதல் மாதம். இன்று காதலர் தினம். உலகமே கையில் சிவப்பு ரோஜாவோடும், பையில் சாக்லேட்டோடும் பரபரப்பாக அலைந்துகொண்டு இருக்கிறது. அப்படியான ஒரு நன்னாளில் இத்தொடரை ஆரம்பிப்பதால் காதலிலிருந்து தொடங்குவதுதானே முறை!

யுரோபா எனும் அழகியின் காதல் கதை

ஐரோப்பா கண்டம் தெரியும், ஐரோப்பிய ஒன்றியம் தெரியும், அது என்ன ஐரோப்பாவின் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கான நியூமராலஜி பெயரில் அழகி? ஆம் யுரோபாவேதான். அவள் அழகியேதான். அதுவும் எப்படிப்பட்ட அழகி என்றால் கடவுளுக்கு எல்லாம் பெரிய கடவுளாக இருந்தவரையே மயக்கி, அவரைக் கிட்நாப்பராக மாற்றிய ஒரு பேரழகி. நல்லவேளை அப்போது ஆட்கடத்தல் சட்டங்கள் எல்லாம் இல்லை, இல்லையென்றால், காதல் கதைக்குப் பதிலாகக் கடவுள் கம்பி எண்ணிய கதையைத்தான் எழுதவேண்டி இருந்திருக்கும்.

யார் இந்த யுரோபா?

கிரீஸ் நாட்டின் கிரேட்டன் நிலப்பரப்பின் அழகிய நிலவு தேவதையான யுரோபா பண்டைய தலசோக்ரடிக் நாகரிகமான ஃபெனிசியா நாட்டின் அழகிய இளவரசி. அழகே பொறாமை கொள்ளும் பேரழகியான யுரோபாவை வர்ணிக்கத் தேவையான 'மானே தேனே பொன்மானே' போட்டு நிரப்பிக்கொள்வது உங்கள் சாமர்த்தியம். மத்திய கிழக்கு மற்றும் சிடோனின் அரசனான ஏஜெனருக்கு இருந்த பல குழந்தைகளில் யுரோபா முக்கியமானவள். அட்டகாசமான அழகியான யுரோபா மீது ஏஜெனருக்கு தனிப்பாசமே இருந்தது. எனவே அவரது அழகிய மனைவியான நிம்ஃப் லிபியாவின் அழகும் பகட்டும் நிறைந்த ஓர் அதிசய உடையை தன் அன்பு மகளுக்குப் பரிசளித்தார்.

யுரோபாவுக்காக வைக்கப்பட்டிருக்கும் சிலை

நிம்ஃப் லிபியாவுக்கு அந்த ஆடையைக் கொடுத்தது யார் தெரியுமா? அவரின் காதலனான கடல், நீர், பூகம்பங்கள் மற்றும் குதிரைகளின் கம்பீரமான கடவுளான பொஸைடன் பரிசளித்திருந்தார். தன் மனைவியின் காதலன் பரிசளித்த அந்த ஆடம்பர உடையைத் தனது மகளுக்கு அணிவித்து அழகு பார்க்க விரும்பினார் ஏஜெனர். (“என்ன இது?! ஆரம்பமே கொஞ்சம் கோக்கு மாக்கான குடும்பக் கதை போல இருக்கிறதே?” எனப் பயப்பட வேண்டாம். அந்தக் கால ஐரோப்பியக் கடவுள்கள் எல்லாம் கொஞ்சம் அப்படி இப்படித்தான் வாழ்ந்தார்கள், எனவே இடையிடையே வரும் இதுபோன்ற கலாசார அதிர்ச்சிகளைக் கண்டு நன்னெறி திசைக்காட்டி, (அதாங்க 'மாரல் காம்பெஸ்') எல்லாம் எடுக்காமல் இருப்பது நலம்.)

அதுவரை பேரழகியாக இருந்த இளவரசி யுரோபா, கடல், நீர், பூகம்பங்கள் மற்றும் குதிரைகளின் கடவுளால் தயாரிக்கப்பட்ட அந்த அட்டகாசமான ஆடையை அணிந்த நிமிடம் முதல் அதி பேரழகியாக ஜொலிக்க ஆரம்பிக்கிறாள். பின்ன ஆகணும்ல? அந்த ஜொலிப்பின் பிரகாசம் காதல் மன்னனான ஜீயஸ்ஸின் (Zeus) கண்களைக் கூசச் செய்கிறது. செய்யணும்ல? "ஆஹா! இவ்வளவு அழகான பெண் எப்படி இவ்வளவு காலம் நம் பார்வையிலிருந்து தப்பித்தாள்?” எனத் தமிழ் சினிமா வில்லன்போல யோசித்தார் ஜீயஸ்.

கடவுள்களின் கடவுள் ஜீயஸ் (Zeus)

பண்டைய கிரேக்கப் புராணங்களின் மிக முக்கிய கிரேக்கத் தெய்வமாக, அனைத்து கடவுள்கள் மற்றும் மனிதர்களினதும் ஆட்சியாளர், பாதுகாவலர் மற்றும் தந்தையாகக் கருதப்பட்டார் ஜீயஸ். வானம், காலநிலை, சட்டம், ஒழுங்கு, மற்றும் விதி எனப் பல விஷயங்களின் கடவுளான ஜீயஸ் ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக அத்தனை ஏரியாவையும் தன் கைகளுக்குள் வைத்திருந்தார். அழகிய பெண்களையும் கூடத்தான். மின்னல் மற்றும் கழுகு போன்ற சின்னங்களால் குறிப்பிடப்படும் ஜீயஸ், கழுத்து வரை தொங்கும் பெரிய தாடியும், நெற்றியில் புரளும் சுருள் முடியும், தடித்த புஜமும், விரிந்த மார்பும் என ஒரு கம்பீரமான அரசனுக்கு உரிய அத்தனை அம்சங்களும் பொருந்தியவர். என்ன கொஞ்சம் வயதுதான் ஜாஸ்தி. ஆனால், கடவுளுக்கு எல்லாம் வயது பார்க்கவேண்டுமா என்ன?

ஜீயஸ் (Zeus)

"அழகு, அதிகாரம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் போது அவர் கண்டிப்பாகக் காதல் மன்னராகவும் இருப்பார் போல!” என நீங்கள் நினைத்தால் கரெக்ட். ஏழு மனைவிகளைத் திருமணம் செய்த ஜீயஸ் எக்ஸ்ட்ராவாக பல காதலிகளையும் வைத்திருந்தார். பல்வேறு விலங்குகளின் வடிவத்தைத் தாங்கிய அவர், பல தேவதைகள் மற்றும் பெண்களுடன் ஏராளமான காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தார். இதன் விளைவாக, ஜீயஸின் சாயலிலிருந்த பல கடவுள்களும், புராணங்களில் பேசப்படும் ஹீரோக்களும் அவரின் குழந்தைகள் என்ற கிசுகிசு அக்காலத்திலேயே பரவியது. பிரபலம் என்றாலே கிசுகிசுக்களுக்குப் பஞ்சம் இல்லைதான் போலும். அக்கால பத்திரிகைகள் “ஜீ எழுத்தில் தொடங்கும் கடவுளுக்கும் கா எழுத்தில் தொடங்கும் மூன்றெழுத்து தேவதைக்கும் இடையே ஒரு இது” என நடுப்பக்கத்தில் ஒருவேளை எழுதி இருக்கலாமோ என்னவோ!

யுரோபா கண்ட கனவு

சரி, நம் கதைக்கு வருவோம். பேரழகியான யுரோபா அவள் தன் வயதுடைய மற்ற பெண்களுடன் பூங்கா வெளியில் சுற்றுவது, பூக்களைப் பறிப்பது, கடற்கரையில் விளையாடுவது என அக்கால இளவரசிகளுக்கே உரிய 'ஹா ஹா ஹாசினி' குணங்களுடன் வாழ்ந்து வந்தாள்.

ஒரு நாள் இளவரசி யுரோபா தூங்கும்போது ஒரு விசித்திரமான கனவு காண்கிறாள். ஹீரோயின்களுக்கு எல்லாம் பொதுவாக ஹீரோவோடு ஃபாரீன் சென்று டூயட் ஆடும் கனவுதானே வருவது வழக்கம், ஆனால் இங்கு யுரோபாவுக்கு கொஞ்சம் வித்தியாசமான ஒரு கனவு தோன்றுகிறது. அக்கனவில், பூமியிலுள்ள இரண்டு கண்டங்கள், இரு பெண்களின் வடிவத்தை எடுக்கின்றன. அதில் ஒருத்தி கிழக்குத் தேசத்துப் பெண்களின் தோற்றத்தையும், இன்னொருத்தி மேற்குத் தேசத்துப் பெண்களின் தோற்றத்தையும் கொண்டிருக்கிறாள். கனவுன்னா கலவரம் வேண்டாமா? அதேபோல அவர்கள் இருவரும் தமக்குள்ளே யுரோபா தொடர்பாகக் கடுமையாகச் சண்டை போடுகின்றனர். கிழக்குத் தேசத்துப் பெண்களின் தோற்றத்தைக் கொண்ட பெண்ணோ, அழகி யுரோபா ஆசியாவில் பிறந்ததால், அவள் தனக்குச் சொந்தமானவள் என்றும், மேற்குப் பெண்களின் தோற்றத்தைக் கொண்ட பெண்ணோ, அவளுடைய பிறப்பு எங்கே நிகழ்கிறது என்பது முக்கியமில்லை. அனைத்து கடவுள்களின் பெருங்கடவுளான, ஜீயஸ் அவளுக்கு மேற்கு ஐரோப்பியக் கண்டத்தையே கொடுப்பார் என்றும் வாதிடுகிறாள். (ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்திருக்கலாமோ!)

யுரோபா பிறந்ததாகச் சொல்லப்படும் லெபனான் நாட்டிலுள்ள டைர் நகரம்

இப்படியே நீண்ட அந்தச் சண்டையின் இறுதியில் மேற்குத் தேசத்துப் பெண் வெற்றி பெறுகிறாள். பின் அவள் யுரோபாவின் காதின் அருகே வந்து “என்னுடன் வந்து விடு” என்று மூன்று முறை அழைக்கிறாள். அத்தோடு கனவு முடிவுக்கு வருகிறது. அதிகாலையில் வியர்க்க விறுவிறுக்கத் திடுக்கிட்டு எழும் யுரோபா, அதன் பின் பயத்தில் தூங்கவேயில்லை. தான் கண்டது வெறும் கனவா இல்லை ஏதாவது முன்கூட்டியே வரும் தீர்க்கதரிசனமா என்று தெரியாமல் குழம்புகிறாள். (அப்பாவியா இருக்கியேமா மகளே ஒத்த ரோசா?!)

மறுநாள் காலை அவள் தன் தோழிகளுடன் கடற்கரைக்குச் செல்கிறாள். அங்கே கடற்கரை ஓரம் பூக்கள் பறித்துக்கொண்டு இருக்கும் போது, என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லாமலே தெரிந்திருக்கும். யெஸ், அங்கே ஹீரோ என்ட்ரி ஆகிறார்.

மேலே இருந்து நோட்டம் விட்டுக்கொண்டு இருந்த காதல் மன்னன் ஜீயஸ், அழகி யுரோபாவைப் பார்த்ததும் கலவரமாகிறார். உடனடியாக அந்த இடத்துக்குக் கிளம்புகிறார். யுரோபா இருக்கும் இடத்துக்கு விரைந்து போக அவர் தனது மகன்களில் ஒருவனான ஹேர்மஸின் உதவியை நாடுகிறார். மகனும் உடனடியாக தனது தந்தையின் காதலுக்கு உதவ முன் வருகிறான். (குட் பேமிலி!)

கடவுள் ஜீயஸின் அரபியக் குதிரைகள் பொருந்திய ஆடம்பரத் தேரில் தந்தையை ஏற்றிக்கொண்டு கடற்கரையை நோக்கி விரைகிறான் ஹேமஸ். என்னதான் மிகப்பெரிய கடவுளாக இருந்தாலும் வயதான கிழவனான தன்னை அழகி யுரோபா, “ச்சீ... அங்கிட்டு போயா பெருசு” என இடது கையால் புறக்கணித்து விடுவாளோ என்ற பயம் ஜீயஸுக்கு வருகிறது, எனவே அவர் உடனடியாக ஓர் அழகான வெள்ளைக் காளையின் உருவம் கொள்கிறார்.

ஜீயஸ் (Zeus)

பளிச்சென்று வெள்ளை நிறத்தில், உயரமாகவும், கம்பீரமாகவும் அங்கே வந்த அற்புதமான காளையைப் பார்த்து யுரோபாவும் அவளது தோழிகளும் பிரமிக்கிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் சாந்தமாகத் தோன்றிய அந்தக் கம்பீரமான வெள்ளைக் காளை, பூக்களை எல்லாம் மிஞ்சிவிடும் ஒரு மிக இனிமையான வாசனையைத் தந்து கொண்டிருந்தது. ஒருவேளை இருப்பதிலேயே காஸ்ட்லியான பெர்ஃப்யூம் அடித்து வந்திருப்பார் போல. உடனே கையில் பறித்து வைத்திருந்த பூக்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு காளையின் அருகே செல்கிறார்கள். ஜீயஸின் ப்ளான் சக்சஸ் ஆகிறது.

அதன் கம்பீரமான அழகிலும், சாதுவான குணத்திலும், மனம் மயக்கும் மணத்திலும் மனதைப் பறிகொடுத்த பெண்கள் அக்காளையின் மேல் ஏறி சவாரி போக விரும்புகின்றனர். தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது தெரியாத அழகி யுரோபா, தன் நண்பிகளை எல்லாம் முந்திக்கொண்டு முதல் ஆளாக ஓடிச்சென்று காளையின் மேல் ஏறி அமர்ந்து விடுகிறாள். அவளால் கரை புரண்டு ஓடும் உற்சாகத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. சந்தோஷத்தில் கூச்சலிடுகிறாள்.

கடவுளின் கிட்நாப் ப்ளான்

“மாட்டினியா” என மனதுக்குள் குஷியான காளை வடிவில் இருக்கும் கடவுள் ஜீயஸ், யுரோபாவை ஏற்றிக்கொண்டு மெல்ல மெல்லக் கடற்கரையைச் சுற்றி நடக்க ஆரம்பிக்கிறார். சிறிது சிறிதாக அவளை ஏனைய பெண்களிடம் இருந்து விலக்கி, தூரமாக அழைத்துச் செல்கிறது அந்தக் காளை.

கடலை அடைந்த காளை, அழகி யுரோபாவை முதுகில் ஏற்றிக்கொண்டு நீரில் நீந்த ஆரம்பித்த போது கூட யுரோபாவுக்கு தாம் கடத்தப்படுகிறோம் என்பது தெரியவில்லை. எதிர்த்து வரும் வெள்ளை அலைகளை எல்லாம் புயலைப் போலக் கிழித்துக்கொண்டு காளை சீறிப்பாய்ந்த போது, யுரோபா உற்சாக மிகுதியில் கூச்சலிடுகிறாள். மெல்ல மெல்ல வேகமெடுக்கும் காளை ஒரு கட்டத்தில் கடலின் மையத்தை அடையும் போது கரையும், கரையில் நின்றிருந்த நண்பிகளும் கண்ணை விட்டு மறைந்து காணாமல் போகின்றனர். அப்போதுதான் இந்தக் காளை நம்மை ஏமாற்றி எங்கோ அழைத்துச் செல்கிறது என்பது யுரோபாவுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. கடல் நீரின் மேலே, ஆக்ரோஷமாக ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் காளையின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்வது தவிர வேறு வழி அவளுக்குத் தெரியவில்லை. 'இதோ தோ கிலோமீட்டர்' என்பதாக இரவு முழுவதும் கடலில் நீந்திய காளை, காலை விடிந்ததும் கரையைக் காண்கிறது.

காளை மீது அமர்ந்து செல்லும் யுரோபா (The abduction of Europa)

பளிங்குக் கற்கள் சிதறியது போலப் பளபளப்பாக ஜொலித்த கடற்கரையின் வெள்ளை மணல்கள் மேல் அழகி யுரோபாவை இறக்கிவிடும் அக்காளை அங்கிருந்து அகன்று செல்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில், ஒரு புறம் மணல் வெளியும், மறுபுறம் சலனம் ஏதும் இல்லாது அமைதியாகக் காட்சியளித்த கடலும்தான் தெரிகிறது. 'புதுப்பேட்டை' தனுஷ் போல “அலோ! இங்க யாராச்சும் இருக்கீங்களா? அமைதியா இருக்கு, ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு!” என்று கத்துகிறாள். யாருமே இல்லாத தீவில் சிக்கிக்கொண்டு விட்டோமே எனப் பயத்தில் அஞ்சி நடுங்குகிறாள். இனிமேல் தன் வீட்டுக்குத் திரும்பவே முடியாது என எண்ணி, வேறு வழியே இல்லை என நினைத்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறாள். அப்போது அங்கே திடீரென்று கண்களைக் கூசச் செய்யும் ஒரு பிரகாசமான ஒளி ஒன்று அவள் முன் தோன்றுகிறது.

ஒளியிலே தெரிந்தது தேவதையா, ராட்சசனா? யுரோபாவுக்கு என்ன நடந்தது? தன் உயிரை மாய்த்துக்கொண்டு இறந்துபோனாளா, இல்லை காப்பாற்றப்பட்டாளா? கடவுளுக்கு எல்லாம் கடவுளான பலம் பொருந்திய ஜீயஸ்ஸின் காதல் கைகூடியதா?
இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ள அடுத்த வாரம்வரை காத்திருங்கள். அதுவரை அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள்.

- Euro Myths தெரிஞ்சிக்கலாமா?!



source https://www.vikatan.com/literature/culture/euro-myths-the-story-of-europa-and-her-abduction-by-zeus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக