Ad

திங்கள், 13 பிப்ரவரி, 2023

"பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது" - இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்

தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வுதான், `விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரோடிருக்கிறார்' என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தது. தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், ``தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது. பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்" என்று கூறியிருந்தார்.

ஆனால், பழ.நெடுமாறனின் இந்தச் செய்தியை, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் முற்றிலுமாக மறுத்து, பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக, பிபிசி ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேணல் நலின் ஹேரத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில்," விடுதலைப் புலிகள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கான சுதந்திர நாடு கோரி போராடிக் கொண்டிருந்தனர்.

பழ.நெடுமாறன்

1983-ல் தொடங்கிய ஒரு கடுமையான போராட்டத்தை, சுமார் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை, இலங்கையின் ராணுவம் 2009-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொன்றதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தது. பிரபாகரன் 19 மே 2009-ம் ஆண்டு கொல்லப்பட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. DNA அதை நிரூபித்திருக்கிறது. இப்போது அவர் உயிருடன் இருப்பதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sri-lanka-dismisses-tamil-leaders-claim-that-ltte-chief-is-alive

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக