Ad

திங்கள், 13 பிப்ரவரி, 2023

ரூ.6,157 கோடி பாக்கி வைத்திருக்கும் மத்திய அரசு; பாதிப்புக்குள்ளாகும் 100 நாள் திட்டப் பயனாளிகள்!

இந்தியாவில் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலை வழங்கும் நோக்கத்துடன் `மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்' கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் நூறு நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்றாலும், அதைவிட குறைந்த நாள்களே வேலை வழங்கப்பட்டுவருகிறது என்கிற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இந்த நிலையில், இந்தத் திட்டத்துக்கான நிதி பட்ஜெட்டில் குறைக்கப்பட்டிருப்பது குறித்து கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

பட்ஜெட் 2023 - 24

இந்தத் திட்டத்துக்கு சமீபத்ததில் தாக்கல்செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 33 சதவிகிதம் குறைவு. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலேயே கண்டனம் தெரிவித்தன. இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யான ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்திருக்கிறார்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வழங்கப்பட வேண்டிய நிதி, தற்போது 14 மாநிலங்களுக்கு பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் ரூ.6,157 கோடியை மத்திய அரசு பாக்கிவைத்திருப்பதால், 14 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த 14 மாநிலங்களில் எட்டு மாநிலங்கள் பா.ஜ.க அல்லாத கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள். அதில், மேற்கு வங்கத்துக்கு ரூ.2,700 கோடி, ஆந்திராவுக்கு ரூ.836 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.638 கோடி பாக்கி இருக்கிறது.

நூறு நாள் வேலை

விதிமீறல், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக, ஓராண்டுக்கு மேலாக நிதி பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்தத் திட்டத்தின் பயனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. பயனாளிகளில் பெரும்பாலோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வேலை உறுதிக்கான மக்கள் நடவடிக்கை’ என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக, இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 21 சதவிகிதம் பழைய பாக்கியைக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜான் பிரிட்டாஸ்

‘சமீபத்தில் மத்திய அரசு தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையில், இந்தத் திட்டத்துக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை வெறும் 20 நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால், இந்தத் திட்டமோ 100 நாள்களுக்கு வேலையை உத்தரவாதம் செய்வதற்கான திட்டமாகும்’ என்கிறார் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடர்பான செயற்பாட்டாளர் நிகில் தே.

100 நாள் திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mgnregs-suffers-as-centres-dues-to-14-states-amount-to-6157-crore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக