Ad

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

ஒன் பை டூ

தமிழரசி, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

“அக்கா கனிமொழி சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பா.ஜ.க-வை எந்தக் கூட்டணியில் சேர்த்தாலும், அந்தக் கூட்டணிக்கு இயல்பாகக் கிடைக்கக்கூடிய ஓட்டுக்கூட கிடைக்காமல் போய்விடும் என்பது வரலாறு. இதனால்தான், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க வேட்பாளர்களே பிரதமர் மோடியின் படத்தை மறைத்துவிட்டு, ஜெயலலிதாவின் புகைப்படத்தைவைத்து வாக்கு சேகரித்த கூத்துகள் நடந்தன. ஏற்கெனவே, நோட்டாவுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் கட்சி பா.ஜ.க. இப்போது ஒன்பது ஆண்டுக்கால ஒன்றிய பா.ஜ.க ஆட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியில் வேறு இருக்கிறார்கள். அத்தியாவசிய உணவுப்பொருள், மருந்துகளுக்குக்கூட ஜி.எஸ்.டி வரி விதித்ததையும், பணக்காரர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக ஏழைகளைப் பரிதவிக்கவிட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதையும், மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டியதையும் தவிர ஒன்றிய பா.ஜ.க அரசு நாட்டுக்கு எதையும் செய்யவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததுதான் தோல்விக்குக் காரணம் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே சொல்லும் நிலை வந்தது இதனால்தான். கூட்டணியிலுள்ள அ.தி.மு.க-வினரே, ‘நீங்கள் ஓட்டுக் கேட்டு எங்களுடன் வர வேண்டாம். பா.ஜ.க கொடியோடு வந்தால் எங்களுக்குக் கிடைக்கும் வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும். பிரசாரத்துக்கு வராமல் இருப்பதுதான் நீங்கள் இந்தத் தேர்தலில் எங்களுக்குச் செய்யும் பெரிய உதவி’ என்று வெளிப்படையாகவே சொல்வதை ஈரோட்டில் காண முடிகிறது.”

தமிழரசி, கார்த்தியாயினி

கார்த்தியாயினி, மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க

“கனிமொழி பேசியிருப்பது நகைப்புக்குரியது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்று 7.8 சதவிகித வாக்குகள் பெற்றதை மறந்துவிட வேண்டாம். தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கோட்டைக்குச் சென்றுவிட்டனர். இன்னும் எத்தனை காலம்தான், `நோட்டாவுடன் போட்டி’ என்று பேசிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் மாற்று சக்தியாக வளர்ந்துவரும் பா.ஜ.க., தி.மு.க-வுக்கு முடிவுரை எழுதப்போகிறது என்ற பதற்றத்திலேயே கனிமொழி இப்படிப் பேசியிருக்கிறார். உண்மையில் ஈரோடு இடைத்தேர்தலைச் சந்திக்க தி.மு.க-வுக்கு தைரியம் இல்லை. 22 மாத தி.மு.க ஆட்சியில் உருப்படியாக எந்தத் திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை. தேர்தல் வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. பொதுமக்கள் தி.மு.க அரசின் மீது அதிருப்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். எப்படி மக்களைச் சந்திப்பது, என்ன சொல்லி வாக்கு கேட்பது என்ற அச்சத்தில்தான், எப்படியாவது அனுதாப வாக்கு வாங்கியாவது வெற்றிபெற வேண்டும் என்று மறைந்த எம்.எல்.ஏ-வின் குடும்பத்துக்கே சீட் கொடுத்திருக்கிறது. தோல்வி பயம் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அனைத்து அமைச்சர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது தி.மு.க. அ.தி.மு.க-வுடனான கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. எங்களைத் தேர்தல் பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. கூட்டணிக்குள் குளறுபடி செய்து குளிர்காய நினைக்கிறது தி.மு.க. ஈரோட்டில் அவர்களது எண்ணம் பலிக்காது.”



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-kanimozhi-talks-about-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக