Ad

சனி, 18 பிப்ரவரி, 2023

பியூட்டி ப்ளஸ் ஹெல்த்தி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

வார இறுதியில் வாய்க்கு ருசியாகச் சாப்பிடவும் வேண்டும்.... சரும, கூந்தல் அழகுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்... என்னதான் செய்வது?

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல ஒரே வேலையில் இரண்டு விஷயங்களையும் செய்ய முடியும். யெஸ், வீக் எண்டு சமையலை, பியூட்டி ஸ்பெஷலாகவும் செய்துவிட்டால்....? ருசியும் அபாரம், அழகுக்கும் உத்தரவாதம்... அப்படிச் சில ரெசிப்பீஸ் உங்களுக்காக...

வெள்ளரி புதினா கூல் சூப்

தேவையானவை:

பெரிய வெள்ளரி - ஒன்று

பூண்டு - 2 பல்

புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு

தயிர் அல்லது யோகர்ட் - ஒரு கப்

தண்ணீர் - கால் கப்

எலுமிச்சைப்பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்)

பச்சை மிளகாய் - பாதியளவு

இஞ்சி - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

வெள்ளரி புதினா கூல் சூப்

செய்முறை:

வெள்ளரியின் மேல் தோலைச் சீவி, சிறிதாக நறுக்கி பூண்டு, புதினா, தயிர், பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் எல்லாம் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து அதில் உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். ஃபிரிட்ஜில் வைத்து, சாப்பிடும்போது எடுத்து ஒரு கிண்ணத்திலிட்டு மேலே புதினாவை வைத்து ஓரத்தில் எலுமிச்சைத்துண்டை வைக்கலாம்.

வெள்ளரி கண்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காயைச் சாப்பிடும்போதும், வெள்ளரிக்காய் துண்டுகளைக் கண்களுக்கு வெளியே வைக்கும்போதும் கண்களுக்குப் பயனளிக்கிறது. கண்களில் கருவளையம் வராமல் காக்கிறது.

கீரை கட்லெட்

தேவையானவை:

உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது)

பச்சைப் பட்டாணி - 100 கிராம்

கேரட் - 100 கிராம்

பீன்ஸ் - 100 கிராம்

பாலக்கீரை அல்லது ஏதாவது கீரை - ஒரு கைப்பிடியளவு

கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்

பிரெட் கிரம்ஸ் - 200 கிராம்

அரிசி மாவு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - சிறிதளவு

பச்சை மிளகாய் - ஒன்று

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

சமையல் எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கீரை கட்லெட்

செய்முறை:

காய்கறிகள், கீரை, பச்சைப் பட்டாணியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதில் கரம் மசாலாத்தூள் கலந்துகொள்ளவும். 50 கிராம் பிரெட் கிரம்ஸை இதில் கலக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சிறிதாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் மொத்தமாகச் சேர்த்து, அதில் உப்பு போட்டு உருண்டை பிடித்து, பிறகு கட்லெட்டாகத் தட்டிக்கொள்ளவும்.

தவாவை சூடாக்கி சமையல் எண்ணெயை விட்டுக் கொள்ளவும். ஒரு கட்லெட்டுக்கு கால் டீஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டுக்கொள்ளலாம். மீதமுள்ள பிரெட் கிரம்ஸ், அரிசி மாவு பேஸ்ட் இரண்டையும் தனித்தனியாக வைத்துக்கொள்ளவும். முதலில் பேஸ்ட்டிலும் அடுத்து பிரெட் கிரம்ஸிலும் கட்லெட்டின் இரண்டு பக்கங்களையும் தோய்த்தெடுத்து பிறகு கட்லெட்டை வாணலியில் வைக்கவும். நன்கு பொன்னிறமாகச் சுட்டெடுத்துக் கொண்டபின் சூடாக அவற்றைப் பரிமாறவும்.

இதை ஒரு ஸ்டார்ட்டர் டிஷ்ஷாக எடுத்துக்கொள்ளலாம். கேரட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கீரை ஆகியவை கண்களுக்கு நல்லது.

சீட் ஸ்நாக்ஸ்

தேவையானவை:

சூரியகாந்தி விதைகள் - 5 கிராம்

பூசணி விதைகள் - 5 கிராம்

ஓட்ஸ் - 5 கிராம்

கறுப்பு உப்பு - கால் டீஸ்பூன்

சீட் ஸ்நாக்ஸ்

செய்முறை:

சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஓட்ஸ் மூன்றையும் எடுத்துக்கொண்டு வறுத்து அதில் கறுப்பு உப்பு கலந்து வைத்துக்கொள்ளலாம்.

ஸ்நாக்ஸுக்கு எண்ணெய் அயிட்டங்கள் எடுத்துக் கொள்வது உடலுக்குக் கெடுதல். அதற்குப் பதிலாக இந்த டிஷ்ஷை எடுத்துக்கொள்ளலாம். நாளுக்கு ஒருமுறை சாப்பிடலாம். தினமும் 10 கிராம் முதல் 15 கிராம் வரை சாப்பிட்டால் போதும்.

கேரட் ரைஸ்

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

துருவிய கேரட் - அரை கப்

கடுகு - அரை டீஸ்பூன்

பிரியாணி இலை - ஒன்று

பச்சை மிளகாய் - ஒன்று

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கார்னிஷ் செய்ய:

துருவிய கேரட் - கால் கப்

வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)

சமையல் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி இலை - சிறிதளவு

கேரட் ரைஸ்

செய்முறை:

ஒரு கப் பாஸ்மதி அரிசியுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடுசெய்துகொள்ளவும். அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் பிரியாணி இலையைச் சேர்க்கவும். பிறகு மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். அதன் மேலேயே மிளகாய்களை நறுக்கிப்போட்டுக் கிளறவும். அதோடு துருவிய கேரட் சேர்த்து மேலும் கிளறவும். ஆறிய பிறகு பாஸ்மதி அரிசி சாதத்தைப் போட்டு மெதுவாக மிக்ஸ் செய்யவும்.

கார்னிஷ்:

ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெயைச் சூடுபண்ணிக் கொண்டு, வெங்காயம், கேரட் போட்டுக் கலந்து பாஸ்மதி சாத்துக்கு மேலே கார்னிஷ் செய்து, கொஞ்சம் கொத்தமல்லி இலைகளை அதன்மேல் சேர்க்க வேண்டும்.



source https://www.vikatan.com/food/beauty-plus-healthy-special-week-end-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக