Ad

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

கடன் மோசடி நிறுவனங்களை ஒழித்துக்கட்டுங்கள்!

‘கடன் வாங்கித் தருகிறோம்’ என பொய் சொல்லி மக்களிடம் இருந்து பணம் வசூலித்து மோசடி செய்து வந்த ‘ஒண்டர்லோன்’ செயலிக்கு எதிராக விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சைபர் க்ரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்த ‘ஒண்டர்லோன்’ மோசடி நிறுவனம் பற்றி நம் மனதில் பல கேள்விகள் எழவே செய்கிறது. கடன் வாங்க நினைப்பவர்கள் பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, வங்கிசாரா நிதி நிறுவனங்களை எல்லாம் அணுகாமல், ‘ஆப்’ மூலம் கடன் தரும் நிறுவனங்களை ஏன் அணுகுகிறார்கள்?

ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்க நினைத்தால், அதிகம் அலையத்தான் வேண்டியிருக்கும். இந்த அலைச்சலுக்கு பயந்து, ஆன்லைனில் செயல்படும் ‘ஆப்’ நிறுவனங்களை அணுகினால், எளிதாக கடன் கிடைத்துவிடும் என்று நினைப்பது ஏன்? கடன் வாங்க நினைப்பவர்கள் முன்பின் தெரியாத ‘ஆப்’ நிறுவனங்களை இனிமேலாவது அணுகாமல் இருப்பது அவசியம்!

இந்த ‘ஒண்டர்லோன்’ நிறுவனம் பற்றி கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் இருந்து புகார் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிறுவனம் பற்றி புகார்கள் வரத் தொடங்கிய உடனேயே சைபர் க்ரைம் போலீஸார் இந்த நிறுவனத்தின் உண்மைத் தன்மை பற்றி விசாரித்து, உண்மையைக் கண்டறிந்து மக்களை எச்சரித்திருக்கலாமே! இந்த நிறுவனம் பற்றி விசாரியுங்கள் என உயர் நீதிமன்றம் சொல்லும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

இந்த ‘ஆப்’ மீது புகார் வரத் தொடங்கிய உடனேயே உரிய விசாரணைக்கு கூகுள் நிறுவனம் உத்தரவிட்டிருக்கலாம். குறைந்தபட்சம், தற்காலிகமாக அந்த ‘ஆப்’பை முடக்கியிருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல், ‘ஒண்டர்லோன்’ நிறுவனம் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தரத் தயார்’ என்று இப்போது சொல்கிறது கூகுள். ‘ஆப்’ ஸ்டோரில் இருக்கும் ஏதாவது ஒரு ‘ஆப்’ மீது புகார் வந்தால், உடனடியாக உரிய விசாரணை நடத்தி, அதனடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுப்பதை இனியாவது கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடன் கேட்டு வருபவர்களுக்குக் கடன் தராமல் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அலையவிடுவதால்தான், இதுமாதிரியான மோசடி நிறுவனங்களில் போய் மக்கள் சிக்குகிறார்கள். தகுதி இருந்தால், ஆதார் எண் அடிப்படையில் எல்லோருக்கும் கடன் தருவோம். ஆனால், வாங்கிய கடனை சரியாகத் திருப்பித் தரவில்லை எனில், இனி ஜென்மத்துக்கும் கடன் கிடைக்காது என்று கறாராகச் சொல்லும் துணிச்சல் வங்கிகளுக்கு ஏன் வரவில்லை?

இது மாதிரியான கடன் மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல் இருக்க, மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். எப்படியோ கடன் வாங்கி நிலைமையை சமாளித்து விடலாம் என்று நினைத்தால், நமக்குதான் பாதிப்பு வந்துசேரும் என்பதைக் கடன் வாங்க நினைக்கும் அனைவரும் அவசியம் புரிந்துகொண்டு, கடன் மோசடி நிறுவனங்களிடமிருந்து விலகி நிற்க வேண்டும்!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/editorial/announcements/action-for-high-court-loan-fraud-apps

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக