Ad

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

``திமுக-வுக்கு நம்பிக்கை இருந்தால், எதற்காகப் பரிசுப்பொருள்களைக் கொடுக்க வேண்டும்?”- வானதி சீனிவாசன்

மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த 'ஒருகோடி பெண்களுடன் செல்ஃபி’ என்ற நிகழ்ச்சியை பா.ஜ.க மகளிர் அணி நாடு முழுவதும் நடத்துகிறது. இதை மதுரையில் தொடங்கிவைத்த பா.ஜ.க மகளிர் அணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ நிகழ்ச்சியில் பேசும்போது, "பெண்கள் தலைமை ஏற்கும் வகையில் முன்னேற்றம் வேண்டும் என்று பிரதமர் மோடி நினைப்பதால் ஆவாஸ் திட்டத்தில் 2 கோடி மக்களுக்கு வீடு வழங்கும்போது அதில் 85 சதவிகிதம் பெண்கள் பெயரிலேயே கொடுத்திருக்கிறார். இதனால், பெண்களை ஆண்கள் துன்புறுத்துவது குறைந்திருக்கிறது.

வானதி சீனிவாசன்

இன்று எல்லோருக்கும் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. எல்லாத் திட்டங்கள், மானியங்கள் மக்கள் கணக்குக்கு நேரடியாக வருகிறது. வங்கிக்கணக்கு உள்ள 48 கோடி பேரில் 55 சதவிகிதம் பெண்கள். புதிதாகத் தொழில் தொடங்கியிருக்கிற 1.66 கோடி பேரில் 85 சதவிகிதம் பெண்கள்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நம் நாட்டில் அதிகமான பெண் குழந்தைகள் பிறக்கத் தொடங்கியிருக்கிறது. பெண்களிடம் பணம் கொடுத்தால் அது குடும்பத்தைப் பாதுகாக்க உதவும் என்பதால், கொரோனா காலத்தில் பிரதமர் மோடி பெண்களுக்கு பணம் கொடுத்தார். அவர்கள் குடும்பத்தையும் நாட்டையும் முன்னேற்றுவார்கள்" என்று பேசியவர் பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நிகழ்ச்சியில்...

"பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம், இலவச சமையல் எரிவாயு, கழிப்பறை வசதி, ஜன் தன் வங்கிக்கணக்குகள் எனப் பல திட்டங்களால் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் செல்ஃபி எடுக்கும் நிகழ்ச்சியை மகாராஷ்டிராவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கிவைக்கிறார். இதுபோல் நாடு முழுவதும் மகளிர் அணியினர் நடத்துகிறார்கள். மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில் நான் தொடங்கிவைத்திருக்கிறேன். மத்திய அரசின் திட்டங்களால் அதிக அளவுக்குப் பெண் பயனாளிகள்தான் பயன்பெற்றிருக்கின்றனர்" என்றவரிடம்,

"மருத்துவ கல்வியில் மாற்றம் தேவை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளாரே?" என்ற கேள்விக்கு,

"உச்ச நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து, தீர்ப்பாக மாறாது. உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள். அதனால் நீட் தேர்வு தீர்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என்றார்.

வானதி சீனிவாசன்

"நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் ஆதரவைக் குறிவைத்து இது போன்ற நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கிறீர்களா?"

''அதெல்லாம் இல்லை, பிரதமர் மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதை மக்களிடம் கொண்டுசெல்லத்தான் இந்த நிகழ்ச்சி."

"அதேநேரம் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்களே?"

"பெட்ரோலிய பொருள்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாவதால் நம்மால் விலை நிர்ணயம் செய்ய முடியாது. ஆனாலும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்."

செல்ஃபி எடுக்கும் வானதி சீனிவாசன்

"ஈரோடு கிழக்குத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?"

"தி.மு.க-வினர், வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருள்களை வழங்கி அடைத்துவைக்கின்றனர். மக்களைச் சுற்றுலா அழைத்துசெல்லும் புதிய யுக்தியைக் கையாண்டு வருகின்றனர்."

"அ.தி.மு.க-வினர் மீதும் இது போன்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?"

"அதைத்தான் சொல்ல வருகிறேன். மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்ததாக சொல்லும் தி.மு.க-வுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் எதற்காகப் பரிசுப்பொருள்களைக் கொடுக்க வேண்டும்... ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது."

"பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கவிருப்பதாக தி.மு.க அறிவித்திருக்கிறதே?"

"தி.மு.க அரசின்மீது மக்களின் அதிருப்தி் கடுமையாக உள்ளது அதைச் சரிகட்டப் பார்க்கிறது. ஆனால், அது நடக்காது."

"பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கிறதே?"

"இது போன்ற சம்பவங்களில் தமிழக அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் சிறுமி கூட்டுப் பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கிறது"

" மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கப்படுமா... மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ்கள் முடிக்கப்பட்டு விட்டதே?"

"மற்ற திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இது பெரிய அளவிலான திட்டம். அதனால், ஜப்பான் நிதி நிறுவனம் விரைவில் நிதி வழங்கியதும் வேலைகள் தொடங்கும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vanathi-srinivasan-press-meet-at-madurai-after-selfie-program

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக