Ad

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

உழைப்புச் சுரண்டல்: குமுறி வெடிக்கும் பெண்கள்… கொஞ்சமும் கலங்காத அமைச்சர்!

சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளில் அதிகம் பாதிப்படைபவர்கள் பெண்கள். உயர்த்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, முதலாளி, தொழிலாளி பேதமற்று பெண் என்ற ஒற்றைக் காரணத்தால் மட்டுமேபெண்கள்   அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். பாலினஏற்றத்தாழ்வை  எதிர்கொள்ளும்  பெண்கள் வருமானமளிக்கும் உழைப்பில் ஈடுபடுவது மிகவும் குறைவு. பெண்களுக்கான அடிப்படை தேவையான கழிவறை போன்றவை பெரும்பாலான பணியிடங்களில் இல்லாததாலும்,குடும்பங்கள் பெண்களை வேலைக்கு  அனுப்பாததாலும்,  வருமானம் ஈட்டும் உழைப்பில் பெண்களின்  பங்கு குறைவாகவே  உள்ளது.

வருமானமளிக்கும் உழைப்பில் ஈடுபடும் பெண்கள் நிரந்தரப் பணியாளர்களாகவும், ஒப்பந்த முறையிலும்  பணிபுரிகின்றனர்.  சுமார் 12 சதவிகிதம் பெண்கள் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர். மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், உள்ளாட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் தூய்மைப் பணியாளராகவும், தொழிற்சாலை தொழிலாளிகளாகவும்,  செவிலியர்களாகவும் ஒப்பந்த முறையில் வேலை செய்கின்றனர்.  ஒப்பந்த முறையில் வேலை செய்யும் போது அடிப்படையான உரிமைகள்கூட மறுக்கப்படும். ஒப்பந்தமுறையில் பெண்கள் அதிகமாகப் பணியாற்றுவதால் அவர்களின் உழைப்பு  சுரண்டப்படுகிறது. 

தூய்மைப் பணியாளர்கள் (மாதிரி படம்)

மால்களில் வேலை செய்யும் பணியாளரிடம் பேசினோம். அவர், 'நான் இரண்டு வருஷமா இங்க வேலை  பாக்குறேன், ஆபிஸ் வேலையில  தீபாவளி, பொங்கல்னு  விசேஷத்துக்கல்லாம் அரசு விடுமுறை இருக்கும் . எங்களுக்கெல்லாம் எதுவும் கிடையாது. எங்களுக்கும் நல்ல நாள், பெரிய நாள்ல குடும்பத்தோட இருக்க ஆசையா இருக்காதா? கான்ட்ராக்ட்ல வேலை பாக்குறதால எப்ப வேலை போகும்னு சொல்ல முடியாது. எங்க  குறைய யார்கிட்ட சொல்லுறதுனு தெரியல' என்று வருத்தப்பட்டார்.

சென்னை  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்   தூய்மைப்பணியாளர்  ஒருவரிடம் பேசினோம். ''கான்ட்ராக்ட்டுல வேலை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைவான சம்பளம் தான்.  எங்களுக்குனு ஒருநாள் கூட வார விடுமுறை இல்லை. பொங்கல், தீபாவளிக்கும் லீவு இல்ல, நாங்களே எடுத்தா தான்,அதுவும் சம்பளத்துல பிடிச்சுருவாங்க.கொரோனா காலத்துல வேலை அதிகமா இருந்துச்சு. ஆனா வீட்டுக்கு போயிட்டு வர்றதுக்கு  எந்த பொதுபோக்குவரத்து வசதியும் இல்ல. ஆட்டோல தான் போயிட்டு வருவோம், ஒருநாளைக்கு  சம்பளம் 250 ரூபாய்னா போக்குவரத்து செலவு 230 ரூபா.

செலவுக்கு பயந்துட்டு பாதி பேர் இங்கேயே தங்கிருவாங்க, புள்ள குட்டிய பாக்க முடியாத ஏக்கமும் சாப்பாடு ஒழுங்கா கிடைக்காததும் வேலை செய்றவங்க பாதி உடம்ப வருத்திருச்சு. கொரோனா காலத்துல எல்லாருமே வந்தோம், கொரோனா வார்டுக்குள்ள இருந்தவங்களுக்கு மட்டும் தான் கொரோனா கால ஊக்கத்தொகை கொடுத்தாங்க. எங்களுக்கு இன்னும் தரலை. கான்ட்ராக்ட்ல வேலை செய்ற நாங்க நோயாளியின் சளி, வாந்தினு எல்லாத்தையும் சுத்தப்படுத்துறோம். ஆனா எங்களுக்குனு நிம்மதியா சாப்பிடக்கூட இடம் இல்ல'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவரின் கண்கள் கலங்கின. 

செவிலியர்கள்

கொரோனா காலங்களில்  ஒப்பந்த முறையில் செவிலியராகப்  பணிபுரிந்தவரிடம்  பேசினோம். அவர் "கொரோனாவுக்கு முன்னாடி தனியார் மருத்துவமனையில வேலை பாத்தேன். அரசு மருத்துவமனையில ஆட்கள் தேவை இருந்துச்சு. அரசு 6 மாச  ஒப்பந்த அடிப்படையில எங்கள எடுத்தாங்க, நிரந்தரப்படுத்துறதா சொன்னாங்க. 2 வருஷம் ஏழு மாசம் வேல பாத்தோம், நிரந்தரப்படுத்தல. கடந்த 2 மாசமா வேலை இல்லாம வீட்டுல தான் இருக்கேன். என்னோட 3000 பேருக்கு  வேலை போச்சு. 

கொரோனா காலத்துல கொடுக்க வேண்டிய ஊக்கத்தொகையும் பாதி பேருக்கு கொடுக்கல. எனக்கு இன்னும் 6 மாச சம்பளம்  போடல, வேலை பறிபோயும் 2 மாசம் ஆச்சு, எப்படி சமாளிக்கிறதுனு தெரியல. திரும்ப ஒப்பந்த அடிப்படையில வேலைக்கு எடுக்குறதா சொல்றாங்க, அதுவும் 1000 பேருக்கு தான் வேலை இருக்காம். நிரந்தரப்படுத்த மாட்டாங்கனு தெரிஞ்சும்  திரும்ப எப்படி வேலைல சேர தயக்கமா இருக்கு''  என்றார். 

உழைக்கும் பெண்கள்  ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகி  செண்பகத்திடம்   (சிஐடியு மாநில துணைத்தலைவர் )   பேசினோம். அவர், ''ஒப்பந்த முறையில் வேலை செய்யும்  தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பும், பணியிடப் பாதுகாப்பும் இல்லை. பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் இரு வேறு ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒன்று பாலின  ஒடுக்குமுறை, இன்னொன்று  ஒப்பந்தமுறையில் ஏற்படும் சிக்கல்கள்.

ஒப்பந்தத்தில் வேலை செய்யும்  தொழிலாளர்கள்  மருத்துவ காரணங்களால், ஒரு வார விடுப்பு எடுத்தால்  மீண்டும் பணிக்குச் செல்லும்போது வேலை இருக்குமா என்பதே கேள்விக்குறிதான். குழந்தை பிறந்த மூன்று நாள்களிலே  வேலைக்குச் செல்லும் நெருக்கடி  சிலருக்கு ஏற்படுகிறது. பெண்கள் வலிகளை மறைத்து குடும்பத்திற்காக உழைக்கிறார்கள். ஒப்பந்த முறையில் தொழிலாளிக்கும், முதலாளிக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இருக்காது.

செண்பகம்

இதனால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் இருக்கும். வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் பெண்கள் இடைத் தரகர்கள் கொடுக்கும் பாலியல் தொல்லைகளை சகித்துக்  கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறது. சங்கம் வைத்து உரிமைகளைக் கேட்கும் வாய்ப்புகூட அவர்களுக்கு இல்லை.   தொழிற்சங்கத்தில் இணைந்தாலே வேலைக்கு ஆபத்து ஏற்படும்போது, பெண் தொழிலாளர்கள் தயங்குகிறார்கள். அவர்களின்  அவல நிலை அறிந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது முறையல்ல'' என்றார்  செண்பகம். 

சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசினோம். அவர்," ஒப்பந்த முறையில் எப்போது வேண்டுமானாலும்  வேலை பறிபோக வாய்ப்பிருக்கிறது என்பது  தெரிந்தும் ஏன்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். அவர்களுக்கு ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் முன் வைக்கட்டும். நடவடிக்கை எடுக்கிறோம்'' என்றார் அலட்சியமாக.

நாட்டில் எந்தவொரு குடிமகனும் சுரண்டலுக்கு ஆட்படுத்தக்கூடாது என்பதுதான் அர்சாங்கத்தின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற வேண்டிய உயரிய பொறுப்பில் இருக்கும் அமைச்சரே, ’ஏன் கையெழுத்துப் போட்டார்கள்?’ என்று கேட்கும் அவல நிலையை யாரிடம் போய் அழுவது?

சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்

‘உழைப்புச் சுரண்டலை அறவே அனுமதிக்க முடியாது. உடனே உரிய நடவடிக்கை எடுக்கிறேன்‘ என்றபடி அமைச்சர் கீதாஜீவன் துள்ளியெழுவார் என்று எதிர்பார்த்தது நம் தவறுதான். ஆம், சுகாதாரத்துறை, மின்வாரியம், குடிநீர்வாரியம், உள்ளாட்சித்துறை என அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் இப்படி ஒப்பந்த அடிப்படையில் கீதாஜீவன் சார்ந்த அரசாங்கமேதானே உழைப்புச் சுரண்டலைச் செய்துகொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, அவரிடமே நியாயம் கேட்டுப்போனது தவறுதானே?!



source https://www.vikatan.com/women/women-in-contract-works

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக