Ad

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

`கஞ்சாவுக்கு எதிராக புனிதப் போர்’ - விருதுநகர் காவல் நிலையத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த டி.ஜி.பி

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்றிரவு திடீரென விஜயம் செய்தார். அப்போது, விருதுநகர் -மதுரை சாலையில் உள்ள மேற்கு காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில், காவல் நிலைய கோப்புகளை சிறப்பாக பராமரிப்பு செய்ததற்காக பெண் காவலர் முத்துலட்சுமியை பாராட்டி ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்தினார்.

பாராட்டு

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசுகையில், "விருதுநகர் மாவட்ட காவல் நிலையங்களில் சர்ப்ரைஸ் ஆய்வு நடத்துவதற்காக வந்தேன். அதன்பேரில் மேற்கு காவல் நிலையத்தில் கோப்புகளை ஆய்வு செய்ததில் காவல்நிலையத்திற்கு வரும் புகார்தாரர்கள், மனுதாரர்கள், பார்வையாளர்கள் என ஒவ்வொருவரின் வருகை குறித்தும் டிஜிட்டல் முறையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. புகார்தாரர்களின் மனுவுக்கு விசாரணையின் மூலம் தீர்வு ஏற்பட்டதோடு நிற்காமல் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு போலீஸ் விசாரணை திருப்திகரமாக அமைந்ததா? என பின்னூட்டம் கேட்டு அதையும் பதிவு செய்யும் கோப்புகளும் பராமரிக்கப்படுவது பாராட்டதலுக்குரியது. எனவே, சிறப்பான முறையில் கோப்புகளை பராமரித்த மேற்கு காவல் நிலைய போலீஸூக்கு பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை கையாளும் போது சில நேரங்களில் விரும்பத்தகாத வண்ணம் போலீஸ் மீதும் தாக்குதல்கள் நடைபெறுகிறது. அந்தசமயத்தில் தற்காப்புக்காக துப்பாக்கிகளை பயன்படுத்தலாம் என போலீஸூக்கு ஏற்கனவே உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குழு புகைப்படம்

அதேநேரம் குற்றவாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில், அவர்களை காலுக்கு கீழ் சுடுவதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீஸ் மீது தொடரும் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டு பெருமளவு குறைத்திருக்கிறோம். மார்க்கெட்டில் கஞ்சாவின் விலை அதிகம் என்பதாலும் போலீஸின் கெடுபிடியால் கஞ்சா புழக்கம் குறைந்திருப்பதாலும், கஞ்சா போதைக்காக ஏங்குபவர்கள் தற்போது போதை மாத்திரையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த போதை மாத்திரைகள் மெடிக்கல்களிலும், ஆன்லைன் வழியாகவும் கிடைக்கிறது. எனவே அதை தடுப்பதற்கும் காவல்துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் கஞ்சா புழக்கம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதை மாவட்ட அளவில் பிரகடனப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏனெனில், கஞ்சா புழக்கமற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு ஏதேனும் கஞ்சா தொடர்பான வழக்குகளோ அல்லது விற்பனையோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே மிக கவனமாக இந்த விஷயத்தை கையாண்டு வருகிறோம்.

ஆகவே கஞ்சாவுக்கு எதிராக தமிழக காவல்துறை புனிதப் போர் நடத்தி வருகிறது. விரைவில் தமிழகத்தில் கஞ்சாவை முழுமையாக ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

கையெழுத்து

இதைத்தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு வெளியே, டி.ஜி.பி.சைலேந்திரபாபுவை சந்திப்பதற்காக காத்திருந்த காவலர்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளை சந்தித்து அவர் உரையாடி மகிழ்ந்தார். அப்போது ஆர்வமுடன் ஆட்டோகிராப் கேட்டு நின்ற குழந்தைகளிடம் பேசிய அவர், எதிர்கால இலட்சியங்களை கேட்டறிந்து அதற்கேற்ற வகையில் வாழ்த்துகளுடன் கையெழுத்துத்திட்டு ஊக்கப்படுத்தினார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/dgp-syledra-babu-surprise-visit-in-virudhunagar-west-police-station

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக