Ad

திங்கள், 20 பிப்ரவரி, 2023

திருச்சி: ``இதில் எந்த நாடகமும் இல்லை” - துப்பாக்கிச்சூடு குறித்து கமிஷனர் சத்யபிரியா

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரெளடி துரை (எ) துரைசாமி. இவர்மீது கொலை வழக்குகள் உட்பட சுமார் 64 வழக்குகள் இருக்கின்றன. துரையின் சகோதரரான சோமு என்பவர்மீதும் கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி சீனிவாச நகர் பகுதியிலுள்ள வீட்டில் நடைபெற்ற நகைக் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் இருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது. அதையடுத்து நேற்று காலை ரெளடிகள் இருவரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்பதற்காக போலீஸார் அவர்களை ஜீப்பில் வைத்துக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்படி திருச்சி குழுமாயி அம்மன் கோயில் அருகே போலீஸ் ஜீப்பில் சென்றபோது, ரெளடிகள் இருவரும் போலீஸாரைக் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ரெளடிகள் இருவர் கால்களிலும் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து, திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர்.

சம்பவ இடத்தில் போலீஸ் கமிஷனர் சத்யபிரியா

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு நேரில் வந்து ஆய்வுசெய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த துரை (எ) துரைசாமி, அவரோட தம்பி சோமுவும் பல்வேறு குற்றங்களை செஞ்சுருக்காங்க. ரொம்ப நாளா இவங்க தேடப்பட்ட குற்றவாளிகள்தான். சுமார் 60-70 வழக்குகள் துரை மேல இருக்கு. அதேமாதிரி வாரன்ட் பெண்டிங், 25 சம்மன் பெண்டிங் இருந்தது. இது சம்பந்தமாக ஸ்பெஷல் டீம் இவங்களைத் தேடிக்கிட்டு இருந்தாங்க. அதேமாதிரி உறையூர்ல நடந்த ஒரு க்ரைம் சம்பவத்துல, கொஞ்சம் தகவல் கிடைச்சு ரெண்டு பேரையும் போலீஸார் கைது பண்ணினாங்க. அதுக்கப்புறம் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை மீட்க, சில இடத்துக்கு தேடிட்டுப் போனப்ப, அவங்க போலீஸைத் தாக்கிட்டு ஓட முயற்சிக்கும்போது இந்தச் சம்பவம் நடந்துருக்கு.

போலீஸைத் தாக்குனதால தற்காப்புக்காக ரெண்டு ரவுண்ட் துப்பாக்கிச்சூடு நடத்தி அவங்களைப் பிடிச்சிருக்காங்க. குற்றவாளிகள் கத்திவெச்சிருந்தாங்க. அதை போலீஸார் பறிமுதல் செஞ்சு ஜீப்ல வெச்சுருந்தாங்க. வண்டி நிலைதடுமாறி ஆக்சிடன்ட் ஆனதும் அங்கிருந்து தப்பிச்சு ஓடுனப்ப பறிமுதல் செஞ்சுவெச்சுருந்த அந்தக் கத்திகளை எடுத்துப் பயன்படுத்தியிருக்காங்க. குற்றவாளிகளை கோர்ட்ல ஆஜர் செஞ்சு, பழைய வழக்குகளை முடிக்கணும்னுதான் நாங்க நினைக்கிறோம். போலீஸைத் தாக்குனாங்கன்னா நிச்சயமாக அவங்க மேல நாங்களும் கடுமையான நடவடிக்கை எடுப்போம். மற்றபடி இதில் எந்த நாடகமும் இல்லை” என்றார்.



source https://www.vikatan.com/news/crime/trichy-city-police-commissioner-sathyapriya-about-gun-shot-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக