Ad

திங்கள், 20 பிப்ரவரி, 2023

சிவகாசி: ``ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக-வின் தோல்வி கண்முன்னே நிற்கிறது'' - மாணிக்கம் தாகூர்

சிவகாசி மாநகராட்சி அம்மன்கோவில்பட்டி மேல்நிலைப்பள்ளியில் மத்திய கல்வி நிதியில் அமைக்கப்படும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் பணியை விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், மேயர் சங்கீதா, ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ்பிரியா ஆகியோர் நேற்று ஆய்வுசெய்தனர். அதன் பிறகு மாநகராட்சி 43-வது வார்டு அம்மன்கோவில்பட்டி தெருவில் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட போர்வெல்லுடன்கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி திறந்துவைத்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், ``சிவகாசி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் ரூ.1,000 கோடி நிதி கிடைத்து, மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியும். இதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதவிருக்கிறேன்.

மாணிக்கம் தாகூர்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கமல் கலந்துகொண்டார். ஈரோடு இடைத்தேர்தலில் கொள்கை அடிப்படையில் காங்கிரஸுக்கு கமல் ஆதரவு தெரிவித்திருக்கிறார். சிவகாசியில் மத்திய பெட்ரோலியம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்துக்குத் தலைமை அதிகாரி நியமிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. ரயில்வே திட்டங்கள், பட்டாசுத் தொழில் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசு சிவகாசியைப் புறக்கணித்துவருகிறது. தி.மு.க. அரசு 90 சதவிகிதத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது. புதுமைப்பெண் உள்ளிட்ட சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க-வின் தோல்வி கண்முன்னே நிற்கிறது. இடைத்தேர்தல் வெற்றியென்பது வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையும்" என்றார்.

இதையடுத்து, அங்கிருந்து கிளம்பிய மாணிக்கம் தாகூர் எம்.பி-யை அந்தப் பகுதிப் பெண்கள் முற்றுகையிட்டு சுகாதார வளாகம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனப் புகார் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அவர், "எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் இந்தப் பகுதியில் சுகாதார வளாகம் அமைக்கப்படவிருக்கிறது" எனக் கூறினார். இதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/manickam-taqore-mp-press-meet-in-sivakasi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக