Ad

வியாழன், 16 பிப்ரவரி, 2023

ஏரோ இந்தியா கண்காட்சியில் கவனம் ஈர்க்கும் அதானி ஸ்டால் - ராணுவத் துறையில் தடம் பதித்தது எப்படி?

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான ‘ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி’ பெங்களூரு விமானப்படைத் தளத்தில் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி இன்று (17-ம் தேதி) நிறைவடைகிறது. ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி வைப்பதுதான் வழக்கம்.

ஏரோ இந்தியா 2023

அந்த வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு பிரதமர் மோடி ஏரோ இந்தியா கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அது எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களை கிளப்பியது. இந்த கண்காட்சியில் இன்னொரு சர்ச்சையும் எழுந்தது. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் போர் விமானம் ஒன்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த விமானத்தின் பின்பகுதியில் அனுமன் படம் இருந்தது. மதச்சார்பற்ற நாட்டில், ஒரு பொதுத்துறை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விமானத்தில் அனுமன் படம் எப்படி இடம்பெறலாம் என்ற விமர்சனம் எழுந்தது. அதையடுத்து, அனுமன் படம் நீக்கப்பட்டது.

இந்த கண்காட்சியில் அதானியின் ஸ்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. அதானி குழுமத்தின் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமம் கடும் பாதிப்புகளைச் சந்தித்தது. ‘உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609-வது இடத்திலிருந்து அதானி, 2014-ல் மோடி பிரதமரான பிறகு மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு, தற்போது உலகப்பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்தார். அதற்கு மோடியே காரணம்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த சர்ச்சை ஓயாத சூழலில், பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா கண்காட்சியில் அதானி குழுமம் அமைத்திருக்கும் ஸ்டாலை காண்பவர்கள், விமானத்துறையில் அதானி நிறுவனம் இவ்வளவு வளர்ச்சியை எப்படி எட்டியது என்று வியந்துவருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, பாதுகாப்பு விமானத்துறையில் நுழைந்த அதானி நிறுவனம், ஐந்தே ஆண்டுகளில் அசாதாரண வளர்ச்சியை எட்டியது. அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட், ஆர்டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட், அதானி ஏரோஸ்பேஸ் அண்ட் டிஃபென்ஸ் லிமிடெட், அதானி நேவல் டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் லிமிடெட், ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற பல நிறுவனங்கள் அதானி குழுமத்தில் அங்கம் வகிக்கின்றன.

அதானி

வான் பாதுகாப்பு அமைப்புகள், சிறிய ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட தயாரிப்புகளில் ஈடுபட ஆரம்பித்த அதானி குழுமம், இன்றைக்கு பாதுகாப்புத்துறைக்குத் தேவையான முக்கியத் தளவாடங்களை உற்பத்தி செய்யக்கூடிய மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. சுமார் ரூ.1,500 கோடி முதலீட்டில், தெற்காசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து உற்பத்தி நிலையத்தை உத்தரப்பிரதேசத்தில் அமைப்பதற்கான முயற்சியிலும் அதானி குழுமம் இறங்கியிருக்கிறது.

பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் பல முன்னணி நிறுவனங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கிய அதானி குழுமம், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆல்பா டிசைன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியது. தேஜஸ் போர் விமானங்களுக்கான உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதற்கான ஆர்டர்களை ஆல்பா டிசைன் சிஸ்டம்ஸ் பெற்றிருக்கிறது. இதேபோல, உலக அளவில் பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களுக்குடன் அதானி குழுமம் ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறது.

அதானி லேண்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்திய விமான நிலையங்களுக்கு மிக முக்கியத் தேவையாக விளங்கும் ட்ரோன்களை எதிர்த்துத் தாக்கக்கூடிய கருவிகளைத் தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது.
இப்படியாக, பாதுகாப்புத்துறைக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக அதானி குழுமம் விளங்கிவருகிறது. இந்த நிலையில்தான், பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா கண்காட்சியில் பிரமாண்டமான முறையில் அதானி ஸ்டாலை அமைத்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சியிலும் மோடி அரசின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கும் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/adani-stall-is-a-center-of-attention-in-aero-india-2023-exhibition

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக