Ad

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் மன அழுத்தம்; இதையெல்லாம் செய்யவே கூடாது|பச்சிளம் குழந்தை பராமரிப்பு– 8

பச்சிளம் குழந்தை வளர்ப்பு என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதிலும் விரிவாகவும் விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவர் மு. ஜெயராஜ்

கேள்வி: எனக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக, 38வது வாரத்திலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பால் போதுமான அளவு சுரக்காத காரணத்தால், 3-வது நாளிலிருந்து, தாய்ப்பாலுடன் பவுடர் பாலையும் பாலாடையில் குழந்தைக்கு கொடுக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தினார்; தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க ‘Domstal’ என்னும் மருந்தையும் தொடங்கினார். தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க வேறு என்ன வழிமுறைகள் உள்ளன... தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கவில்லையென்றால், பவுடர் பால் தான் தர வேண்டுமா? பசும்பால் கொடுக்கக் கூடாதா?

தங்கள் கேள்விக்கு விடையளிக்கும் முன் தாய்ப்பால் சுரப்பு எவ்வாறு நிகழ்கிறதென்பதை விரிவாகக் காண்போம்.

முன்புற பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து (Anterior Pituitary Gland) உற்பத்தியாகும் புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன் தான், தாயின் மார்பகங்களில் உள்ள பால்சுரப்பிகளில் இருந்து பால் சுரக்க காரணியாகிறது. தாயின் மார்பகத்தை குழந்தை சப்பும்போது, காம்புகளிலுள்ள நரம்புகளிலிருந்து சமிக்ஞைகள் முன்புற பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, புரோலாக்டின் ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன. இந்த புரோலாக்டின் ஹார்மோன் நேரடியாக மார்பகங்களிலுள்ள பால்சுரப்பிகளைத் தூண்டி, தாய்ப்பாலைச் சுரக்கச் செய்கின்றன. இவ்வாறு, தூண்டுதல் முதல் பால் சுரத்தல் வரை நிகழும் சுழற்சியை, புரோலாக்டின் மறிவினை (Prolactin reflex) அல்லது பால் சுரத்திடும் மறிவினை (Milk Secretion reflex) என்பர்.

தாயின் மார்பகத்தை குழந்தை அதிகமாகச் சப்பும்போது, அதிகமாக தாய்ப்பால் சுரக்கும். குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாக தாயின் மார்பகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் ‘பால் சுரத்திடும் மறிவினை’ தொடங்கிவிடும். அதனால்தான், குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் கொடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தேவை அதிகரிக்கும்போது, தாய்ப்பால் சுரப்பதும் அதிகரிக்கும். அதனால்தான், ஒவ்வொரு 2-3 மணிநேரத்திற்கு ஒரு முறையும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். புரோலாக்டின் ஹார்மோன், இரவு நேரத்தில் உற்பத்தி ஆவதால், புரோலாக்டின் மறிவினை தொடர்வதற்கு, இரவு நேரத்தில் தாய்ப்பால் அளிப்பது மிக அவசியமாகும்.

பின்புற பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து (Posterior Pituitary Gland) உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்மோன் தான் தாய்ப்பாலானது, பால் சுரப்பிகளில் இருந்து வெளிவருவதற்கு காரணம். ஆக்ஸிடோசின் ஹார்மோன், பால்சுரப்பிகளைச் சுற்றியிருக்கும் தோலிழைம செல்களை (Myoepithelial cells) சுருங்கச் செய்து, பால்சுரப்பிகளில் இருந்து தாய்ப்பாலை வெளியேற்றி, பாலேந்து நாளங்களுக்கு (Lactiferous sinuses) தாய்ப்பாலைக் கடத்துகிறது. தாயின் மார்பகத்தை குழந்தை சப்பும்போது, காம்புகளிலுள்ள நரம்புகளிலிருந்து சமிக்ஞைகள் பின்புற பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, ஆக்ஸிடோசின் ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன.

ஆக்ஸிடோசின் மறிவினை

இவ்வாறு, தூண்டுதல் முதல் தாய்ப்பால் வெளிவருதல் வரை நிகழும் சுழற்சியை, ஆக்ஸிடோசின் மறிவினை (Oxytocin reflex) அல்லது பால் வெளியேற்றும் மறிவினை (Milk Ejection reflex/ Let-down reflex) என்பர். ஆக்ஸிடோசின் ஹார்மோனானது, குழந்தை பால் குடிக்கும்போது மட்டுமல்லாமல், குழந்தையை பற்றி நினைக்கும்போதும், குழந்தையைப் பார்க்கும்போதும், குழந்தையின் ஒலியைக் கேட்கும்போதுகூட சுரந்திடும்.

எனவே, தாயின் உணர்வுகள், பால் வெளியேற்றும் மறிவினையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென்பதால், மன அமைதி மற்றும் நம்பிக்கையுடன் தாய்ப்பால் அளிக்கும்போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். மாறாக கவலை, மன அழுத்தம், வலி மற்றும் நம்பிக்கையின்மை போன்றவை, ஆக்ஸிடோசின் மறிவினையில் இடையூறு ஏற்படுத்துவதால், பால் சுரத்தல் மிகவும் குறையக்கூடும்.

இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன் தான், பிரசவத்தின் போது, கர்பப்பை சுருங்கி, குழந்தை வெளியேறுவதற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான், குழந்தை பிறந்த உடன் அழுதுவிட்டால், குழந்தையை தாயின் வயிற்றில் குப்புற படுக்கவிட்டு, சுத்தமான துணியைக் கொண்டு குழந்தையின் தோலை உலர்த்துவது, தொப்புள் கொடி கிளாம்ப் அணிவித்து மீதமுள்ள தொப்புள் கொட்டியை வெட்டுவது போன்ற Routine Care படிநிலைகளைச் செய்ய அறிவுறுத்துகிறோம். இவ்வாறு, பிறந்தவுடன், தாயின் சருமத்தின் மீது, குழந்தையின் சருமத்தை நேரடியாகக் கிடத்துவதால், இதனை Skin-to-skin contact என்போம். Skin-to-skin contact ஏற்படுத்துவதன் மூலம், கர்ப்பப்பையை விட்டு வெளிவரும் குழந்தை வெளியுலக சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ளவும், வெப்பநிலையைப் பராமரித்துக் கொள்ளவும் முடியும்.

Skin-to-skin contact

இவ்வாறு, Skin-to-skin contact ஏற்படுத்துவதன் மூலம், தாய்க்கு ஆக்ஸிடோசின் ஹார்மோன் மேலும் சுரந்து, கர்ப்பபை சுருங்கி, பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப்போக்கைத் தடுக்கிறது. ஆக்ஸிடோசின் ஹார்மோன் மறிவினை மூலம் தாய்ப்பால் வெளியேற்றம் தொடங்கிவிடும்.

எனவே, குழந்தை பிறந்த பிறகான Routine Care முடிந்த பிறகு, நேரடியாக தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கிவிடலாம். இவ்வாறு, குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கும் தாய்மார்களில், தாய்ப்பால் சுரத்தல், குழந்தைக்கு நோய்த்தொற்றிற்கெதிரான பாதுகாப்பு, மிகக்குறைந்த பச்சிளங்குழந்தைகள் மரண விகிதம் போன்ற பல்வேறு நன்மைகள் விளைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தான், சுகப்பிரசவம் எனில் பிறந்த 30 நிமிடங்களுக்குள்ளும், சிசேரியன் அறுவை சிகிச்சை எனில் பிறந்த 60 நிமிடங்களுக்குள்ளும் தாய்ப்பால் தொடங்கிட விடவேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம்.

தங்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதால், பின்வரும் காரணங்களால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருந்திருக்கலாம்; நான் மேலே குறிப்பிட்டபடி கவலை, மன அழுத்தம், வலி மற்றும் நம்பிக்கையின்மை போன்றவை, ஆக்ஸிடோசின் மறிவினையில் இடையூறு ஏற்படுத்துவதால், பால் சுரத்தல் மிகவும் குறையக்கூடும்.

அறுவை சிகிச்சையினால் ஏற்பட்டுள்ள வலி கூட பால் சுரத்தலைக் குறைத்திருக்கும். தாய்ப்பால் போதுமான அளவு வரவில்லை என்று நீங்கள் தொடர்ந்து மனஅழுத்ததிற்கு உள்ளாகும்போது தாய்ப்பால் மேலும் குறையக்கூடும். குழந்தை பிறந்த முதல் 2-4 நாள்களில் உற்பத்தியாகும் சீம்பாலின் (Colostrum) அளவு குறைவாகவே இருக்குமென்பதால், முதல் சில நாள்கள் தாய்ப்பாலின் அளவு குறைவாகவே இருக்கும். அதனை தொடர்ந்து தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கும். எனவே, தாய்ப்பால் அதிகம் சுரக்கவில்லை என்று மீண்டும்மீண்டும் நினைத்து அழுத்தத்திற்கு உள்ளாகாமல், நம்பிக்கையுடன் நீங்கள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்க்கினாலே, தாய்ப்பால் சுரப்பு தானாக அதிகரிக்கும்.

Four Steps of Positioning and Attachment

பால் சுரத்திடும் மறிவினைக்கு காரணமான புரோலாக்டின் ஹார்மோன், இரவு நேரத்தில் உற்பத்தி ஆவதால், புரோலாக்டின் மறிவினை தொடர்வதற்கு, இரவு நேரத்தில் தாய்ப்பால் அளிப்பது மிக அவசியமாகும். எனவே 2-3 மணிநேரத்திற்கு ஒருமுறை கட்டாயமாக தாய்ப்பால் கொடுத்திடுங்கள். சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டபடி தாய்ப்பால் கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் நான்கு நிலைகள் மற்றும் நான்கு இணைப்பு படிகளை (Four Steps of Positioning and Attachment) உறுதி செய்ய வேண்டும். மாறாக தவறுதலான நிலை மற்றும் இணைப்பு இருந்தால், தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிடும்.

ஒரு மார்பகத்தில் முழுமையாக் கொடுத்து முடித்த பிறகு, அடுத்த மார்பகத்தில் கொடுக்க வேண்டும். குழந்தை பசியாறி விட்டால், தானாகவே மார்பகத்திருந்து தனது வாயை எடுத்து விடும். அதன்பிறகு நன்றாக 2-3 மணிநேரம் தூங்கும். அடுத்த முறை, பாதியிலே விடுபட்ட மார்பகத்திருலிருந்து தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும். மாறாக ஒரு மார்பகத்திலுள்ள தாய்ப்பாலை முற்றிலும் தராத பட்சத்தில், தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிடும்.

சர்க்கரைத் தண்ணீர், கிரைப் வாட்டர், தேன் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பிறந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டாம். இவ்வாறு, தாய்ப்பால் தொடங்குவதற்கு முன் சர்க்கரைத் தண்ணீர், கிரைப் வாட்டர், தேன் போன்று Prelacteal feeds அல்லது தாய்ப்பால் தொடங்கிய பிறகு Supplemental feeds கிடைக்கப்பெற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டலில் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவேதான் குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம்.

தாய்ப்பா

மார்பகங்களில் Inverted/flat nipples, sore nipples, breast engorgement மற்றும் breast abscess போன்ற பிரச்னைகள் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பில் பாதிப்பு ஏற்படும். எனவே, மார்பகங்களில் பிரச்னையுள்ளதா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கான சிகிச்சையைத் தொடங்குவது முக்கியமாகும்.

அடுத்த வாரம் தாய்ப்பாலின் சிறப்புகள், தாய்ப்பாலுக்கும் பசும்பால், பவுடர் பால் போன்றவற்றிற்கும் உள்ள வேறுபாடுகள் போன்றவை பற்றி விரிவாகக் காணலாம்.

பராமரிப்போம்…



source https://www.vikatan.com/health/stress-affecting-breast-milk-secretion

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக